இன்றைய இறைமொழி
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2026
பொதுக்காலம் 19-ஆம் வாரம்
எசே 2:8-3:4. மத் 18:1-5, 10-14
சிறியவரே பெரியவர்
பெரியவராகவும் பெரியனவற்றைக் கொண்டிருக்கவும் பேராவல் கொண்டிருக்கிற நம்மை சிறியவராக அழைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.
‘சிறியோர்’ என்னும் சொல் மூன்று நிலைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
(அ) ‘சிறியோரே’ விண்ணரசில் பெரியவர்
விண்ணரசில் பெரியவர் யார்? என்னும் கேள்விக்கு விடையாக இயேசு நம்பிக்கையின் தந்தையாம் ஆபிரகாமையோ, திருச்சட்டம் வழங்கிய மோசேயையோ, வலிமையான சிம்சோனையோ, அரசரான தாவீதையோ, ஞானியான சாலமோனையோ விடையாகத் தரவில்லை. மாறாக, ‘சின்னஞ்சிறியவர்களே, குழந்தைகளே, தங்களையே தாழ்த்துபவர்களே’ உயர்ந்தவர்களாக முன்மொழியப்படுகிறார்கள்.
(ஆ) ‘சிறியோரை’ இழிவாகக் கருத வேண்டாம்
சிறியோரை இழிவாகவோ, தாழ்வாகவோ கருத வேண்டாம். அவர்களுக்குரிய மதிப்பையும் மாண்பையும் நாம் வழங்க வேண்டும். இங்கே, ‘சிறியோர்’ என்பது மத்தேயுவின் குழுமத்தையும் குறிக்கிறது. தங்களது சமகாலத்து யூத சமயத்தின்முன் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்ட புதிய சமூகம் ‘சிறிய’ சமூககமாகக் கருதப்பட்டு ஒதுக்கப்பட்டது.
(இ) ‘சிறியோர்’ தவறிவிடக் கூடாது
காணாமற்போன ஆடு எடுத்துக்காட்டைத் தருகிறார் இயேசு. 99 ஆடுகளை விட 1 ஆடு முதன்மையானதாகக் கருதப்படுகிறது. 99 என்ற எண் 1-விட 98 மடங்கு பெரியது என்றாலும், ஒன்றும் தாழ்வானது அல்ல என்று அதைத் தேடிச் செல்கிறார் ஆயர்.
இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுளிடமிருந்து இறைவாக்குப் பணியைப் பெறுகிறார் எசேக்கியேல். ‘இந்த ஏட்டைத் தின்றுவிடு!’ எனக்குத் தனக்குப் பணிக்கப்பட்டவுடன் ஏட்டைத் தின்றுவிடுகிறார் எசேக்கியேல்.
இன்று நாம் அசிசி நகர் புனித கிளாராவை நினைவுகூர்கிறோம். அசிசி நகர் புனித பிரான்சிஸின் வழியில் அனைத்தையும் துறந்து கிறிஸ்துவைப் பற்றிக்கொண்டவர் இவர். இவருடைய திரும்பாத திடம் நமக்குப் பாடமாக இருக்கிறது.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு யெஸ்னி ப்ரேய்ஸ் முயற்சி

Leave a comment