இன்றைய இறைமொழி. திங்கள், 22 ஜூன் 2026. தெளிவாய்க் கண் தெரியும்!

இன்றைய இறைமொழி
திங்கள், 22 ஜூன் 2026
பொதுக்காலம் 12-ஆம் வாரம்
2 அர 17:5-8, 13-15, 18. மத் 7:1-5

தெளிவாய்க் கண் தெரியும்!

இயேசுவின் மலைப்பொழிவு தனிப்பட்ட நபருடைய வாழ்வு மேம்பாட்டுக்கானதாகவும் குழும உறவு மேம்பாட்டுக்கானதாகவும் இருக்கிறது. ஒருவர் மற்றவரைத் தீர்ப்பிடுதல், மற்றும் குறைகளைக் களைதல் ஆகியவை பற்றிப் பேசுகிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

நம் குழும வாழ்வில் ஒருவர் மற்றவரைப் பார்க்கும்போது பழகும்போது நம்மை அறியாமலேயே நாம் மற்றவர்களைத் திறனாய்வு செய்கிறோம். அத்திறனாய்வின் வழியாக நாம் மற்றவர்களைத் தீர்ப்பிடுகிறோம். இன்னொரு பக்கம் நாமே நம்மில் குறைகளை வைத்துக்கொண்டு மற்றவர்களின் குறைகளைக் களைய முயற்சி செய்கிறோம்.

மற்றவர்களை நோக்கி நம் கண்களைத் திருப்புமுன் நம்மை நோக்கியே அவற்றைத் திருப்ப அழைக்கிறார் இயேசு. மற்றவர்களைத் தீர்ப்பிடும் நோக்கிலும் மற்றவர்களைவிட நம்மை நியாயப்படுத்தும் நோக்கிலும் நாம் மற்றவர்களைப் பார்க்கும்போது நம் பார்வை குறைவாகவே இருக்கிறது.

நம் தன்னாய்வு நம் கண்களின் பார்வையைத் தெளிவாக்குகிறது.

இன்றைய முதல் வாசகம், அசீரிய அடிமைத்தன நிகழ்வை எடுத்துரைக்கிறது. ஒருங்கிணைந்த இஸ்ரயேல் அரசு சாலமோன் அரசருக்குப் பின்னர், வடக்கே இஸ்ரயேல், தெற்கே யூதா என்று இரண்டாக உடைகிறது. வடக்கு இஸ்ரயேலுக்கு எதிராகப் போர் தொடுக்கிற அசீரியா (சிரியா) அதைத் தன் கட்டுக்குள் கொண்டு வருகிறது (கிமு 723-722). ஆண்டவராகிய கடவுள் தங்களுக்கு வாக்களித்துக் கொடையாகக் கொடுத்த நாடு அந்நியர்களின் கைகளுக்குச் செல்கிறது.

இதற்கான காரணம் என்று பார்க்கும்போது, ‘அவர்கள் வீணானவற்றைப் பின்பற்றி வீணர் ஆயினர்’ என்று பதிவு செய்கிறார் ஆசிரியர். ஆண்டவரைத் தேர்ந்துகொள்வதற்குப் பதிலாக பாகால் தெய்வங்களை ஆட்சியாளர்களும் மக்களும் தேர்ந்துகொண்டார்கள். கண்ணுக்கு மறைவான கடவுளைத் தேர்ந்துகொள்வதற்குப் பதிலாக கண்ணுக்குத் தெரிந்த சிலைகளையும் அவை தந்த ஈர்ப்பையும் தேர்ந்துகொண்டார்கள்.

ஒருவர் மற்றவர் உறவிலும் இறை உறவிலும் நம் கண்கள் தெளிவாய்ப் பார்க்க கடவுள் நமக்கு அருள்கூர்வாராக!

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment