இன்றைய இறைமொழி
ஞாயிறு, 21 ஜூன் 2026
பொதுக்காலம் 12-ஆம் ஞாயிறு
எரே 20:10-13. திபா 69. உரோ 5:12-15. மத் 10:26-33
அச்சம் அகல ஆண்டவரைப் பற்றுக!
சிந்தனைச் சூழல்
‘பயம்’ அல்லது ‘அச்சம்’ என்பது நாம் அனைவரும் எதிர்கொள்ளும் ஓர் உணர்வு அல்லது அனுபவம். உணர்வுகள் எல்லாமே எதிர்மறையானவையாகவும் நேர்முகமாகவும் இருக்கின்றன. தேர்வின் முடிவுகள் பற்றிய அச்சம் மாணவர்களை அமர்ந்து கல்வி கற்கத் தூண்டுகிறது. கடன் பற்றிய அச்சம் கடின உழைப்புக்குத் தூண்டுகிறது. சாலையில் செல்லும்போது வாகனங்கள் நம்மேல் மோதிவிடும் என்னும் அச்சம் நம்மில் கவனத்தை உருவாக்குகிறது. இப்படியாக அச்சம் ஒரு பாதுகாப்பு வளையமாக நமக்கு மாறுகிறது. அச்சம் எதிர்மறையாகவும் இருக்கிறது. எதிர்காலம் பற்றிய அச்சம் கவலைகளை உருவாக்கி நம் நம்பிக்கையைக் குலைக்கிறது. மற்றவர்களின் ஒப்புதல் பற்றிய பயம், தனிமை, நோய், இறப்பு பற்றிய பயம் என்று பல நேரங்களில் எதிர்மறையாக நாம் பாதிக்கப்படுகிறோம்.
நாம் கடவுளைத் தேர்ந்துகொள்ளும்போது மற்றவர்கள் நம்மை நிராகரிக்கிறார்கள், தனிமைப்படுத்துகிறார்கள், பழிசுமத்துகிறார்கள், சில நேரங்களில் நம்மை அழிக்க நினைக்கிறார்கள். கடவுளைத் தேர்ந்துகொள்தல் இங்கே நமக்கு அச்சத்தைத் தருகிறது. கடவுளையும், கடவுள்சார்ந்த மதிப்பீடுகளையும், தனிப்பட்ட வாழ்வியல் விதிமுறைகளையும் ஒழுக்கத்தையும் நாம் கொண்டிருக்கும்போது மற்றவர்களிடமிருந்து நாம் தனிமைப்படுத்தப்படுகிறோம்.
இதில் உள்ள முரண் என்னவென்றால், ஆண்டவரால் வரக்கூடிய இத்தகையை அச்சத்தை ஆண்டவரைப் பற்றுவதன் வழியாகவே நாம் களைய முடியும். இதுதான் இன்றைய வாசகங்கள் நமக்குத் தருகிற பாடம்.
வார்த்தை விளக்கம்
முதல் வாசகம்
இன்றைய முதல் வாசகம், எரேமியாவின் ‘உள்ளக் கிடக்கைகள்’ என்னும் பகுதியிலிருந்து (அலகு 11-20) எடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் எரேமியா தன் உள்ளப் போராட்டங்களையும், அச்சம், பயம், மற்றும் கடவுள்மேல் உள்ள பற்றுறுதியையும் அறிக்கையிடுகிறார்.
யூதா நாட்டின் எருசலேம் நகரிலிருந்து வருகிற இறைவாக்கினர் எரேமியா தன் சொந்த ஊரிலேயே இறைவாக்கு உரைக்கிறார். அவருடைய செய்தி கடவுளிடமிருந்து வருகிறது என்று காண இயலாத அவருடைய சொந்த ஊரார் குறிப்பாக, குருக்களும் ஆட்சியாளர்களும், அவரைத் துன்புறுத்துகிறார்கள், சிறையில் அடைக்கிறார்கள், தனிமைப்படுத்துகிறார்கள். உண்மைச் செய்தியை அல்ல, மாறாக, தங்களுக்கு உகந்த செய்தியை மக்கள் விரும்பினார்கள்.
இவ்வாறாக, இழிவு, நிராகரிப்பு, துன்பம் ஆகியவற்றை அனுபவிக்கிற எரேமியா கடவுளிடம் அருள்புலம்பல் செய்கிறார்: ‘ஆண்டவரே, நீரோ என்னை ஏமாற்றிவிட்டீர். நானும் ஏமாந்துபோனேன்!’
தன் ஊரார் ‘பழி சுமத்தங்கள்! பழி சுமத்துங்கள்!’ என்று தன்னை விரட்டி வருவதாகவும், அவருடைய நண்பர்கள்கூட அவருடைய வீழ்ச்சிக்காகக் காத்திருப்பதாகவும் உணர்கிறார் எரேமியா. இந்த இடத்தில்தான் அவருக்குக் கடவுள் அனுபவம் கிடைக்கிறது. வலி, துன்பம், தனிமை ஆகியவற்றை எதிர்கொள்கிற எரேமியா, கடவுளையும் வலிமைமிகுந்த வீரராக எதிர்கொள்கிறார்: ‘ஆண்டவர் வலிமை மிகுந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார். என்னைத் துன்புறுத்துவோர் இடறி விழுவர்.’ அவருடைய புலம்பல் புகழ்ச்சியாக மாறுகிறது: ‘ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள். அவரைப் புகழ்ந்தேத்துங்கள்!’
பயமற்ற இறைவாக்கினராக அல்ல, மாறாக, பயத்தின் நடுவிலும் கடவுள்மேல் பற்றுறதி கொள்ளுகிற இறைவாக்கினராக நம் முன் நிற்கிறார் எரேமியா.
பதிலுரைப்பாடல்
இன்றைய பதிலுரைப்பாடல் (திபா 69) தாவீதுக்கு உரியது என வழங்கப்பட்டுள்ளது. கடவுளுக்குப் பிரமாணிக்கமாக இருக்கும் நேர்மையாளர் அனுபவிக்கும் துன்பத்தை, துன்புறுகிறவரின் இறைவேண்டலை இத்திருப்பாடல் கொண்டிருக்கிறது. துன்பம் பற்றிய புகாராக இத்திருப்பாடல் தோன்றினாலும், இறுதியில், புகழ்ச்சியும் எதிர்நோக்கும் நன்றியும் என்று முடிகிறது.
‘உம் பொருட்டே இழிவை ஏற்றேன்,”என் சகோதரருக்கு வேற்று மனிதர் ஆனேன். என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன்,’ ‘உம் இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது’ என்று தன் துன்பத்தைக் கடவுளின் முன் எடுத்துரைக்கிற ஆசிரியர், தொடர்ந்து, ‘உம் பேரன்பு நன்மை மிக்கது’ என்று கடவுளின் பேரன்பை அறிக்கையிடுகிறார். இறுதியில், ‘எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவர்கள் … உள்ளம் ஊக்கம் அடைவதாக’ என்று தனக்கும் மற்றவர்களுக்கும் துணிவை ஊட்டுகிறார்.
இத்திருப்பாடல் புதிய ஏற்பாட்டிலும் – யோவான் நற்செய்தியில் – மேற்கோள் காட்டப்படுகிறது: எருசலேம் கோவில் தூய்மைப்படுத்தப்படும் நிகழ்வில் (அலகு 2), ‘உம் இல்லத்தின்மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிட்டது’ என்று சீடர்கள் நினைவுகூர்கிறார்கள். இயேசு வெறுக்கப்படுதல் (யோவா 15:25), அவருக்கு புளித்த காடி கொடுக்கப்படுதல் (19:28) நமக்கு இத்திருப்பாடலை நினைவூட்டுகிறது.
துன்பம் அனுபவிக்கிற திருப்பாடல் ஆசிரியர் இறுதியில் ஊக்கம் அனுபவிக்கிறார். இந்த மாற்றத்துக்குக் காரணம் அவர் கடவுளிடம் சரணாகதி அடைந்ததே.
இரண்டாம் வாசகம்
இரண்டாம் வாசகத்தில், ‘நம்பிக்கையால் ஏற்புடையவராதல்’ (உரோ 1-4) என்னும் கருத்துருவை எடுத்தாண்ட பவுல், தொடர்ந்து, ‘கிறிஸ்துவில் புதுவாழ்வும் மீட்பும்’ (உரோ 5-8) என்னும் கருத்துருக்குள் நுழைகிறார். முதல் கருத்துருவைக் கையாள்வதற்கு ‘ஆபிரகாமை’ உருவகமாக (டிப்போஸ்) பயன்படுத்திய பவுல், இப்போது ‘ஆதாமை’ இங்கே உருவகமாகப் பயன்படுத்துகிறார். கிறிஸ்துவை ஆதாமோடு ஒப்பிட்டுக் காட்டி அவரை ஆதாமிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறார்.
ஆதாம் வழியாக பாவம் உலகிற்கு வந்தது. கிறிஸ்து வழியாக அருள் உலகிற்கு வந்தது. ஆதாமின் கீழ்ப்படியாமை பாவத்திற்குக் காரணமாக அமைந்தது. கிறிஸ்துவின் கீழ்ப்படிதல் பாவத்தை அகற்றியது. நம் குற்றத்துக்கான தீர்ப்பு இறப்பு, கிறிஸ்துவில் ஏற்புடையவராதலால் நாம் பெறுவது வாழ்வு. ஆதாமின் பாவம் அனைவரையும் பாதிப்பது போல, கிறிஸ்துவின் நற்செயலும் அனைவரையும் காப்பாற்றுகிறது.
‘ஒரு மனிதரால் பாவம் வந்தது’ என்னும் பவுலின் வாக்கியம் நமக்கு தொநூ 3-ஐ நினைவுக்குக் கொண்டுவருகிறது. ஆதாமின் தனிப்பட்ட பாவத்தை அல்ல, மாறாக, ஒட்டுமொத்த பாவ இயல்பையே இங்கே பவுல் குறிப்பிடுகிறார்.
விலக்கப்பட்ட கனியை உட்கொண்டவுடன் நம் முதற்பெற்றோரை அச்சம் பற்றிக்கொள்கிறது. அந்த அச்சத்தைத் தம் அருளால் நீக்குகிறார் கிறிஸ்து.
நற்செய்தி வாசகம்
இன்றைய நற்செய்தி வாசகம், மத்தேயு நற்செய்தியின் இரண்டாம் பேருரையான மறைத்தூதுப் பொழிவு அல்லது திருத்தூதுப் பொழிவு என்னும் பகுதியிலிருந்து தரப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறு நாம் கேட்ட வாசகத்தில், ‘ஆயனில்லா ஆடுகள் போல மக்கள் இருப்பதைக் கண்டு’ அவர்கள்மேல் பரிவு கொண்டு அவர்கள் நடுவே ஆயர்களை (திருத்தூதர்களை) அனுப்புகிறார் இயேசு.
அப்படி அனுப்பப்பட்டவர்கள் துன்பம் அடையும்போது அவர்கள் கொண்டிருக்க வேண்டிய அச்சமற்ற மனநிலையை இயேசு முன்மொழிகிறார்.
மத்தேயு நற்செய்தியாளரின் குழுமப் பிரச்சனையும் – நம்பிக்கையில் தளர்ச்சி, நம்பிக்கையைக் கைவிடுதல், கிறிஸ்துவை மறுதலித்தல் – இங்கே மறைமுகமாகக் காணக்கிடக்கிறது.
‘அஞ்சாதீர்கள்!’ என்னும் சொல் இன்றைய வாசகத்தில் மூன்று முறை வருகிறது: ‘உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சாதீர்கள்!’ ‘ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சாதீர்கள்!’ ‘சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே, அஞ்சாதீர்கள்!’
மேலும், ‘ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்!’ என்று நாம் கொள்ள வேண்டிய இறைஅச்சத்தையும் இங்கே இயேசு மொழிகிறார்.
மனிதர்களின் வரையறையை இங்கே காண்கிறோம். அவர்களால் எல்லாம் செய்ய இயலாதது. உடலைக் கொல்ல முடிகிற அவர்களால், ஆன்மாவைக் கொல்ல இயலாது.
மேலும், கடவுளின் பராமரிப்பையும் பாதுகாப்பையும் இரண்டு சொல்லோவியங்கள் வழியாக எடுத்துரைக்கிறார் இயேசு: ‘சிட்டுக்குருவிகள்,’ ‘தலைமுடி.’ ‘காசுக்கு இரண்டு குருவிகள்’ என்பது அன்றைய சமூக வழக்கம். ஏனெனில், ஒரு குருவி பறந்துபோனாலும் ஒருவர் கொடுத்த காசுக்கு இன்னொரு குருவி கையில் இருக்கும். பறந்துபோன குருவியின் பசியாற்றுகிறவர் கடவுள். நம் தலைமுடிகளை எண்ணும் அளவுக்கு – இலக்கியக்கூறு – நம் தலைமுடிகளை எண்ண இயலாது என்பது ரபிக்களின் போதனை – கடவுள் நம்மை அறிந்தவராக இருக்கிறார்.
சீடத்துவத்தின் விலை – துன்பம், கொலை, அச்சம் விடுப்பதன் கடவுளைப் பற்றிக்கொள்வதன் அவசியம் ஆகியவற்றை நாம் இங்கே கற்கிறோம்.
வாழ்வியல் விளக்கம்
(அ) கடவுளைப் பின்பற்றுவதற்கான விலை. இயேசுவை அறிதலும் பின்பற்றுதலும், இறையாட்சியின் விழுமியங்களைப் போற்றி வாழ்வதும் ஒரு விலையைக் கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, கையூட்டு மலிந்து நிற்கும் அலுவலகத்தில் கையூட்டு மறுக்கிற நேர்மையாளர் தனித்துவிடப்படுகிறார். ஒரு குழுவில் முடிவு எடுக்கப்படும்போது, அந்த முடிவின் அநீதி கண்டு அதை எதிர்க்கிறவர் நிராகரிக்கப்படுகிறார், பழிசுமத்தப்படுகிறார். நாம் எடுக்கிற ஒவ்வொரு தெரிவும் அதற்கான முடிவைக் கொண்டிருக்கிறது.
(ஆ) அச்சம் அகற்றுதல். அச்சம் என்பது ஒரு கூழாங்கல்லை மலைபோல மிகைப்படுத்திப் பார்ப்பதாகும். பல நேரங்களில் நாம் அச்சப்படும் அனைத்துமே ஒன்றுமில்லை என்று ஆகிவிடுகிறது. அச்சம் என்பது மற்றவர்கள் நம்மேல் போட்டுள்ள அழுக்கு என்று எடுத்துக்கொள்ளும்போது அச்சம் களைவதற்கான ஆற்றல் பிறக்கிறது. இன்று நாம் கொண்டிருக்கிற பயங்களைப் பட்டியலிடுவோம். அவற்றைக் களைவதற்கான முயற்சிகளையும் ஆராய்வோம். நம்பிக்கை பயத்தை விரட்டுகிறது.
(இ) ஆண்டவர் அனுபவம் பெறுதல். தங்களுடைய துன்பத்தின் நடுவே ஆண்டவரைக் காண்கிறார்கள் எரேமியாவும் தாவீதும். உடலைக் கொல்பவர்கள் நடுவில் ஆன்மாவைக் கொல்பவரைக் காண்கிறார்கள் திருத்தூதர்கள். பாவமும் இறப்பும் இருக்கிற உலகில் கிறிஸ்து கொண்டுவந்த அருளையும் வாழ்வையும் நமக்கு அடையாளம் காட்டுகிறார் பவுல்.
நம் அச்சங்கள் அகல ஆண்டவரையே பற்றிக்கொள்வோம். பின்வரும் வாக்கியங்களை மனத்தில் பதிய வைப்போம்:
‘ஆண்டவர் என்னோடு இருக்கிறார்!’ – எரேமியா
‘ஆண்டவர் எனக்குச் செவிமடுக்கிறார்!’ – தாவீது
‘ஆண்டவரின் அருள் பெரியது!’ – பவுல்
‘ஆண்டவர் அக்கறை காட்டுகிறார்!’ – இயேசு
இன்றைய திருப்பலியில் நாம் வாசிக்கும் சபை மன்றாட்டு நமக்கு இன்னும் நம்பிக்கை ஊட்டுகிறது:
‘ஆண்டவரே, உம்மையே நம்பி, உம்முடைய அன்பில் நிலைத்திருப்பவர்களை நீர் என்றும் கைவிடுவதில்லை. இவ்வாறு நாங்கள் உமது திருப்பெயரை எக்காலத்திலும் போற்றவும் உம்மை அன்பு செய்யவும் எங்களுக்கு அருள்வீராக!’
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment