இன்றைய இறைமொழி
சனி, 20 ஜூன் 2026
பொதுக்காலம் 11-ஆம் வாரம்
2 குறி 24:17-25. மத் 6:24-34
கடவுளை நாடுங்கள்
இன்றைய நற்செய்தி வாசகம் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், ‘நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் – இரு தலைவர்களுக்கு – பணிவிடை செய்ய முடியாது’ என்று அறிவுறுத்துகிறார் இயேசு. இரண்டாம் பகுதியில், ‘நாளையைப் பற்றிய கவலையை விடுங்கள்!’ என்கிறார். இந்த இரண்டு பகுதிகளும் பொருந்திச் செல்கின்றன. ஏனெனில், செல்வம் பற்றிய நினைவு நமக்குக் கவலையை வருவிக்கிறது. கடவுள் பற்றிய நினைவு நம் கவலையைப் போக்குகிறது.
நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் ஒரு சோதனை என்னவென்றால் அனைத்தையும் உறுதியாக்க நினைப்பது. கணிதவியல் அல்லது இயற்பியல் கோட்பாடு போல வாழ்க்கை இருக்க வேண்டும் என நினைக்கிறோம். செல்வம் கொடுக்கிற பெரிய சோதனையும் அதுதான். செல்வம் நமக்குத் தன்நிறைவையும் தற்சார்பையும் கொடுப்பதால், அதை வைத்து அனைத்தையும் உறுதி செய்துகொள்ள நினைக்கிறோம். ஆனால், செல்வம் செய்ய இயலாதவையும் நிறைய இருக்கின்றன. ‘நம் உயரத்தைக் கூட்ட இயலாது, வாழ்நாளின் ஒரு மணிநேரத்தைக் கூட்ட இயலாது.’
இறுதியில், ‘விண்ணகத் தந்தையின் ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுமாறு’ அழைக்கிற இயேசு, ‘அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்’ என்கிறார்.
செல்வம் தரக்கூடிய கவலை பற்றியும், கடவுளுக்கும் நமக்கும் இடையே அது ஏற்படுத்தும் பிளவு குறித்தும் ஞானநூல்களும் எச்சரிக்கின்றன.
கடவுளைப் பற்றிக்கொள்வதால் கவலை போகுமா?
செல்வம் இருந்தால்தானே கடவுளைத் தேடுவதற்கான நேரமும் ஆற்றலும் நமக்குக் கிடைக்கும்!
என்று கேள்விகளும் ஐயங்களும் எழலாம்.
கடவுளைப் பற்றிக்கொள்வது என்றால் என்ன?
நம்பிக்கைப் பார்வை கொண்டிருப்பது. வாழ்வின் உறுதியற்ற நிலையையும் அது கொண்டு வரும் ஆச்சர்யங்களையும் கொண்டாடுவது. இன்றைய பொழுதை இனிதாகவும் முழுமையாகவும் வாழ்வது.
முதல் வாசகத்தில், கடவுளின் ஆவியைக் கொண்டு இறைவாக்குரைத்த குரு சக்கரியா கொல்லப்படுகிறார். நல்லது செய்தால் நல்லதே நடக்கும் என்பதே உறுதியில்லாமல் இருக்கும்போது, அனைத்தையும் உறுதியாக்கிக்கொள்ள நாம் துடிப்பதேன்?
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment