இன்றைய இறைமொழி
வெள்ளி, 19 ஜூன் 2026
பொதுக்காலம் 11-ஆம் வாரம்
2 அர 11:1-4, 9-18, 20. மத் 6:19-23
செல்வமும் உள்ளமும்
நம் வாழ்வின் இருத்தலையும் இயக்கத்தையும் கவனித்தால் நமக்கு ஒன்று தெரியும். நாம் எதன்மேல் நம் கவனத்தைக் குவிக்கிறோமோ அது வளர்கிறது. நம் கவனம் நம் தெரிவைப் பொருத்தே அமைகிறது. நாம் எதை விரும்புகிறோமோ அதையே தெரிவுசெய்கிறோம். அதுவே நம் வாழ்க்கையின் போக்கை மாற்றுகிறது.
‘மண்ணுலகில் செல்வம் சேமித்து வைக்க வேண்டாம்’ என்று அறிவுறுத்துகிற இயேசு, தொடர்ந்து, ‘உங்கள் செல்வம் எங்கு இருக்கிறதோ, அங்கே உள்ளம் இருக்கும்’ என்கிறார். இங்கே செல்வத்தின்மேல் உள்ளத்தை நிறுத்தச் சொல்லவில்லை இயேசு. மாறாக, உண்மைச் செல்வமான இறையாட்சியைக் கண்டு அதன்மேல் உள்ளத்தை இருத்த நம்மை அழைக்கிறார்.
மேலும், ‘கண்தான் உடலுக்கு விளக்கு’ என்கிறார். கண்கள் வழியாகவே நம் பெரும்பாலான தகவல்களை உள்ளே இழுத்து நம் மூளையில் நினைவுகளாகச் சேமித்து வைக்கிறோம். நாம் தேர்வு செய்து அங்கே குவிப்பவை நம் சிந்தனையை ஒளிரச் செய்கின்றன அல்லது இருளச் செய்கின்றன. எனவே, நம் கண்கள் வழியாக நாம் பெறும் தகவல்கள் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மொத்தத்தில், நம் கவனக் குவியம் நன்றாக இருக்க வேண்டும் என்கிறது நற்செய்தி வாசகம்.
கவனக் குவியத்துக்கு மாறாக இன்று இருப்பவை கவனச் சிதறல்கள். நாம் ஒரே நேரத்தில் பலவற்றின்மேல் கவனத்தைச் செலுத்துகிறோம். இப்படிப்பட்ட பிளவுண்ட நிலை நம் மன அமைதியைக் குலைக்கிறது, கலக்கத்தையும் பதற்றத்தையும் உருவாக்குகிறது.
இன்றைய முதல் வாசகத்தில், யோவாசு அரசன் ஆட்சிப்பொறுப்பு ஏற்கிறார். இவருடைய ஆட்சியின்போது யூதா நாடு சமய எழுச்சி பெற்றது. கவனச் சிதறல்களாக இருந்த பாகால் கடவுளர்களின் சிலைகள் அழிக்கப்பட்டு, ஆண்டவராகிய கடவுள்மேல் மக்களின் கவனம் குவிகிறது.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment