இன்றைய இறைமொழி. திங்கள், 8 ஜூன் 2026. பார்வை மாற்றமும் பாதை மாற்றமும்

இன்றைய இறைமொழி
திங்கள், 8 ஜூன் 2026
பொதுக்காலம் 10-ஆம் வாரம்
1 அர 17:1-6. மத் 5:1-12

பார்வை மாற்றமும் பாதை மாற்றமும்

‘நாம் எப்படி இருக்கிறோம் என்பதில் அல்ல, நாம் எப்படி மாறுகிறோம் என்பதில்தான் நம் மதிப்பு இருக்கிறது.’ மாறுவதில்தான் வளர்ச்சி இருக்கிறது. மாறுவது நமக்கு வலியைத் தருகிறது. எடுத்துக்காட்டாக, நாம் வாங்குகிற ஒரு லிட்டர் பால் ரூபாய் 60 என்றால், அதே ஒரு லிட்டரை நாம் தயிராகவோ, நெய்யாகவோ வாங்கும்போது அதன் மதிப்பு உயர்கிறது. ஆனால், இந்த மதிப்பு உயர்வு உடனே வந்துவிடாது. பொறுமையும் தொடர் முயற்சியும் வேண்டும். பால் தன்னையே ‘மாறுகிற வலிக்கு’ உட்படுத்த வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் மலைப்பொழிவு பகுதி தொடங்குகிறது. பேறுபெற்றார் யார்? என்று மொழிகிறார் இயேசு. இயேசுவின் சமகாலத்தில் பணம் படைத்தவர்களும், பலம் கொண்டவர்களும் பேறுபெற்றவர்கள் என அழைக்கப்பட்டார்கள். இயேசு அவர்களின் பார்வையை மாற்றுகிறார்.

‘ஏழையர், துயருறுவோர், கனிவுடையோர், நீதி நிலைநாட்டுவோர், இரக்கமுடையோர், தூய்மையான உள்ளத்தோர், அமைதியை ஏற்படுத்துவோர், நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர்’ ஆகியவர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பதல்ல, அவர்கள் எப்படி மாறுகிறார்கள் என்பதே இயேசுவின் போதனையாக இருக்கிறது.

மற்றவர்கள் எல்லாம் இவர்களைப் பார்த்து இவர்களுடைய தற்காலிக நிலையை எண்ணி வருந்தும்போது, இவர்கள் எதிர்காலத்தில் எப்படி மாறக்கூடியவர்கள் என்று கண்டு அவர்களுடைய உள்ளார்ந்த ஆற்றலைத் தூண்டி விடுகிறார்.
கடவுளுடைய நினைவில் நம் கடந்த காலம் அல்ல, நம்முடைய எதிர்காலமே இருக்கிறது.

நாம் எப்படி மாற முடியும் என்பதை மனத்தில் இருத்தி வாழ நம்மை அழைக்கிறது நற்செய்தி வாசகம்.

முதல் வாசகத்தில், சிலை வழிபாடு நிறைந்து நின்ற வடக்கு இஸ்ரயேல் நாட்டை ஆண்டவராகிய கடவுள் பஞ்சத்தால் வருத்துகிறார். தம் இறைவாக்கினர் எலியாவைக் காக்கும் பொருட்டு அவருடைய பாதையை மாற்றுகிறார். காகங்கள் வழி உணவும் ஓடையின் வழியாகத் தண்ணீரும் வழங்குகிறார்.

இந்நிகழ்வு வழியாக அவருக்கு பொறுமையைக் கற்பிக்கிறார் ஆண்டவர்.

நம் பார்வை மாற்றமும் பாதை மாற்றமும் நம் வாழ்வின் மதிப்பைக் கூட்டுகின்றன. கடவுளுடைய பார்வையில் நாம் எவ்வளவு மதிப்புக்குரியவர்களோ, அதை மட்டுமே மனத்தில் இருத்தி நம் பார்வையையும் பாதையையும் மாற்றிக்கொள்ள முன்வருவோம்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment