இன்றைய இறைமொழி
புதன், 6 மே 2026
பாஸ்கா ஐந்தாம் வாரம்
திப 15:1-6. யோவா 15:1-8
தேவையற்ற சுமைகள்!
நம் இலக்குத் தெளிவாக இருந்தாலும், நாம் சரியான பாதையில் இருந்தாலும், நம் உடலிலும் உள்ளத்திலும் சுமை இருந்தது என்றால் நாம் நம் இலக்கை எளிதில் அடைய இயலாது. அவசியமானவை தவிர வேறு எதையும் நாம் சுமக்கக் கூடாது.
பிரச்சினைகளை நாம் இரண்டு வகைகளில் கையாளுகிறோம்: (அ) ஒன்று தயிர் போல. அதை உடனடியாகக் கவனித்தல். அதை அப்படியே விட்டுவைத்தால் அதன் புளிப்பு கூடிக்கொண்டே போகும். (ஆ) சூடான பாத்திரத்தைக் கழுவுவது போல. உடனே தொடாமல் கொஞ்சம் ஆறப்போட்டுக் கையில் எடுப்பது.
இன்றைய முதல் வாசகத்தில் நம்பிக்கையாளர்கள் ஒரு புதிய பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். புதிய நம்பிக்கையை எற்றுக்கொண்ட புறவினத்தார், யூதர்கள் போல விருத்தசேதனம் செய்துகொள்ளவேண்டும். அதாவது, ஒருவர் யூதராக மாறினால்தான் கிறிஸ்தவராக மாற முடியும் என்ற ஒரு நிபந்தனை விதிக்கப்படுகிறது.
இதைச் சொன்னவர்களுக்கும் பவுலும் பர்னபாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவாகிறது. ஏனெனில், பவுலுக்கும் பர்னபாவுக்கும் இதில் உடன்பாடு இல்லை. இவர்கள் இருவருமே தாராள உள்ளத்தினர். தங்களுடைய பார்வையை விரித்துப் பார்ப்பவர்கள். ஆக, உடலின் ஓர் உறுப்புச் சிதைவு இவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.
வாழ்வில் நாம் இப்படி இருந்தால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். ‘இதுல என்ன இருக்கு!’ என்று கேட்கின்றனர் பவுலும் பர்னபாவும்.
மேலும், இந்த இடத்தில் பவுல் மற்றும் பர்னபாவின் பரந்த சிந்தனை நமக்கு வியப்பு தருகிறது. மேலாண்மையியலில், ‘பெட்டிக்கு வெளியே சிந்திப்பது’ (‘) என்னும் ஒரு சொல்லாடல் உண்டு. அதாவது, புதிய கருத்தைச் சொல்வது அல்லது பரந்த மனப்பான்மை கொண்டிருப்பது. பவுல் மற்றும் பர்னபா மட்டும் இப்படிப்பட்ட பரந்த மனப்பான்மை கொண்டிராவிடில், நாமும் இன்று விருத்தசேதனம் செய்த பின்னரே கிறிஸ்தவர்களாக மாறியிருக்க முடியும். அல்லது முதலில் யூதர்களாக மாறி, பின்னர்தான் கிறிஸ்தவர்களாக மாறியிருக்க முடியும்.
இன்னொன்றையும் இங்கே கவனிக்க வேண்டும். பிரச்சினையை நேருக்கு நேரான சொற்போர் அல்லது விவாதமாக முன்னெடுக்காமல் பிரச்சினைக்கான முழுத் தீர்வை அவர்கள் காண விரும்புகின்றனர். பல நேரங்களில் நாம் நேருக்கு நேர் சொற்போர் செய்து நேரத்தையும் ஆற்றலையும் வீணாக்குகின்றோம். இன்று சமூக வலைத்தளங்களில் இப்படிப்பட்ட செயல் மிகவும் அதிகமாக உள்ளது.
குழப்பம் நீடிக்கவே உடனடியாக அவர்கள் எருசலேம் பயணம் செய்து இப்பிரச்சினையை திருத்தூதர்கள் மற்றும் மூப்பர்களிடம் கொண்டு செல்கின்றனர். அதாவது, தங்கள் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு இப்பிரச்சினையைத் தீர்க்க நேரம் எடுத்து, சிரமம் எடுத்துப் புறப்பட்டுச் செல்கிறார்கள். ஆக, தாங்களாகவே தீர்த்தாலன்றி பிரச்சினை தீராது என்பது ஒரு பக்கம். அதே வேளையில், தாங்கள் விரும்பும் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதால் பிரச்சினையை உடடினயாக தங்களைவிட மேலிடத்திற்குக் கொண்டு செல்கிறார்கள்.
இங்கே இவர்களுடைய பெருந்தன்மையையும் கவனிக்க வேண்டும். ‘நான்தான் நற்செய்தி அறிவித்தேன். நான்தான் புதிய நம்பிக்கையை ஊட்டினேன். எனவே நான்தான் இவர்களின் தலைவர்’ என்று உரிமை கொண்டாடாமல், தங்கள் பணியிலிருக்கும் பலனிலிருந்து ஒதுங்கி நிற்கின்றனர். நற்செய்தி அறிவித்தலில் உள்ள கடமையைச் செய்தார்களே தவிர, அதில் உள்ள உரிமையைக் கொண்டாடவில்லை.
எருசலேம் சென்ற பர்னபா மற்றும் பவுலை அனைத்துச் சகோதரர்களும் வரவேற்கின்றனர். தொடக்கத் திருஅவையில் சகோதர உறவு ஒன்றே மேலோங்கி நின்றது. அங்கு மொழி, இனம் என எந்தப் பாகுபாடும் இல்லை.
திருத்தூதர்கள் ஏற்கெனவே கிரேக்கக் கைம்பெண்கள் மேசையில் கவனிக்கப்படவில்லை என்பதை சரி செய்தவர்கள். ஒன்றைச் செய்ய செய்ய நமக்கு அது எளிதாகிறது. அதுபோல, பிரச்சினைகளைத் தீர்க்க தீர்க்க புதிய பிரச்சினைகளை எதிர்கொள்வது அவர்களுக்கு எளிதாக அமைகிறது.
பிரச்சினை உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
தங்கள் நம்பிக்கையாளர்கள் தேவையற்ற பிரச்சினைகள் என்னும் சுமைகளைச் சுமக்கக் கூடாது என்பதற்காக, சுமைகளைச் சுமக்க திருத்தூதர்கள் முன்வருகிறார்கள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 15:1-8), திராட்சைக் கொடி – கிளை உருவகம் தருகிறார் இயேசு. தன்மேல் ஒட்டிக்கொண்டிருக்கும் கிளையை சுமையாகப் பார்ப்பதில்லை கொடி.
ஆக, இன்று நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நாம் எப்படி கையாளுகிறோம்?
பிரச்சினை மற்றவர்களுக்கு என்று நினைக்கும்போது அதை ஏற்கும் பொறுப்புணர்வு நமக்கு இருக்கிறதா?
பொறுப்புணர்வு கூடக் கூட நமக்கு ஆற்றல் கூடும். நமக்கு ஆற்றல் கூடக் கூட பிரச்சினைகள் எளிதாகத் தீர்க்கப் பெறும்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment