இன்றைய இறைமொழி. திங்கள், 27 ஏப்ரல் 2026. பேதுருவின் மனமாற்றம்

இன்றைய இறைமொழி
திங்கள், 27 ஏப்ரல் 2026
பாஸ்கா காலம் நான்காம் வாரம்
திப 11:1-18. யோவா 10:11-18

பேதுருவின் மனமாற்றம்

கூட்டியக்கத்துக்கான மாமன்றத்துக்கான அழைப்பை அக்டோபர் 2021-இல் விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ், நமக்கு இரண்டு உருவகங்களை வழங்கினார்: (அ) இயேசு-திருத்தூதர்கள்-மக்கள் குழுமம். (ஆ) கொர்னேலியு இல்லத்தில் பேதுருவின் மனமாற்றம்.

நாம் வழக்கமாக பவுலின் மனமாற்றம் (காண். திப 9) பற்றியே பேசுகிறோம். பேதுருவின் மனமாற்றம் பற்றியும் லூக்கா பதிவு செய்கிறார் (காண். திப 10). கொர்னேலியு இல்லத்திற்குச் செல்லும் நிகழ்வில் பேதுருவின் மனமாற்றத்தை நாம் வாசிக்கிறோம் (முதல் வாசகம்).

‘யூதர்கள் மட்டுமே தூய்மையானவர்கள், பிற இனத்தவர் அனைவரும் தீட்டானவர்கள்’ என்னும் தன் சமகாலத்து மக்களின் எண்ணத்தை உள்வாங்கியவராக இருந்தார் பேதுரு. பிற இனத்தாரும் தூய்மையானவர்கள் என்பதைக் காட்சி ஒன்றின் வழியாக பேதுருவுக்கு விளக்குகிறார் ஆண்டவராகிய கடவுள். கடவுள் படைத்தவற்றில் தூய்மை-தீட்டு வேறுபாடு பாராட்டுதல் கூடாது என்பது கடவுள் தருகிற பாடமாக இருக்கிறது.

கொர்னேலியு இல்லத்திற்குச் சென்ற பேதுரு அங்கே இறைவேண்டல் செய்யும்போது அனைவர்மேலும் தூய ஆவியார் பொழியப்படுகிறார். இதைக் கண்ட பேதுரு மலைத்துப் போகிறார். விவசாயி ஒருவர் தன் கையில் மண்வெட்டி வைத்துக்கொண்டு வயலில் உள்ள பாத்திகளுக்கு (பகுதிகளுக்கு) தண்ணீரைப் பிரித்துவிட்டுக்கொண்டிருக்கிறார் என வைத்துக்கொள்வோம். அப்போது திடீரென கனமழை பெய்தால், விவசாயியின் துணையின்றி தண்ணீர் வயல் முழுவதும் நிரம்பி வழியும். விவசாயி பயனற்றவராக, வேலையற்றவராக மாறிவிடுகிறார். அவ்வாறே, தூய ஆவியார் தன் வழியாகவே அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தார் பேதுரு. இப்போது கொர்னேலியுவின் இல்லத்தில் அனைவர்மேலும் தூய ஆவியார் பொழியப்பட்டதைக் காணும்போது தன் பயனற்ற நிலையை உணர்கிறார் பேதுரு.

தான் பெற்ற அனுபவத்தை அவர் தன் குழுமத்தோடு பகிர்ந்துகொள்வதை இன்றைய முதல் வாசகத்தில் காண்கிறோம்.

‘நீர் ஏன் விருத்தசேதனம் செய்துகொள்ளாதோரிடம் சென்று அவர்களுடன் உணவு உண்டீர்?’ என்று தன் குழுமத்தார் தன்மேல் குறைகண்டபோது, ‘இப்போதும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்டபோது நமக்கு அருளப்பட்ட அதே கொடையைக் கடவுள் அவர்களுக்கும் கொடுத்தார் என்றால் கடவுளைத் தடுக்க நான் யார்?’ எனக் கேட்கிறார்.

இந்த வாசகம் நமக்கு விடுக்கும் சவால் என்ன?

ஆன்மிக வாழ்வில் நாம் பெற்றிருக்கிற நம்பிக்கைதான் முக்கியமே தவிர, நம்புகிற நாம் அல்ல. இன்று கிறிஸ்தவத்திலேயே பல பிரிவுகள் உள்ளன. நம்பிக்கையாளர்கள் என்ற அடிப்படையில் நாம் பிரிந்துகிடக்கிறோம். கிறிஸ்துவின்மேல் உள்ள நம்பிக்கையை மட்டும் நாம் எண்ணிப் பார்;த்தால் நம்மிடம் ஒன்றிப்பு உண்டாகும்.

கடவுள் கொடுத்த அருள்கொடை அனைவருக்கும் ஒன்றுதான். அதைப் பெற்றுக்கொண்டவர்களுக்குள் பிரிவுகள் இருந்தால் அதைப் பொருட்படுத்தக் கூடாது எனக் கற்பிக்கிறார் பேதுரு.

மேலும், நாம் ஒருவர் மற்றவர்மேல் வைத்திருக்கிற முற்சார்பு எண்ணங்கள் – பாலினம், நிறம், இனம், சாதி, சமயம், கலாச்சாரம் சார்ந்தவை – அனைத்தையும் கேள்விக்குட்படுத்த வேண்டும். நம்மை அறியாமல் மற்றவர்களும் சமூகமும் கொண்டிருக்கிற எண்ணங்களை நாம் உள்வாங்கி நிற்கிறோம். அவற்றைப் பற்றிய விழிப்புணர்வு பெற்று நாம் அவற்றிலிருந்து வெளியே வர வேண்டும்.

கொர்னேலியுவே கிறிஸ்தவ நம்பிக்கையில் நம் குலமுதுவர். ஏனெனில், அன்றைய சமூகத்தைப் பொருத்தவரையில் நாம் அனைவரும் ‘பிற இனத்தவர்களே!’ இவரின் திருமுழுக்கே நம் அனைவருடைய திருமுழுக்கிற்கான கதவுகளைத் திறந்துவிடுகிறது.

ஆண்டவராகிய கடவுள் அனைவருக்கும் பொதுவான கடவுளாக இருந்து அனைவர்மேலும் தம் அருள்கொடையைப் பொழிகிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், தாம் தம் ஆடுகளை அறிந்திருப்பதாகவும் அவற்றுக்கு பாதுகாப்பும் உணவும் வழங்குவதாகவும் அவற்றுக்காகத் தம் உயிரைக் கொடுப்பவராகவும் தம்மை முன்மொழிகிறார் இயேசு. அவரை நாம் ஆயராக ஏற்றுக்கொள்கிற வேளையில் நாமும் ஒருவர் மற்றவருக்கான ஆயர் என்னும் நிலையை மனத்தில் பதிய வைப்போம்.

ஆண்டவர் தருகிற வாழ்வு அனைவருக்கும் நிறைவானதாக, நிலையானதாக, பொதுவானதாக இருக்கிறது.

Image courtesy: Gregsloop.com

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment