இன்றைய இறைமொழி. சனி, 18 ஏப்ரல் 2026. இயேசு வந்து சேரவில்லை!

இன்றைய இறைமொழி
சனி, 18 ஏப்ரல் 2026
பாஸ்கா காலம் இரண்டாம் வாரம் – சனி
திப 6:1-7. யோவா 6:16-21

இயேசு வந்து சேரவில்லை!

இயேசு கடலின் மேல் நடக்கும் நிகழ்வைப் பதிவு செய்கிற நற்செய்தியாளர் யோவான், ‘அவர்கள் அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விரும்பினார்கள். ஆனால், படகு உடனே அவர்கள் சேரவேண்டிய இடம் போய்ச் சேர்ந்துவிட்டது’ என எழுதுகிறார். யோவான் இந்த நற்செய்தியை எழுதுகிற நேரத்தில் இயேசு இறந்து உயிர்த்து விண்ணகம் சென்றுவிட்டார். படகு என்னும் தொடக்கத் திருச்சபையை திருத்தூதர்கள் மட்டுமே வழிநடத்தினார்கள். இறையியல் அடிப்படையில், ‘இயேசுவின் இல்லாமையை’ யோவான் உருவகமாகப் பதிவு செய்கிறார் என எடுத்துக்கொள்ளலாம்.

கூட்டியக்கத் திருஅவை பற்றிய கலந்துரையாடலுக்கான முதல் ஆவணத்தை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், ‘இயேசு-திருத்தூதர்கள்-மக்கள்’ என்று மூவரும் இணைந்திருப்பதுதான் திருச்சபை என வரையறுத்ததோடு, சில நேரங்களில் இயேசுவை நாம் மறந்துவிடுகிறோம் அல்லது நீக்கி விடுகிறோம் என எச்சரித்தார்.

இன்றைய நம் திருஅவைக் குழுமத்திலும் சில நேரங்களில் இப்படிப்பட்டதொரு உணர்வு வருகிறது. அருள்பணியாளரை மையப்படுத்திய திருஅவையாக, மனிதர்களின் தேவைகளை மட்டுமே மையப்படுத்துகிற திருஅவையாக நாம் இருக்கும்போது இயேசுவை சௌகரியமாக திருச்சபையிலிருந்து தள்ளிவைத்துவிடுகிறோம். அல்லது இயேசு நம் படகில் ஏறிக்கொள்ள அவருக்கு அனுமதி மறுக்கிறோம்.

இன்றைய முதல் வாசகத்தில் அப்படிப்பட்ட ஓர் ஆபத்தை உணர்கிற திருத்தூதர்கள் அதை உடனடியாக சரிசெய்கிறார்கள். தொடக்கத் திருஅவையைப் பற்றி வாசிக்கும்போதெல்லாம், ‘அவர்கள் ஒரே உயிரும் ஒரே உள்ளமுமாக இருந்தார்கள்’ என்று ரொமான்டிக்காக வாசிக்கிறோம். ஆனால், அவர்களுடைய தேனிலவும் முடிந்தது. கிரேக்க மொழி பேசக்கூடிய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் கவனிக்கப்படவில்லை. மொழி அல்லது இன அடிப்படையிலான வேறுபாடு எழுகிறது. எபிரேய மொழி பேசக்கூடிய அல்லது யூத கிறிஸ்தவர்கள் முதன்மையிடம் பெறுகிறார்கள். கிரேக்க மொழி பேசக்கூடிய அல்லது பிறவினத்துக் கிறிஸ்தவர்கள் தாழ்வாக நடத்தப்படுகிறார்கள்.

உடனடியாகக் குறுக்கிடுகிறார்கள் திருத்தூதர்கள். இந்தப் பிரச்சினையை உடனயாகத் தீர்த்து வைக்கிறார்கள். திருத்தொண்டர்கள் என்னும் முதல் படிநிலை அமைப்பு திருஅவையில் இங்கே உருவாகிறது. பந்தி பரிமாறுவதற்காக அல்லது பணிபுரிவதற்காக திருத்தொண்டர்கள் ஏற்படுத்தப்படுகிறார்கள். இவர்கள் போதிக்கும் திறன் படைத்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் இன்னொரு முக்கியமான விடயத்தை திருத்தூதர்கள் செய்கிறார்கள். தங்களுடைய பணி முதன்மையை நெறிப்படுத்துகிறார்கள்: ‘நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறை அல்ல … நாங்களோ இறைவேண்டலிலும் இறைவார்த்தைப் பணியிலும் உறுதியாய் நிலைத்திருப்போம்.’

இறைவேண்டலும் இறைவார்த்தைப் பணியும் திருத்தூதர்களின் முதன்மையாக வரையறுக்கப்படுகிறது.

நாம் இந்த முதன்மையை விட்டு இன்று வெகுதூரம் வந்துவிட்டோம். இயேசுவை விட்டு அன்று சீடர்கள் கடலில் நெடுந்தூரம் சென்றதுபோல நாம் நாளுக்கு நாள் இந்தத் தூரத்தைக் கூட்டிக்கொண்டே இருக்கிறோம்.

மேற்காணும் இரண்டு மட்டுமே – இறைவேண்டலும் இறைவார்த்தைப் பணியும் – திருத்தூதர்களின் பணியாக இருந்தால் எத்துணை சிறப்பு!

பல நேரங்களில் நாம் பந்தி பரிமாறுவதில் நம் நேரத்தையும் ஆற்றலையும் செலவழித்துக்கொண்டிருக்கிறோம்.

இயேசு நம் படகில் ஏறவில்லை என்பது இன்றும் எச்சரிக்கையாக நம் காதுகளில் விழுகிறது.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment