இன்றைய இறைமொழி
செவ்வாய், 24 நவம்பர் 2026
பொதுக்காலம் 34-ஆம் வாரம்
திவெ 14:14-20. லூக் 21:5-11
வாழ்வின் மறுபக்கம்
நாம் பல நேரங்களில் மறுபக்கத்தைப் பார்ப்பதில்லை. ஒரு பொம்மையின் மறுபக்கம், ஒரு சுவரொட்டியின் மறுபக்கம், ஒரு மொபைலின் மறுபக்கம், ஒரு மனிதரின் மறுபக்கம். இந்தப் பக்கத்தைப் போலவே மற்ற பக்கமும் எதார்த்தமானது. ஒரு பக்கமும் மறுபக்கமும் இணைந்ததே வாழ்வின் நிறைவு.
நற்செய்தி வாசகத்தில், எருசலேம் ஆலயத்தின் அழகையும் நேர்த்தியையும் பற்றி மக்கள் இயேசுவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ‘ஆலயம் இடிந்துபோகும்!’ என்று எருசலேம் ஆலயத்தின் மறுபக்கத்தைப் பற்றிப் பேசுகிறார். ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்துப் பழகிப்போன அவருடைய சமகாலத்து மக்களுக்கு மறுபக்கத்தைப் பார்ப்பது கடினமாகவும் நெருடலாகவும் அச்சமாகவும் இருக்கிறது.
பிறக்கிற அனைத்தும் இறக்க வேண்டும், வளர்கிற அனைத்தும் தேய வேண்டும், தோன்றுகிற அனைத்தும் மறைய வேண்டும் என்பது வாழ்வியல் எதார்த்தம்.
வாழ்வில் ஒரு குச்சியை நாம் கையில் எடுக்கும்போது குச்சியின் அடுத்த நுனியும் அதனுடனே வருகிறது என்பதை மனத்தில் வைத்துக்கொள்வோம்.
திருவழிபாட்டு ஆண்டு நிறைவுக்கு வருகிற வேளையில், நம் வாழ்வின் மறுபக்கத்தை கடவுள்முன் ஆய்ந்து பார்ப்போம். நமக்கு மறைவாக இருக்கிற மறுபக்கம் கடவுளுக்கு வெளிச்சமாக இருக்கிறது.
வாழ்வின் மறுபக்கத்தைப் பார்க்கத் தெரிந்தவர்கள் எந்த நேரத்திலும் மகிழ்ச்சியுடனும் நிறைவுடனும் அமைதியுடனும் இருப்பார்கள்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு யெஸ்னி ப்ரேய்ஸ் முயற்சி

Leave a Reply