இன்றைய இறைமொழி. ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2026. அறிக்கை – அதிகாரம் – அமைதி

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2026
பொதுக்காலம் 21-ஆம் ஞாயிறு
எசா 22:19-23. உரோ 11:33-36. மத் 16:13-20

அறிக்கை – அதிகாரம் – அமைதி

இன்றைய நற்செய்தி வாசகப் பகுதி பேதுருவின் நம்பிக்கை அறிக்கை என்று அழைக்கப்படுகிறது. இயேசு யார் என்று பேதுரு அறிக்கையிடும் நிகழ்வு மத்தேயு, மாற்கு, லூக்கா நற்செய்தி நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்தப் பகுதியே மேற்காணும் நற்செய்தி நூல்களின் மையம் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், இதற்கு முந்தைய பகுதிகள், ‘இயேசு யார்?’ என்னும் கேள்விக்கான தேடலாகவும், இதற்குப் பிந்தைய பகுதி, ‘இயேசு எப்படிப்பட்ட மெசியா?’ என்னும் கேள்விக்கு விடையாகவும் அமைகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் மூன்று நகர்வுகளைக் காண்கிறோம்: (அ) இயேசுவை மெசியா, இறைமகன் என்று நம்பிக்கை அறிக்கை செய்கிறார் பேதுரு. (ஆ) திறவுகோல்களைத் தந்து அதிகாரம் வழங்குகிறார் இயேசு. (இ) மெசியா அடையாளம் குறித்து அமைதி காக்குமாறு சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார் இயேசு.

இந்த நிகழ்வு நடைபெறுகிற இடம் பிலிப்பி செசரியா பகுதி. பெரிய ஏரோதுவின் மகன்களில் ஒருவரான பிலிப்பு ஏரோது உரோமைப் பேரரசர் அகுஸ்து சீசரைப் பெருமைப்படுத்தும் விதமாகக் கட்டிய நகரமே பிலிப்பி செசரியா. புறவினத்துக் கடவுளர்கள் அதிகமாக வணங்கப்பட்ட இடமாகவும், அன்றைய அரசியல் அதிகாரத்தின் தளமாகவும் இந்த இடம் இருந்தது. இந்த இடத்தில் வைத்து, ‘இயேசு யார்?’ என்னும் கேள்வியை கேட்பது, சமய அளவிலும் அரசியல் அளவிலும் பொருத்தமாக இருக்கிறது.

இயேசுவின் கேள்வி இரண்டு நிலைகளில் அமைந்துள்ளது: முதலில், மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்? இரண்டாவது, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

திருமுழுக்கு யோவான், எலியா, எரேமியா, இறைவாக்கினருள் ஒருவர் என்று இறைவாக்கினரில் ஒருவராகக் காண்கிறார்கள் மக்கள். இயேசுவின் சமகாலத்தில் மெசியாவை மக்கள் ஒரு குரு அல்லது அரசர் என்று எதிர்பார்த்தார்கள். இயேசுவை மக்கள் இறைவாக்கினர் என்று கருதியதால் அவரை மெசியாவுக்கான முன்னோடி என்று நினைத்தார்களே தவிர, அவரே மெசியா என்று நினைக்கவில்லை.

இங்கேதான் பேதுருவின் அறிக்கை மேன்மை பெறுகிறது. இயேசுவை மெசியாவாக யாரும் நினைக்காத நிலையில், பேதுரு, ‘நீரே மெசியா, உயிருள்ள கடவுளின் மகன்’ என்று அறிக்கையிடுகிறார். ‘மெசியா’ என்பது இயேசுவின் பணியையும், ‘கடவுளின் மகன்’ என்பது இயேசுவின் தான்மையையும் குறிக்கிறது.

‘நீர் பேறுபெற்றவர்!’ என பேதுருவைப் பாராட்டுகிறார் இயேசு. இறைவெளிப்பாட்டின் வழியாகவே இந்த நம்பிக்கை அறிக்கை சாத்தியம் என்கிறார் இயேசு.

மேலும், தொடர்ந்து ‘உன்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்’ என்கிறார். தனிநபருடைய அறிக்கை என்பது குழும அறிக்கையாக மாறுகிறது. இயேசுவை மெசியா என்று அறிக்கையிடுபவர்கள் இந்தக் குழுமத்தின் உறுப்பினர்களாக மாறுகிறார்கள். தொடர்ந்து, பேதுருவுக்கு அதிகாரம் வழங்குகிறார் இயேசு. ‘திறவுகோல்’ என்பது அதிகாரத்தின் உருவகமாக உள்ளது.

நற்செய்தி வாசகத்தின் இறுதியில், இந்த வெளிப்பாடு குறித்து அமைதி காக்குமாறு கட்டளையிடுகிறார் இயேசு. இயேசுவைப் பற்றிய அறிதலும் அறிக்கையிடுதலும் தனிப்பட்ட நிகழ்வாக அமைய வேண்டும்.

மத்தேயுவின் குழுமத்தைப் பொருத்தவரையில் இந்த நிகழ்வு இரண்டு நிலைகளில் பொருள் தருகிறது: முதலில், பேதுருவின் தலைமை அல்லது முதன்மையை முன்மொழிகிறது. இரண்டு, நம்பிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய உள்ளத்தில், ‘இயேசு யார்?’ என்னும் கேள்விக்கு விடை தர வேண்டும்.

இன்றைய முதல் வாசகத்தில் ‘திறவுகோல்’ என்னும் உருவகத்தைக் காண்கிறோம். செப்னா என்னும் அதிகாரியிடமிருந்து அரசப் பொறுப்பை அகற்றி, இல்க்கியாவின் மகனான எலியாக்கிமின் தோள்மேல் வைக்கிறார் ஆண்டவராகிய கடவுள். திறப்பதும் பூட்டுவதும் ஒருவரின் அதிகாரத்தால் நடக்கிறது.

இரண்டாம் வாசகத்தில், ‘ஆண்டவரின் மனத்தை அறிபவர் யார்?’ எனக் கேட்கிறார் பவுல். ஆண்டவரே தம்மை வெளிப்படுத்தினாலன்றி, அவரைப் பற்றி யாரும் அறிந்துகொள்ள இயலாது.

திருப்பாடல் ஆசிரியர் (திபா 138), ‘உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும்!’ என்று பாடுகிறார். கடவுளின் கைவினைப் பொருள்கள் நாம்.

மூன்று பாடங்கள்:

(அ) வலுவற்ற நம்மேல் தம் திருச்சபையைக் கட்டியுள்ளார் கடவுள்.

மனிதர்களின் துணை கடவுளுக்குத் தேவை. மனிதர்கள் வழியாகவே கடவுள் செயலாற்றுகிறார். பவுலுடைய சொற்களில் புரிந்துகொள்ள வேண்டுமெனில், இச்செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாம் கொண்டுள்ளோம். கீழானவை மேலானவற்றை வெற்றிகொள்ளக் கூடாது.

(ஆ) கடவுள் எனக்கு யார்? இயேசுவைப் பற்றிய எனது தனிப்பட்ட நம்பிக்கை அறிக்கை என்ன?

கடவுளைப் பற்றிய நம் புரிதல் எப்படி இருக்கிறது? அவரைப் பற்றிய உருவம் என்ன? அப்பா, அம்மா என்றா? சில நேரங்களில் கடவுளை நாம் காவல்துறை அதிகாரியாக நினைக்கிறோம் – அவர் நம் செயல்களுக்குத் தண்டனை வழங்குபவராக! சில நேரங்களில் தலைவலி மாத்திரை போல, சில நேரங்களில் நம் பாவங்களைக் கழுவும் வாஷிங் மெஷின் போல! சில நேரங்களில் நமக்கு பரிசுகள் வழங்கும் சாந்தா கிளாஸ் போல! க

(இ) ஆன்மிகத்தில் அமைதியின் அவசியம். நம் கடவுளைப் பற்றி நாம் யாருக்கும் நிரூபிக்கத் தேவையில்லை.

நம் சொற்கள் கடவுளை முழுமையாக வெளிப்படுத்த இயலாது. நம் நம்பிக்கைக் கோட்பாடுகள் கடவுளைப் பற்றிய வர்ணனையே அன்றி, வரையறை அல்ல. நம் கோட்பாடுகளைத் தாண்டியவர் கடவுள். நம் கோட்பாடுகள் வழியாக ஒருவர் மற்றவருக்கு நம் கடவுள் யார் என நிரூபிக்கத் தேவையில்லை.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு யெஸ்னி ப்ரேய்ஸ் முயற்சி

Leave a comment