இன்றைய இறைமொழி
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2026
பொதுக்காலம் 20-ஆம் வாரம்
எசே 37:1-14. மத் 22:34-40
முதன்மையான கட்டளை
இன்றைய முதல் வாசகத்தில், ‘எலும்புக்கூடு பள்ளத்தாக்கு’ காட்சியை எசேக்கியேல் காண்கின்றார். உலர்ந்த எலும்புகளுக்கு உருக்கொடுத்து, அவற்றுக்கு உயிரும் கொடுக்கிறார் ஆண்டவராகிய கடவுள். பாபிலோனிய அடிமைத்தனத்தில் இருந்த மக்கள் மீண்டும் புத்துயிர் பெறுவர் என்பதன் அடையாளமாகவே இது இருக்கிறது.
இக்காட்சியில் வரும் முதல் உரையாடல் நம் கவனத்தை ஈர்க்கின்றன.
‘எலும்புகள் மிக உலர்வாய் இருந்தன. அவர் என்னிடம், ‘மானிடா! இந்த எலும்புகள் உயிர் பெறமுடியுமா?’ என்று கேட்டார். நான், ‘தலைவராகிய ஆண்டவரே! உமக்குத் தெரியுமே!’ என்று மறுமொழி அளித்தேன்.’
மனித வரையறைகளை நன்கு உணர்ந்தவராக இருக்கிறார் என்றார் எசேக்கியேல். ‘முடியுமா?’ என்ற கேள்விக்கு, ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என விடையளிக்காமல், ‘நடப்பது அனைத்தும் அவருக்குத் தெரியும்,’ ‘செய்வதனைத்தையும் அறிந்தவர் ஆண்டவர்’ என்ற நிலையில், ‘உமக்குத் தெரியுமே’ எனப் பதிலளிக்கின்றார்.
இறைவாக்கினரின் இந்தப் பதிலில், அவர் ஆண்டவர்மேல் கொண்டிருந்த நம்பிக்கையும், எதிர்நோக்கும், அதே வேளையில் அவரின் தாழ்ச்சியும் வெளிப்படுகிறது.
நம் ஆராய்ச்சிக்கு உட்படாதவற்றின்மேல் அல்லது நம் அறிவுக்கு எட்டாத பலவற்றைக் குறித்து நாம் கவலைகொண்டு நம்மை நாமே அழித்துக் கொள்கிறோம். வாழ்வில் இக்கட்டான கேள்விகளை நாம் எதிர்கொள்ளும்போதும், சூழல்கள் நமக்கு எதிராக நிற்கும்போதும், ‘தலைவராகிய ஆண்டவரே! உமக்குத் தெரியுமே!’ என்று சரணாகதி அடைதல் சால்பு.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கட்டளைகளை முதன்மைப்படுத்துகிறார் இயேசு.
மோசே வழியாக ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குப் பத்துக் கட்டளைகள் வழங்கினார். காலப்போக்கில், விதிமுறைகள் வழிமுறைகள் என மற்ற சட்டங்கள் வழக்கத்திற்கு வந்தன. இயேசுவின் சம காலத்தில் பரிசேயர்கள் 613 சட்டங்களை நீட்சிகளாக உருவாக்கி வைத்திருந்தனர். இந்தப் பின்புலத்தில், ‘முதன்மையான கட்டளை எது?’ என்னும் கேள்வி இயேசுவிடம் கேட்கப்படுகிறது. இயேசு என்னும் ரபி அல்லது போதகரின் திருச்சட்ட அறிவைச் சோதித்துப் பார்ப்பதற்காக இக்கேள்வி கேட்கப்படுகிறது. இச 6:4-இல் வழங்கப்பட்டுள்ள முதன்மையான கட்டளையை இயேசு மேற்கோள் காட்டுவதுடன், லேவி 19:18-இல் நாம் காணும் பிறரன்புக் கட்டளையையும் எடுத்துரைத்து, முந்தைய கட்டளைக்கு இணையாக நிற்கிறது பிந்தைய கட்டளை என்று மொழிகிறார்.
இறையன்பு, பிறரன்பு என்னும் இரு கட்டளைகளும் முதன்மையாக இருக்கின்றன என்கிறார் இயேசு. சில நேரங்களில், ‘பிறரன்பு வழி இறையன்பு’ என நாம் குறுகிய பார்வையில் புரிந்துகொள்கிறோம். பிறரன்பைப் பயன்படுத்தி நாம் இறைவனை அடைய வேண்டியதில்லை. பிறரன்பு பிறரை மையமாக மட்டுமே இருத்தல் நலம்.
இன்று திருத்தந்தை புனித 10-ஆம் பயஸை (1903-1914) நாம் நினைவுகூர்ந்து கொண்டாடுகிறோம். நற்கருணையின் திருத்தந்தை என்று அழைக்கப்படுகிற இவர், குழந்தைகள் நற்கருணை பெறுவதை ஊக்குவித்தார்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு யெஸ்னி ப்ரேய்ஸ் முயற்சி

Leave a comment