இன்றைய இறைமொழி. திங்கள், 5 அக்டோபர் 2026. நான்கு வகை மனநிலை

இன்றைய இறைமொழி
திங்கள், 5 அக்டோபர் 2026
பொதுக்காலம் 27-ஆம் வாரம்
புனித மரியா பவுஸ்தீனா கோவால்ஸ்கா, நினைவு

கலா 1:6-12. லூக் 10:25-37

நான்கு வகை மனநிலை

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ‘நல்ல சமாரியன்’ எடுத்துக்காட்டை வாசிக்கிறோம். இந்த உவமையில் நாம் காணும் கதைமாந்தர்களின் மனநிலையை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்:

(அ) திருடர் மனநிலை: ‘என்னுடையது என்னுடையது. உன்னுடையதும் என்னுடையது.’

திருடர்கள் தாங்கள் எதிர்கொண்ட வழிப்போக்கரிடமிருந்து உடைமைகளைப் பறித்துக்கொள்வதுடன், அவரை அடித்து, நிர்வாணமாக்கி, குற்றுயிராய் விட்டுச் செல்கிறார்கள். இவர்கள் எடுப்பவர்கள். மற்றவர்களின் நலனை விரும்பாதவர்கள். மற்றவருடையதையும் அநீதியாகத் தங்களுடையது என ஆக்கிக்கொள்பவர்கள்.

(ஆ) குரு, லேவியர் மனநிலை: ‘என்னுடையது என்னுடையது. உன்னுடையது உன்னுடையது.’

இது கண்டுகொள்ளாத்தன்மை. ‘என் வழியையும் என் இலக்கையும் நான் கருத்தில் கொள்கிறேன். உன்னுடைய இந்த நிலைக்கு நீயே பொறுப்பு’ என்னும் நிலையில் தங்கள் வழி நடக்கிறார்கள் குருவும் லேவியரும். இவர்கள் அந்த நபருக்குத் தீங்கும் இழைக்கவில்லை. நன்மையும் செய்யவில்லை. இவர்கள் கடந்து சென்றதால் காயம்பட்ட நபர் வாழ்வில் எந்த மாற்றமும் நடக்கவில்லை. இவருடைய இருத்தல் அவர்களுக்கும் அவர்களுடைய இருத்தல் இவருக்கும் எந்த பொருளும் தரவில்லை.

(இ) விடுதிக்காப்பாளர் மனநிலை: ‘என்னுடையது உன்னுடையது – நீ அதற்குரிய தொகையைத் தந்தால்!’

வியாபார மனநிலை. தன் விடுதியில் உள்ள வசதிகளை – தங்குதல், உண்ணுதல், பாதுகாத்தல் – போன்றவற்றை மற்றவருக்குத் தருகிறார் விடுதி உரிமையாளர் அல்லது காப்பாளர். ஆனால், அதற்கென்று ஒரு விலையை நிர்ணயிக்கிறார். அந்தத் தொகைக்கு ஏற்ற வசதிகளை அவர் தருவார்.

(ஈ) நல்ல சமாரியர் மனநிலை: ‘என்னுடையதும் உன்னுடையது. உன்னுடையதும் உன்னுடையது.’

வழிப்பயணம் மேற்கொண்ட சமாரியர் தன் பயணத்தை நிறுத்துகிறார், பயணத்தின் தாமதம் கண்டு முணுமுணுக்கவில்லை. தேவையில் இருப்பவருக்கு உதவி செய்கிறார். இவற்றுக்கு அடிப்படையாக அவர்மேல் பரிவுகொள்கிறார். மேலும், இன்னும் அதிக ஆபத்தை அந்த நபர் எதிர்கொள்ளக்கூடும் என்னும் நிலையில் அந்தப் பாதையிலிருந்து அவரை வெளியேற்றுகிறார் சமாரியர்.

நம் அருகிலிருப்பவர்களின் காயங்கள் இன்றும் நம்மை நோக்கிக் கூப்பிடுகின்றன – குடும்பங்களில், சாலையோரங்களில், மருத்துவமனைகளில், சிறைச்சாலைகளில், புலம்பெயர்ந்தோரில், குழந்தைகளில். நாம் எந்த மனநிலையோடு பதிலிறுப்பு செய்கிறோம்?

நிற்க.

இன்று நாம் புனித பவுஸ்தினாவை நினைவுகூர்கிறோம். இறைஇரக்கத்தின் செயலர் என அழைக்கப்படுகிற இவர், தாம் இயேசுவிடமிருந்து பெற்ற வெளிப்பாடுகளின் அடிப்படையில் இறைஇரக்கத்தை ஒரு பக்தி முயற்சியாகத் தொடங்கிச் செயல்படுத்துகிறார். நாம் பாவத்தால் வழியில் குற்றுயிராய்க் கிடந்தபோது தம் இரக்கத்தால் நம் காயங்களைக் கட்டி நமக்கு வாழ்வுதந்து அழிவிலிருந்து மீட்டவர் இயேசு கிறிஸ்து. அவருடைய இரக்கத்தைப் பெற்ற நாம் ஒருவர் மற்றவருக்கு அதைத் தர முன்வருவோம்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு யெஸ்னி ப்ரேய்ஸ் முயற்சி

Leave a comment