இன்றைய இறைமொழி. வெள்ளி, 26 ஜூன் 2026. விருப்பமும் ஆற்றலும்

இன்றைய இறைமொழி
வெள்ளி, 26 ஜூன் 2026
பொதுக்காலம் 12-ஆம் வாரம்
2 அர 25:1-12. மத் 8:1-4

விருப்பமும் ஆற்றலும்

இயேசுவை மோசேயின் வழி நிற்கும் புதிய போதகர் என முன்மொழிந்த மத்தேயு, இயேசுவின் வல்ல செயல்களைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தொழுநோயாளர் ஒருவருக்கு நலம் தருகிறார். இதுவே மத்தேயு நற்செய்தியில் இயேசு ஆற்றுகிற முதல் வல்ல செயல். இந்த நிகழ்வு மத்தேயுவின் குழுமத்தாருக்கு இறைவாக்கினர் எலிசாவை நினைவுபடுத்தியிருக்கும். ஏனெனில், பழைய ஏற்பாட்டில் இறைவாக்கினர் எலிசா சிரியா நாட்டின் நாமானுடைய தொழுநோயை நீக்குகின்றார்.

இந்த நோய்க்கு மருந்து இல்லாத காரணத்தாலும், இது மற்றவர்களுக்கு வேகமாகப் பரவக்கூடியது என்பதாலும், இந்த நோய் ஒருவரின் உடலைச் சிதைத்து விடுவதாலும் இந்த நோய் கடவுளின் சாபமாகக் கருதப்பட்டது. மேலும், இந்த நோய் கண்டவர்கள் அவர்களுடைய ஊருக்கு வெளியே ஒதுக்கிவைக்கப்பட்டார்கள். கடவுளிடமிருந்தும் ஊராரிடமிருந்தும் அந்நியப்படுத்தப்பட்ட உணர்வை இவர்கள் அனுபவித்தார்கள். இவ்வாறாக, உடல் வலியும் உள்ள வலியும் இந்த நோயின் விளைவுகளாக இருந்தன.

இயேசு தொழுநோயாளருக்கு நலம் தரும் நிகழ்வு அனைத்து மக்கள் முன்னிலையிலும் நடந்தேறுகிறது. ‘ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க முடியும்’ என்று இயேசுவிடம் கேட்கிறார் தொழுநோயாளர். இயேசு நோய்களின்மேல் ஆற்றல் கொண்டவர் என்பது அவருடைய நம்பிக்கையாக இருந்தது. இயேசுவின் விருப்பம் மட்டுமே அவசியம். இயேசு அவருடைய கையை நீட்டி அவரைத் தொடுகிறார். இந்தச் செயலையே நாமான் எலிசாவிடம் எதிர்பார்த்தார். அங்கே எலிசா அவ்வாறு செய்யவில்லை. தொழுநோயாளரைத் தொடுவதன் வழியாக இயேசு தம்மையே தீட்டுப்படுத்திக்கொள்ளவில்லை. மாறாக, தீட்டைத் தூய்மையாக்குகிறார். மேலும், இந்த வல்ல செயல் பற்றி யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்றும், நலமடைந்ததற்கான காணிக்கையைச் செலுத்தும் என்றும் அறிவுறுத்துகிறார். கடவுளோடு ஒப்புரவாக்குகிறார் இயேசு.

நம் விருப்பமும் இயேசுவின் விருப்பமும் இணையும் புள்ளியில் வல்ல செயல் நடக்கிறது.

இந்நிகழ்வு நமக்குத் தரும் பாடம் என்ன?

பல நேரங்களில் பல செயல்களைச் செய்வதற்கு நமக்கு ஆற்றல் இல்லை என நினைக்கிறோம். உண்மையில் யோசித்துப் பார்த்தால், நாம் விரும்புகிற அனைத்தையும் செய்வதற்கான ஆற்றல் நம்மில் மறைந்துள்ளது. விருப்பம் வந்தவுடன் ஆற்றல் வந்துவிடுகிறது.

ஆர்வம் வந்தவுடன் ஆற்றல் வருகிறது என்பதே எதார்த்தமான உண்மை. எதையும் செய்வதற்கு ‘வில் பவர்’ வேண்டும் என்று நாம் சொல்கிறோம். ‘வில்’ தான் ‘பவர்’ என்று மறந்துவிடுகிறோம்.

நம் வாழ்வில் நம்மால் இயலாது என்று தட்டிக்கழிக்கும் தள்ளிப்போடும் ஏதாவது ஒன்றை எடுத்து, அதன்மேல் ஆர்வம் காட்டுவோம். ஆர்வம் வந்தவுடன் ஆற்றல் பிறக்கிறது. ஆர்வமும் ஆற்றலும் இணையும்போது வல்ல செயல் நடந்தேறுகிறது.

இன்றைய பதிலுரைப்பாடல் (திபா 137) இஸ்ரயேல் மக்கள் அனுபவித்த நாடுகடத்தல் அனுபவத்தின் வலியை (முதல் வாசகம்) எடுத்துரைக்கிறது: ‘பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து, நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம்’ என்று எழுதுகிறார் இயேசு. இந்த அழுகையில் அவர்களுடைய தோல்வி, பயம், கையறுநிலை அனைத்தும் மறைந்து நிற்கிறது.

நம் தோல்வி, பயம், கையறுநிலையில் நம் நடுவே வருகிறார் கடவுள்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment