இன்றைய இறைமொழி. வியாழன், 25 ஜூன் 2026. செயல்களின் மேன்மை

இன்றைய இறைமொழி
வியாழன், 25 ஜூன் 2026
பொதுக்காலம் 12-ஆம் வாரம்
2 அர 24:8-17. மத் 7:21-29

செயல்களின் மேன்மை

‘அவ்வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில், பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.’

ரபிக்களின் போதனை இறுதியில் தன்னாய்வுக் கேள்வியுடன் நிறைவுபெறும். மாணவர்கள் தாங்கள் கேட்டதன் அடிப்படையில் தங்களுடைய போதகருக்கு விடை தர வேண்டும். நாம் கடந்த இரு வாரங்களாக வாசித்துக்கொண்டிருக்கும் மலைப்பொழிவு இன்றைய நற்செய்தி வாசகத்தோடு நிறைவு பெறுகிறது. மலைப்பொழிவின் இறுதியில் ரபி போல இயேசு ஒரு கேள்வியை சீடர்கள்முன் வைக்கிறார்: ‘நீங்க எந்த வகை அடித்தளத்தில் வீடு கட்டப் போகிறீர்கள்? பாறை மீதா? அல்லது மணல் மேலா?’ இந்தக் கேள்விக்கு விடையளிப்பதன் வழியாக சீடர் தன் தெரிவை வெளிப்படுத்துகிறார். இந்தத் தெரிவு அவர் தன் வாழ்வைத் தகவமைத்துக்கொள்ள உதவுகிறது.

சொற்கள் அல்ல, மாறாக, செயல்களே வெற்றியை நிர்ணயிக்கின்றன. ஆண்டவரைப் பற்றிய நம்பிக்கை அறிக்கை வெறும் சொற்களாக இல்லாமல், செயல்களாக மாற வேண்டும். சொற்கள் அடித்தளமற்றவை, எளிதாகப் பேசப்படுபவை, காற்றில் கரைந்துவிடுபவை. ஆனால், செயல்கள் ஆழமான அடித்தளம் கொண்டிருக்கின்றன. செயல்களைச் செய்துமுடிக்க நம் தொடர்முயற்சி தேவைப்படுகிறது. செயல்கள் நம் வாழ்விலும் மற்றவர்கள் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில், பாபிலோனியப் படையெடுப்பை வாசிக்கிறோம். யூதா நாட்டு மக்கள் தங்கள் யாவே கடவுளான பாறை மீது வீடு கட்டுவதை விடுத்து, பாகால் கடவுளர்களான மணல்மீது வீடுகள் கட்டுகிறார்கள்.

நம்முடைய நம்பிக்கை வெறுமனே சொற்களாக அல்லாமல், செயல்களாக மாறினால் நலம்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment