இன்றைய இறைமொழி
ஞாயிறு, 17 மே 2026
ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா
திப 1:1-11. திபா 47. எபே 1:17-23. மத் 28:16-20
உயரே ஏறுகிறார் ஆண்டவர்!
ஆண்டவரின் விண்ணேற்றத்தை பெருவிழாவாக நாம் கொண்டாடுகிறோம். இந்த நிகழ்வை ஒரு பிரியாவிடை நிகழ்வு என்று எடுப்பதை விட, பிரிவு அல்லது இழப்பு நிகழ்வு என்று எடுக்கும்போது இந்த நிகழ்வின் வலியை நம்மால் உணர முடிகிறது. நம் அன்புக்குரியவர்கள் இறந்துவிட்டால் அவர்களை அடக்கம் செய்துவிட்டு, அல்லது எரித்துவிட்டு, அல்லது மருத்துவமனைக்குத் தானமாக அளித்துவிட்டு வீடு வருகிறோம். அவர் இருந்த இடத்தில் இப்போது அவர் இல்லை என்ற எதார்த்தம் நமக்கு வலியைத் தருகிறது. இயேசுவின் விண்ணேற்றத்தை நேரில் கண்ட திருத்தூதர்கள் இப்படிப்பட்ட ஓர் உணர்வையே பெற்றிருப்பார்கள். மூன்று ஆண்டுகள் பணி வாழ்வில் உடனிருந்து, 40 நாள்கள் உயிர்த்த ஆண்டவராக உடனிருந்த இயேசுவை இனி அவர்கள் காண மாட்டார்கள். அவருடைய குரல் இனி அவர்களுக்குக் கேட்காது. அவரை இனி அவர்களால் தொட முடியாது. அவர்களுடைய கண்கள் இனி அவர்களைப் பார்க்காது. இயேசு இல்லாமல் அவர்கள் வாழத் தொடங்க வேண்டும். இந்த இடத்தில் அவர்கள் தங்கள் பொறுப்புணர்வின் வலியையும் உணர்ந்திருப்பார்கள்.
இயேசுவின் விண்ணேற்றத்தைப் புரிந்துகொள்ள நமக்கு மூன்று தடைகள் இருக்கின்றன:
(அ) இயேசுவின் உடல்
இயேசு இந்த உலகில் வாழ்ந்தபோது மனித உடல் கொண்டிருந்தார். நடந்தார், நின்றார், போதித்தார், அழுதார். ஆனால், அந்த உடல் சிலுவையில் அறையப்பட்டது. இறந்து அடக்கம் செய்யப்பட்டது. உயிர்த்தபின்னர் அவர் இன்னொரு வகை உடலை ஏற்கிறார். அந்த உடல் பூட்டிய அறைக்குள் நுழைகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் மறைகிறது. விண்ணேற்றத்தின்போது இயேசு உடலோடு மேலே செல்கிறார் என்றில், அவருடைய உடல் எப்படிப்பட்டதாக இருந்தது? அந்த உடலை வைத்து அவர் விண்ணகத்தில் என்ன செய்வார்? தந்தைக்கு உடல் இல்லை. ஆவியாருக்கு உடல் இல்லை. மகனுக்கு மட்டும் உடலா?
(ஆ) காலத்தையும் இடத்தையும் கடத்தல்
காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்ட இயேசு இவ்விரண்டையும் கடந்து செல்கிறார். ஆனால், ‘நான் எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்’ என்று கூறுகிறார். இந்தப் பிரசன்னம் எப்படி சாத்தியம்? இயேசுவின் அல்லது கடவுளின் பிரசன்னம் இந்த உலகில் உண்மையாகவே இருக்கிறதா? அல்லது இது நம் உள்ளத்தில் தோன்றக்கூடிய அல்லது ஒட்டுமொத்த கூட்டு நினைவில் தோன்றக்கூடிய ஓர் உணர்வா?
(இ) பார்த்தவர்கள் எழுதவில்லை, எழுதியவர்கள் பார்க்கவில்லை
இயேசுவின் விண்ணேற்றம் பற்றிய குறிப்பை மாற்கும் லூக்காவும் பதிவு செய்கிறார்கள். ஆனால், விண்ணேற்ற நிகழ்வை அவர்கள் நேரடியாகப் பார்க்கவில்லை. லூக்காவின் பதிவிலும் ஒரு முரண் உள்ளது. அவருடைய நற்செய்தியின்படி இயேசு உயிர்த்த நாளன்றே விண்ணேற்றம் அடைகிறார். திருத்தூதர் பணிகளின்படி அவர் நாற்பதாம் நாள் விண்ணேற்றம் அடைகிறார். ‘கடவுள் நம்மோடு’ (இம்மானுவேல்) என்று இறங்கி வந்த இயேசு மத்தேயு நற்செய்தியில் இங்கேயே தங்கி விடுகிறார். யோவான் இந்த நிகழ்வு பற்றி முழுமையாக மௌனம் காக்கிறார். இயேசுவின் விண்ணேற்றம் ஒரு வரலாற்று நிகழ்வா? அல்லது இறையியல் நிகழ்வா? அல்லது யாக்கோபு, மோசே, எலியா இவர்களுடைய வாழ்க்கையின் அடிப்படையில் எழுதப்பட்ட கதையாடலா?
‘விண்ணேற்றம் எப்படி?’ என்று கேட்டால், நமக்கு விடை இல்லை.
‘விண்ணேற்றம் ஏன்?’ என்று கேள்வியை சற்றே மாற்றிக் கொள்வோம்.
இன்றைய முதல் வாசகத்தில் இயேசு விண்ணேற்றம் அடையுமுன் தம் சீடர்கள் இந்த உலகில் சாட்சிகளாகத் திகழ்வார்கள் என்று அறிவிக்கிறார். ‘உயரே எடுத்துக்கொள்ளப்படுகிறார் இயேசு. மேகம் ஒன்று அவரை சீடர்களின் பார்வையிலிருந்து மறைக்கிறது. மேகம் என்பது முதல் ஏற்பாட்டுப் பின்புலத்தில் கடவுளுடைய பிரசன்னம். அங்கே தோன்றுகிற வெண்ணுடை அணிந்த இருவர், வானத்தை அண்ணாந்து பார்க்க வேண்டாம் என்று சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார்கள்.
இரண்டாம் வாசகத்தில், திருஅவை இயலை எழுதுகிறார் பவுல். ஆண்டவராகிய இயேசுவை கடவுள் தம் வலப்பக்கம் அமரச் செய்கிறார். வலப்பக்கம் என்பது ஆற்றலைக் குறிக்கிறது. மேலும், இயேசு திருஅவையின் தலையாக இருக்கிறார். தலையாகிய உடல் விண்ணகம் சென்றுவிட்டது. அவருடைய மறையுடலாகிய திருஅவை இந்த உலகில் வாழ்கிறது.
நற்செய்தி வாசகத்தில், மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவின் ‘விண்ணேற்ற’ நிகழ்வை ஒரு பிரியாவிடை நிகழ்வுபோலப் பதிவு செய்கிறார். யாக்கோபு, மோசே போல சில சொற்களைச் சொல்லி இயேசு தம் சீடர்களிடமிருந்து விடை பெறுகிறார். கலிலேயாவில் இந்த நிகழ்வு நடக்கிறது. கலிலேயா என்பது இயேசுவின் பணி தொடங்கிய இடம். சீடர்களின் பணியும் அங்கேதான் தொடங்கப் போகிறது. தமக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்கிறார் இயேசு. இறுதியில், ‘உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்!’ என்று வாக்குறுதி தருகிறார்.
விண்ணேற்ற நிகழ்வு இயேசுவுக்குத் தரக்கூடிய பொருள் என்ன?
(அ) தந்தையின் இல்லம் திரும்புகிறார் இயேசு – விண்ணேற்ற நிகழ்வோடு இயேசுவின் மனுவுருவாதல் நிகழ்வு முடிவடைகிறது. தந்தையிடமிருந்து வந்த இயேசு தந்தையிடம் திரும்புகிறார்.
(ஆ) மாட்சி அடைகிறார் – சிலுவையில் அறையப்பட்ட இறந்த இயேசு கடவுள் தன்மையில் மாட்சிமை அடைகிறார்.
(இ) கடவுளுக்கும் மனிதர்களுக்குமான இணைப்பாளராக, பாலமாக மாறுகிறார் – பகைமை என்னும் சுவரை உடைக்கிறார். கடவுள் தன்மையை மனிதர்களுக்குக் காட்டிய இயேசு மனித நிலையைக் கடவுளிடம் கொண்டு செல்கிறார்.
திருத்தூதர்களுக்கு இந்த நிகழ்வு தரக்கூடிய பொருள் என்ன?
(அ) நம்பிக்கையில் அவர்கள் வளர வேண்டும் – ‘காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்’ என்று தோமாவிடம் கூறினார் இயேசு. இனி யாரும் இயேசுவைக் காணப்போவதில்லை. ஆனால், அவர்மேல் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
(ஆ) பணியைப் பெற்றுக்கொள்கிறார்கள் – விண்ணரசுப் பணி இயேசுவிடமிருந்து சீடர்களின் கைகளுக்கு மாறுகிறது.
(இ) தூய ஆவியாரின் வருகைக்காகக் காத்திருக்க வேண்டும் – நான் சென்றாலன்றி துணையாளர் வரமாட்டார் என்று சொன்னார் இயேசு. இயேசுவின் இந்த வாக்குறுதி நிறைவேறும் வரை சீடர்கள் எருசலேமில் காத்திருக்க வேண்டும்.
நமக்கு இந்த நிகழ்வு தரக்கூடிய பொருள் என்ன?
(அ) வான் நோக்கி கண்கள் – நம் கண்கள் வான் நோக்கி, மேல் நோக்கி இருக்க வேண்டும். இந்த உலகையும் தாண்டிய வாழ்வு உண்டு என்பதை நாம் மனத்தில் இருத்த வேண்டும். நம் எண்ணங்களும் உயர்ந்ததாக இருக்க வேண்டும்.
(ஆ) தரையில் ஊன்றிய கால்கள் – கால்கள் அன்றாட வாழ்வில் வேரூன்றியதாக இருக்க வேண்டும். நம் பொறுப்புணர்வை ஏற்று வாழ்தல்.
(இ) இயேசுவின் உடனிருப்பை உணர்தலும் வழங்குதலும் – இறைவார்த்தையில், நற்கருணையில், திருஅவையில், இயற்கையில், எளியவரில் பிரசன்னமாகி இருக்கும் இயேசுவைக் கண்டுகொள்தல். அவரை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துதல்.
‘எக்காளம் முழங்கிடவே உயரே எழுகின்றார் ஆண்டவர்’ என்று இன்றைய பதிலுரைப்பாடல் பல்லவியை நாம் மொழிகிறோம். உயரே எழுகின்ற ஆண்டவர்மேல் நம் கண்களைப் பதிய வைப்போம். நம் கால்களை நன்றாகத் தரையில் ஊன்றி வாழ்வோம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment