இன்றைய இறைமொழி
புதன், 29 ஏப்ரல் 2026
பாஸ்கா காலம் நான்காம் வாரம்
திப 12:24-13:5. யோவா 12:44-50
ஒதுக்கி வையுங்கள்
இன்றைய முதல் வாசகத்தில் சில கவனிக்கத்தக்க விடயங்கள் நடக்கின்றன:
மக்கள் நோன்பிருந்து இறைவனிடம் மன்றாடுகிறார்கள். அப்போது தூய ஆவியார், ‘பர்னபாவையும் சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கிறேன். அந்தப் பணிக்காக அவர்களை ஒதுக்கி வையுங்கள்’ என்கிறார். இச்செய்தி பவுலுக்கும் பர்னபாவுக்கும் நிறைய மகிழ்ச்சியையும் அதே வேளையில் பொறுப்புணர்வையும் தந்திருக்க வேண்டும்.
‘எல்லாரையும் போல நான் ஏன் இருக்கக் கூடாது?’ என்று சில நேரங்களில் நாம் கேட்போம். ‘எல்லாரையும் போல நீ இருக்கக் கூடாது’ என்று சில நேரங்களில் வாழ்க்கை நமக்கு வரையறையை இடுகிறது. இது நம்மைக் கட்டுப்படுத்தும் வரையறை அன்று. மாறாக, நம்மை விடுதலையாக்கும் வரையறை.
இதே அனுபவத்தை இன்று பவுலும் பர்னபாவும் பெறுகிறார்கள்.
‘ஒதுக்கி வைத்தல்’ என்னும் சொல்லாடலை நாம் இரண்டு நிலைகளில் புரிந்துகொள்ளலாம். ஒன்று, கழித்து ஒதுக்கி வைத்தல். எடுத்துக்காட்டாக, வெண்பொங்கல் சாப்பிடும்போது சிலர் கறிவேப்பிலை மற்றும் மிளகு போன்றவற்றை ஒதுக்கி வைப்பர். ஒன்று தனக்கு ஏற்புடையதல்ல என்று நாம் கணித்து உணவு வகைகளை நாம் ஒதுக்கி வைக்கின்றோம். இதை ஒத்தே சில இடங்களில், ஊரை விட்டு ஆட்கள் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். அல்லது தள்ளி வைக்கப்படுகின்றனர். நாமே சில உறவுகளை ஒதுக்கி வைக்கின்றோம். இத்தகைய ஒதுக்கி வைத்தல் எதிர்மறையான பொருளைத் தருகிறது. இரண்டாவதான பொருள் நேர்முகமானது. அதாவது, நம் உடை, நறுமணப் பொருள், செருப்பு போன்றவற்றில் சிலவற்றை முக்கியமான நாளுக்கென ஒதுக்கி வைக்கின்றோம். நம் வீட்டில் வரும் விருந்தினர்களுக்காக என்று மதிப்புமிக்க சில பாத்திரங்களை ஒதுக்கி வைக்கின்றோம். இத்தகைய ஒதுக்கி வைத்தலில் மதிப்பு இருக்கின்றது. இரண்டாம் வகையான ஒதுக்கி வைத்தல்தான் பர்னபா மற்றும் பவுலுக்கு இன்றைய முதல் வாசகத்தில் நடக்கிறது.
மேலும், இந்த நிகழ்வில் தூய ஆவியாரின் வார்த்தைகளைத் தொடக்கத் திருஅவையினர் கேட்பதாகப் பதிவு செய்கின்றார் லூக்கா. தூய ஆவியார்தான் இதைச் சொன்னார் என்று அவர்களால் எப்படி உறுதியாகச் சொல்ல முடிந்தது? அதற்குக் காரணம், கடவுளோடு அவர்கள் கொண்டிருந்த இணைப்பே. ‘இது தூய ஆவியுடையது, இது தீய ஆவியுடையது’ என அவர்களால் தெளிவாகப் பிரித்து உய்த்துணர முடிந்தது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. தேர்ந்து தெளிதல் என்பது அவர்களுடைய இயல்பாகவே மாறியிருந்தது.
இரண்டாவதாக, அவர்களோடு கூடியிருந்த சீடர்கள், செபித்து, தங்கள் கைகளை அவர்கள் மேல் விரித்து அவர்களை திருப்பொழிவு செய்கின்றனர்.
திருப்பொழிவு என்பது இறைவன் தரும் கொடை என்றும், சாதாரண மனிதர்களும் செபித்து அடுத்தவருக்கு ஆவியானவரைக் கொடுக்க முடியும் என்ற நிலையும் அன்று இருந்துள்ளது.
இன்று, திருப்பொழிவுக்கு முன் நிறைய படிப்பு, தேர்வு, ஆய்வு. இன்னொரு பக்கம், இவர்தான் திருப்பொழிவு செய்ய வேண்டும், இந்தச் செபம்தான் சொல்ல வேண்டும் என்று நிறைய வரையறைகளும் வந்துவிட்டன.
தொடக்கத் திருஅவையில் இருந்த சுதந்திரம் மறைந்துவிட்டது.
இன்னும் நாம் அருள்பணியாளர் மைய திருஅவையைத்தான் தூக்கிப் பிடிக்கின்றோம். ஏனெனில், இது நமக்கு வசதியாக இருக்கிறது. ஆனால், தொடக்கத் திருஅவை அருள்பணியாளர் மையத் திருஅவை அல்ல. அங்கே எல்லாரும் பங்கேற்றனர். எல்லாரும் எல்லாரையும் அருள்பொழிவு செய்தனர். நிறுவனமயமான திருஅவையில் நாம் ஆவிக்குரிய அக்கொடைகளை இழந்துவிட்டோம் என்றே தோன்றுகிறது.
மூன்றாவதாக, அவர்கள் உடனடியாகத் தங்கள் பணித்தளம் நோக்கிச் செல்கின்றனர். தங்களின் ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையை மதிப்புக்குரிய ஒன்றாகக் கருதாமல், அதில் அடங்கியுள்ள பணிப் பொறுப்பையே காண்கின்றனர் பர்னபாவும் பவுலும்.
கடவுளுடைய ஆவியாரின் குரலை உடனடியாக நாம் அறிந்தால்,
இறைவனுக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையை நாம் உணர்ந்து அதற்கேற்றாற் போல வாழ்ந்தால்,
நம் பணிப் பொறுப்பை உடனடியாக உணர்ந்து புறப்பட்டால் எத்துணை நலம்!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment