இன்றைய இறைமொழி. வியாழன், 26 நவம்பர் 2026. தலை நிமிர்ந்து நில்லுங்கள்

இன்றைய இறைமொழி
வியாழன், 26 நவம்பர் 2026
பொதுக்காலம் 34-ஆம் வாரம்
திவெ 18:1-2, 21-23, 19:1-3, 9. லூக் 21:20-28

தலை நிமிர்ந்து நில்லுங்கள்

இன்றைய நற்செய்தி வாசகம் திருவெளிப்பாட்டு இலக்கியத்தின் மொழிநடையைக் கொண்டிருக்கிறது. போர், முற்றுகை, அழிவு, விண்ணக அடையாளங்கள், கடலின் கொந்தளிப்பு, அச்சம், மானிட மகனின் வருகை என்று அடுத்தடுத்து உருவகங்களும் குறியீடுகளும் வருகின்றன.

திருவெளிப்பாட்டு இலக்கியத்தை நாம் நேரடியாக வாசித்தால் அது நம்மை அச்சுறுத்தும். ஆனால் அதை ஒரு குறியீட்டு மொழியாக வாசித்தால் அது நமக்கு நம்பிக்கையைத் தருகிறது. திருவெளிப்பாட்டு மொழி உலகம் எப்படி அழியும் என்று சொல்ல வருவதில்லை. மாறாக, உலகம் சிதறிப்போவது போலத் தோன்றும் நேரத்திலும் கடவுள் வரலாற்றைத் தம் கைகளில் வைத்திருக்கிறார் என்று சொல்ல வருகிறது.

லூக்கா நற்செய்தியாளர் தம் காலத்தில் நடந்த நிகழ்வுகளுக்கு இறையியல் பொருள் கொடுக்கிறார். எருசலேம் முற்றுகையிடப்பட்டது. நகரம் அழிக்கப்பட்டது. ஆலயம் இடிக்கப்பட்டது. மக்கள் சிதறடிக்கப்பட்டனர். அவர்களுக்கு உலகமே முடிந்துவிட்டது போலத் தோன்றியிருக்கலாம். அவர்கள் நம்பிக்கையின் மையமாகக் கொண்டிருந்த நகரமும் ஆலயமும் வீழ்ந்தன.

இந்த அனுபவத்தை லூக்கா வெறும் வரலாற்றுச் செய்தியாக எழுதவில்லை. அதன் நடுவில் கடவுள் என்ன சொல்கிறார் என்று தேடுகிறார்.

இன்றைய நற்செய்தியில் போர் சார்ந்த பல சொற்கள் வருகின்றன: படைகள், முற்றுகை, வாள், கைதி, நாடுகள், கலக்கம். இப்படிப்பட்ட சூழலில் இயல்பாக மனிதன் என்ன செய்வான்? தலை குனிவான். பயத்தால் ஒளிந்துகொள்வான். ஓட முயல்வான்.

ஆனால் இயேசு சொல்வது முற்றிலும் வேறு: ‘நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.’

‘தலை நிமிர்தல்’ என்பது ஓர் உடல் அசைவு மட்டுமல்ல. அது ஓர் உள்ளத்தின் நிலை. பயப்படுகிறவன் தலை குனிகிறான். தோற்றுப்போனவன் தலை குனிகிறான். அவமானப்பட்டவன் தலை குனிகிறான். நம்பிக்கையை இழந்தவன் தலை குனிகிறான். ஆனால் மீட்பு நெருங்கி வருகிறது என்று நம்புகிறவன் தலை நிமிர்கிறான்.

சுற்றிலும் எல்லாம் சரியாக இருப்பதால் அவன் தலை நிமிரவில்லை. சுற்றிலும் எல்லாம் தவறாக இருந்தாலும் கடவுள் இன்னும் செயல்படுகிறார் என்பதால் தலை நிமிர்கிறான். இதுவே கிறிஸ்தவ நம்பிக்கை.

நம் வாழ்க்கையிலும் சில நேரங்களில் நம் சிறிய எருசலேம்கள் அழிக்கப்படுகின்றன. நாம் பாதுகாப்பாக நினைத்திருந்த உறவு உடைந்து போகலாம். உடல்நலம் பாதிக்கப்படலாம். நாம் நம்பிய ஒருவர் நம்மை விட்டு விலகலாம். நம் திட்டம் தோல்வியடையலாம். நம் கைகளில் உறுதியாக இருந்த ஒன்று திடீரென நழுவிப்போகலாம்.

அப்போது நமக்கு உலகமே முடிந்துவிட்டது போலத் தோன்றுகிறது. ஆனால் இயேசு சொல்லும் வார்த்தை இதுதான்: ‘இதுவே முடிவு என்று நினைக்காதே. தலை நிமிர்ந்து நில்.’

அழிவு என்றொரு பக்கம் இருக்கிறது. மீட்பு என்ற இன்னொரு பக்கமும் இருக்கிறது. முற்றுகை இருக்கிறது. விடுதலையும் இருக்கிறது. இழப்பு இருக்கிறது. புதிய தொடக்கமும் இருக்கிறது. இருள் இருக்கிறது. மானிட மகனின் வருகையும் இருக்கிறது.

இன்றைய முதல் வாசகமும் இதே நம்பிக்கையைத் தருகிறது. பெரும் பாபிலோன் வீழ்கிறது. வலிமை, செல்வம், ஆடம்பரம், அதிகாரம் ஆகியவற்றின் அடையாளமாக நின்ற நகரம் அழிகிறது. ஆனால் அதன் வீழ்ச்சிக்குப் பிறகு வானத்தில் ஒரு புதிய குரல் ஒலிக்கிறது: ‘அல்லேலூயா! மீட்பும் மாட்சியும் வல்லமையும் நம் கடவுளுக்கே உரியன.’

நம் வாழ்க்கையிலும் இதை நினைவில் கொள்வோம். நமக்குத் தெரிந்த ஒன்று முடிவடையும்போது கடவுளின் செயல்பாடு முடிவடைவதில்லை. நாம் பிடித்திருந்த ஒன்று நம் கையிலிருந்து போகும்போது கடவுள் நம்மைக் கைவிட்டுவிடுவதில்லை.

சில நேரங்களில் மீட்பு நாம் எதிர்பார்த்ததைப் பாதுகாப்பதில் வருவதில்லை. அதை இழந்த பிறகு ஒரு புதிய வழியைத் திறப்பதில் வருகிறது.

ஆகவே, இன்று நற்செய்தி நமக்கு அச்சத்தை அல்ல, மனவுறுதியைத் தருகிறது. சுற்றிலும் குழப்பம் இருந்தாலும் தலை நிமிர்ந்து நிற்போம். நம் திட்டங்கள் சிதறினாலும் தலை நிமிர்ந்து நிற்போம் நாம் இழந்தாலும் தலை நிமிர்ந்து நிற்போம். ஏனெனில் நம் நம்பிக்கை நிகழ்வுகளில் அல்ல் நிகழ்வுகளின் நடுவிலும் நம்மை நோக்கி வருகின்ற கடவுளில் இருக்கிறது. ‘தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.’

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு யெஸ்னி ப்ரேய்ஸ் முயற்சி

Leave a Reply