இன்றைய இறைமொழி. ஞாயிறு, 31 மே 2026. நமது உருவமும் உருவகமும்

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 31 மே 2026
மூவொரு கடவுள் பெருவிழா
விப 34:4-6, 8-9. 2 கொரி 13:11-13. யோவா 3:16-18

நமது உருவமும் உருவகமும்

நாம் ஒவ்வொரு முறை செபிக்கும்போதும், செபத்தை நிறைவு செய்யும்போதும் ‘தந்தை, மகன், தூய ஆவியார்’ என்று சிலுவை அடையாளம் வரைகிறோம். மூவொரு கடவுள் பெயரால் ஆசி வழங்குகிறோம். மூவொரு கடவுள் பற்றிய மறையுண்மையை மூன்று பகுதிகளாகப் புரிந்துகொள்வோம்: (அ) இறையியல் விளக்கம். (ஆ) வாசகங்கள் விளக்கம். (இ) வாழ்வியல் விளக்கம்.

(அ) இறையியல் விளக்கம்

இன்றைய நாள் திருப்பலியில் நாம் வாசிக்கும் தொடக்கவுரை மூவொரு கடவுள் பற்றிய இறையியலை மிக அழகாக எடுத்துரைக்கிறது: ‘வகையில் தனித்தன்மை, இறைஇயல்பில் ஒருமை, மாண்பில் சமத்துவம்.’ தந்தை, மகன், தூய ஆவியார் மூன்று ஆள்களாக ஒவ்வொருவரும் தனித்தன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்குள் இருக்கிற இறையியல்பு இவர்கள் மூவருக்குள்ளும் ஒருமைப்பாட்டை அல்லது ஒன்றிப்பை ஏற்படுத்துகிறது. இவர்கள் மூவரும் தங்களில் வேற்றுமை அல்லது பாகுபாடு பார்க்காதவர்களாக இருக்கிறார்கள்.

கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி எண்கள் 253-255 என்னும் பகுதி மூவொரு கடவுள் பற்றியதாக இருக்கிறது.

கிறிஸ்தவத்தில் மூவொரு கடவுள் பற்றிய புரிதல் எப்படி வந்தது?

கிறிஸ்தவம் தொடக்கத்தில் யூத சமயத்தின் நீட்சியாக இருந்தது. யூத சமயம் ஏகக் கடவுள் நம்பிக்கை கொண்டது (காண். இச 6:4). கடவுள் ஒருவரே என்றாலும் அவருடைய வெளிப்பாடு மூன்று நபர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது: ஆண்டவர் அல்லது யாவே, ஆண்டவரின் தூதர், கடவுளின் ஆவி. மேற்காணும் மூன்று வெளிப்பாடுகளும் கிறிஸ்தவத்துக்கு வரும்போது, ‘தந்தை, மகன், தூய ஆவி’ என்று மாறுகிறார்கள்.

புதிய ஏற்பாட்டில் நாம் காணும் சில பாடங்கள் மூவொரு கடவுள் நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்றன: ‘தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்கு கொடுங்கள்’ (மத் 28:19). ‘ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக’ (2 கொரி 13:13). ‘தொடக்கத்தில் வாக்கு இருந்தது. அவ்வாக்கு கடவுளோடு இருந்தது. அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது’ (யோவா 1:1).

திருஅவைத் தந்தை தெர்த்தூலியன் முதன்முதலாக (கிபி 200) ‘ட்ரினிடாஸ்’ (இலத்தீன்) என்னும் சொல்லைப் பயன்படுத்தி மூவொரு கடவுள் இறையியலுக்கு வித்திடுகிறார். அவருக்குச் சற்று முன்பாக அந்தியோக்கு நகர் தியோபில் ‘ட்ரியாஸ்’ என்னும் கிரேக்கச் சொல்லைப் பயன்படுத்துகிறார்.

மூவொரு கடவுள் இறையியலை – ‘ஊசிஸ், ஹைபோஸ்டாஸிஸ்’ என்னும் சொற்களைக் கொண்டு மிகவும் நேர்த்தியாக எழுதியவர் புனித அகுஸ்தினார் . கீழை மரபில் கப்படோஸியத் தந்தையர்கள் மூவொரு கடவுள் கோட்பாட்டைப் புரிந்துகொள்வதற்கு ‘பெரிகொரேஸிஸ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.

‘மனம்’ என்னும் ஒற்றைத் தளத்தில் ‘நினைவு,’ ‘புரிதல்,’ ‘விருப்பம்’ என்னும் மூன்று செயல்பாடுகள் நிகழ்வதுபோல, இறைஇயல்பில் மூன்று நபர்கள் செயல்படுகிறார்கள் என்கிறார் அகுஸ்தினார். மேலும், ‘காதலர், காதலி, காதல்’ என்னும் உருவகத்தைப் பயன்படுத்தியும் மூவொரு கடவுள் மறையுண்மையைப் புரிந்துகொள்ள விரும்புகிறார் அகுஸ்தினார்.

மூவொரு கடவுள் இறையியலுக்கு எதிராக நிறைய தப்பறைக் கொள்கைகளும் – திரிபுக் கொள்கைகளும் இருக்கின்றன: (1) மோடலிஸம் – கடவுள் ஒருவரே, அவர் மூன்று முகமூடிகள் அணிகிறார். (2) ஆரியுக் கொள்கை – தந்தை நீடித்தவர், மகன் இடையில் வந்தவர், மகன் தந்தைக்குக் கீழே இருக்கிறார். (3) த்ரிதேயிஸம் – மூன்று கடவுளர்கள் – மும்மூர்த்திகள் பிரம்மா, விஷ்ணு, சிவா போல மூன்று பணிகளைச் செய்பவர்கள் – படைப்பவர், காப்பவர், அழிப்பவர். (4) கீழ்ப்படுத்துதல் – மகனும் தூய ஆவியாருக்கும் தந்தைக்குக் கீழே இருக்கிறார்கள். (5) மூன்று பகுதிகள் – ஒரு கேக்கின் மூன்று பகுதிகள் போல, மூன்று பேர் இணைந்ததே மூவொரு கடவுள். (6) தத்து எடுத்தல் – தந்தை ஒருவரே. அவர் இயேசுவைத் தம் மகனாக அவருடைய திருமுழுக்கு நிகழ்வில் தத்து எடுக்கிறார்.

நிசேயா பொதுச்சங்கமும் (கிபி 325), கான்ஸ்தாந்தின் பொதுச்சங்கமும் (கிபி 381) மூவொரு கடவுள் பற்றிய இறையியலை நிர்ணயிக்கின்றன.

கிறிஸ்தவத்திலும் மூவொரு கடவுள் மூன்று நபர்களாகக் கருதப்படுகிறார்கள்: யெகோவா சாட்சிகள் தந்தை கடவுளை மட்டுமே நம்புகிறார்கள். கிறிஸ்துவின் சபையினர் இயேசுவை மட்டுமே நம்புகிறார்கள். பெந்தகோஸ்தே சபையினர் ஆவியாரை மட்டுமே நம்புகிறார்கள்.

(ஆ) வாசகங்கள் விளக்கம்

இன்றைய முதல் வாசகத்தில், கடவுள் மோசேக்கு மீண்டும் பத்துக் கட்டளைகள் வழங்குகிறார். மோசேக்கு இந்த நிகழ்வு கடவுள் அனுபவமாக இருக்கிறது. ‘இரக்கமும் பேரன்பும் உள்ளவர் ஆண்டவர்’ என்று அறிக்கையிடுகிறார் மோசே. கடவுள் தம் உடன்படிக்கையை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முன்வருகிறார்.

இரண்டாம் வாசகத்தில், பவுல், தன் திருமுகத்தை ‘தந்தை-மகன்-தூய ஆவியார்’ என்னும் ஃபார்முலா கொண்டு நிறைவு செய்கிறார். ‘ஆண்டவர்-தந்தை-ஆவியார்’ என்று வரிசையை மாற்றுகிறார்.

நற்செய்தி வாசகத்தில், நிக்கதேமுக்குத் தம்மை வெளிப்படுத்துகிற இயேசு, ‘கடவுள் – மகன் – அன்பு’ என்னும் சொற்களைக் கையாண்டு தாம் கடவுளின் மகன் என்று அறிவிக்கிறார்.

(இ) வாழ்வியல் விளக்கம்

(1) நாம் ஒவ்வொருவருமே மூவொரு கடவுளின் உருவத்தையும் உருவகத்தையும் தாங்கி நிற்கிறோம். ‘உடல், உள்ளம், ஆன்மா’ என்னும் மூன்று விடயங்களால் கட்டப்பட்டவர்கள் நாம். மூன்றையும் இணைப்பது நம்மில் உள்ள மனிதத்தன்மை அல்லது மனித இயல்பு. ஆண்டவராகிய இயேசுவை நம் உடலுக்கு அடையாளப்படுத்தலாம். ஏனெனில், கடவுள் தன்மையில் விளங்கிய அவர் மனித உடல் ஏற்றார். தந்தை நம் உள்ளத்துக்கு உருவகம். ஏனெனில், அனைத்து எண்ணங்களின் பிறப்பிடம் அவரே. அவருடைய திருவுளமும் நம் உள்ளமும் இணைந்தே செல்ல வேண்டும். ஆவியார் நம் உடலின் உயிராக, ஆன்மாவாக இருக்கிறார். படைப்பின் தொடக்கத்தில் நம்மேல் கடவுள் ஊதிய ஆவியும் இதுவே.

உடல்-உள்ளம்-ஆன்மா என்னும் மூன்று விடயங்கள் இருந்தாலும் அவை ஒவ்வொன்றும் மற்றொன்றோடு இணைந்து செயல்படுகின்றன. எந்தவொரு வேறுபாடும் பாராட்டுவதில்லை.

நம் உடல்-உள்ளம்-ஆன்மா என்னும் மூன்று விடயங்களையும் மூவொரு கடவுள் ஆளுகை செய்வாராக!

(2) இன்றைய உலகம் தன்மையப்போக்கை அதிகம் வலியுறுத்துகிறது. ஆனால், நம் கடவுள் ஒன்றிப்பின் கடவுளாக இருக்கிறார். இன்னொரு பக்கம் கடவுள் பற்றிய எண்ணமும் வேகமாக மறைந்துவருகிறது. மறைபொருள் என்னும் பண்பை நாம் ஒருவர் மற்றவரில் கண்டு ஒருவர் மற்றவரோடு ஒன்றிப்புடன் வாழ வேண்டும்.

(3) தந்தையாகிய கடவுளின் இரக்கமும், மகன் இந்த உலகிற்குக் கொண்டு வந்த அன்பும், தூய ஆவியார் குறித்துக் காட்டுகிற தோழமையும் நம் உள்ளத்திலும், இல்லத்திலும், உறவுகளிலும் இருக்கும்போது நாம் மூவொரு கடவுளை இந்த உலகில் பிரதிபலிக்கிறோம்.

மூவொரு கடவுள் நம் உருவமாகவும் உருவகமாகவும் இருக்கிறார்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment