இன்றைய இறைமொழி. சனி, 30 மே 2026. வெற்றுக் கேள்விகள்

இன்றைய இறைமொழி
சனி, 30 மே 2026
பொதுக்காலம் 8-ஆம் வாரம்
யூதா 17, 20-25. மாற் 11:27-33

வெற்றுக் கேள்விகள்

நாம் கேட்கிற கேள்விகளுக்குப் பெறக்கூடிய விடைகள் நம்மில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, சாலையில் நாம் வாகனத்தில் செல்கிறோம். புதிய இடத்திற்கு வழி தெரியவில்லை. வாகனத்தை நிறுத்தி அங்கிருப்பவரிடம், ‘இந்த வழி அந்த இடத்திற்குச் செல்லுமா?’ எனக் கேட்கிறோம். அவர் ‘போகாது’ என்று சொல்கிறார். நாமோ தொடர்ந்து அந்த வழியே செல்கிறோம் எனில், நாம் கேட்ட கேள்வியாலும் அவர் கொடுத்த விடையாலும் நமக்கு எந்தப் பயனும் இல்லை.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசுவிடம் இப்படிப்பட்ட வெற்றுக்கேள்விகளைக் கேட்கிறார்கள் அவர்களுடைய சமகாலத்து மக்கள். இயேசுவுடைய போதனைகளையும் வல்ல செயல்களையும் பற்றிக் கேள்விப்படுகிற அவருடைய எதிரிகள் – தலைமைக் குருக்கள், பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் – அவருடைய அதிகாரம் எங்கிருந்து வந்தது என்று கேள்வி கேட்கிறார்கள். இயேசுவின் சமகாலத்து ரபிக்கள் மறைநூலின் அதிகாரம் அல்லது தாங்கள் சார்ந்திருக்கிற பள்ளியின் அதிகாரத்தைக் கொண்டு போதித்தார்கள். கலிலேயாவிலிருந்து வருகிற இயேசுவுக்கு மறைநூலும் தெரியாது, ரபிக்களின் பள்ளிகளும் தெரியாது என அவர்கள் நினைத்தார்கள். அவரைக் கேள்வி கேட்டு அவரது அதிகாரத்தைக் கட்டுப்படுத்த நினைத்தார்கள். இயேசுவோ அவர்களுடைய கேள்விக்கு விடை தராமல், மற்றொரு எதிர்கேள்வியை முன்மொழிகிறார்: ‘திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் விண்ணகத்திலிருந்து வந்ததா? மண்ணகத்திலிருந்து வந்ததா?’ இந்தக் கேள்வி நம்பிக்கை சார்ந்ததாக இருக்கிறது.

இயேசுவுடைய அதிகாரத்தைப் பற்றிய கேள்வி அவர்மேல் நாம் கொள்ள வேண்டிய நம்பிக்கை நம்மை அழைத்துச்செல்ல வேண்டும். இயேசுவுடைய எதிரிகள் இயேசுவை நம்புவதற்குத் தயாராக இல்லை. வெறும் கேள்விகளோடு நிறுத்திக்கொள்கிறார்கள்.

இந்த வாசகத்திற்கு முந்தைய பகுதியில் நம்பிக்கையின் முக்கியத்துவம் பற்றிப் பேசுகிறார். கேள்வி கேட்கின்ற உள்ளம் நம்புவதற்குத் தயங்குகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் தன்னுடைய குழுமத்துக்கு அறிவுரை வழங்குகிறார் யூதா. ‘சிலருக்கு இரக்கம் காட்டும்போது எச்சரிக்கையாய் இருங்கள்’ என்று அறிவுறுத்துகிறார் யூதா.

கடவுளின் இரக்கத்தை நம் நடுவில் அறிவிக்க வந்த இயேசு அவருடைய எதிரிகளுக்கு இரக்கம் காட்டுவது குறித்து எச்சரிக்கையாக இருக்கிறார். அவர்களுடைய வெளிவேடத்தையும் பிளவுபட்ட உள்ளத்தையும் கடிந்துகொள்கிறார்.

இன்று நம்முடைய நம்பிக்கை வாழ்வில் கேள்வி கேட்கும் உள்ளம் விடுத்து சரணடையும் உள்ளம் பெற முன்வருவோம்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment