இன்றைய இறைமொழி. வெள்ளி, 29 மே 2026. கடவுள்மீது நம்பிக்கை

இன்றைய இறைமொழி
வெள்ளி, 29 மே 2026
பொதுக்காலம் 8-ஆம் வாரம்
1 பேது 4:7-13. மாற் 11:11-26

கடவுள்மீது நம்பிக்கை

இன்றைய நற்செய்தி வாசகத்தில் மூன்று நிகழ்வுகள் நடக்கின்றன: ஒன்று, காய்க்காத அத்திமரம் ஒன்றை இயேசு சபிக்கிறார். ஏனெனில், அது கனிதரவில்லை. இரண்டு, எருசலேம் ஆலயத்தைத் தூய்மைப்படுத்துகிறார் – ஆலயத்தின் நோக்கத்தை நெறிப்படுத்துகிறார். மூன்று, இயேசு சபித்த அத்திமரம் பட்டுப்போகிறது. அந்த நிகழ்வு நம்பிக்கை மற்றும் இறைவேண்டல் பற்றிய போதனையின் தளமாக மாறுகிறது.

‘இன்க்லூசியோ’ என்னும் இலக்கியக் கருவியின் அடிப்படையில் பார்த்தால், எருசலேம் ஆலயம் தூய்மைப்படுத்தப்படும் நிகழ்வு, அத்திமர நிகழ்வுகளுக்கு இடையே பொதிந்து வைக்கப்பட்டுள்ளது. ரபி இலக்கியங்களில் அத்திமரம் என்பது தோரா – யூதர்களின் சட்டநூல்களை – குறித்தது. இயேசு பசியாக இருக்கிறார். பசி என்பது ஓர் உடலியல் உணர்வு. பசிக்கிற நேரத்தில் அத்திப்பழங்கள் தேடுகிறார். கனிதரும் காலம் அது இல்லை என்னும் குறிப்பையும் மாற்கு தருகிறார். ‘இனி உன் கனியை எவரும் உண்ணப்போவதில்லை’ என்று சபிக்கிறார் இயேசு. சுற்றுச்சூழல் அக்கறையின் அடிப்படையில் பார்த்தால் இயேசுவின் இச்செயல் நமக்கு இடறலாக இருக்கிறது. ஆன்மிக அடிப்படையில் பார்க்கும்போது, இயேசுவின் வருகைக்குப் பின்னர் இனி தோரா என்னும் அத்திமரம் தேவையில்லை என்று நாம் புரிந்துகொள்ளலாம்.

தொடர்ந்து வரக்கூடிய நிகழ்வு எருசலேம் ஆலயம் தூய்மைப்படுத்தப்படுதல். அன்றைய காலகட்டத்தில் எருசலேம் ஆலயம் உரோமை மற்றும் கோவில் காவலர்களால் வெகுவாகப் பாதுகாக்கப்பட்டு வந்தது. இயேசு உள்ளே நுழைந்திருக்கலாம். ஆனால், அங்கிருப்பவர்களை அடித்து விரட்டுவது சாத்தியமற்றதாக இருக்கிறது. இதுவும் ஓர் ஆன்மிக நிகழ்வாகவே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். மெசியா வரும்போது அவர் எருசலேம் ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவார் என்பது யூதர்களின் நம்பிக்கையாக இருந்தது. ஆலயத்தின் நோக்கம் பிறழ்வுபட்டுக் கிடக்க அதை மெசியா சரி செய்கிறார்.

இறுதி நிகழ்வில், பட்டுப் போன அத்திமரத்தை பேதுரு இயேசுவிடம் சுட்டிக்காட்டுகிறார். இயேசுவை ‘ரபி’ என அழைக்கிறார் பேதுரு. ஏற்கெனவே இயேசுவை அவர் மெசியா என அறிக்கையிட்டாலும் இந்தப் பகுதியில் இயேசுவை ஒரு போதகராகவே பார்க்கிறார் பேதுரு. ‘கடவுள்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்!’ என்று நம்பிக்கை பற்றிய அறிவுரையையும், இறைவேண்டல் பற்றிய போதனையையும் வழங்குகிறார் இயேசு. இறைவேண்டலின் இல்லம் கள்வர் குகையாக மாறிவிட்டதுபோல, இறைவேண்டலும் வெற்றுச் சடங்காக மாறிவிட்டது. இயேசு கோவிலைச் சரி செய்ததுபோல, இறைவேண்டலின் இயல்பையும் சரி செய்கிறார்.

‘கடவுள்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்!’ என்னும் இயேசுவின் சொற்களை நம் வாழ்வியல் அழைப்பாக எடுத்துக்கொள்வோம். கடவுள்மீது நம்பிக்கை கொள்பவர் கனிதர இயலாத சூழலிலும் கனி தருகிறார். கடவுள்மீது நம்பிக்கை இல்லாதவர் கடவுளின் இல்லத்தையும் கள்வர் குகை ஆக்கி விடுகிறார். கடவுள்மீது நம்பிக்கை உள்ளவர் தன் இறைவேண்டலால் அனைத்தையும் பெற்றுக்கொள்கிறார். மற்றவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டு வாழ்கிறார்.

கடவுள்மீது நம்பிக்கை என்பது செயல்பாடாக மாற வேண்டும் என்பது இன்றைய முதல் வாசகத்தின் அழைப்பாகவும் இருக்கிறது. ‘அறிவுத்தெளிவு, அன்பு, விருந்தோம்பல், கொடைகளைப் பயன்படுத்துதல்’ வழியாக ஒருவர் கடவுள்மீது கொண்டுள்ள நம்பிக்கையை அறிக்கையிட வேண்டும் என்று பேதுரு அறிவுறுத்துகிறார்.

இன்று நாம் திருத்தந்தை புனித 6-ஆம் பவுலை நினைவுகூர்கிறோம். திருஅவையில் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தை நிறைவுக்குக் கொண்டுவந்ததோடு, திருஅவையின் பார்வையைக் கடவுளை நோக்கி மீண்டும் திருப்பினார் இவர். நம்பிக்கைக் கண்கள் கொண்டு இந்த உலகின் எதார்த்தங்களைப் பார்க்க நம்மைத் தூண்டுகிறார் இவர்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment