இன்றைய இறைமொழி
வெள்ளி, 22 மே 2026
பாஸ்கா காலம் ஏழாம் வாரம்
திப 25:13-21. யோவா 21:15-19
என்னைப் பின்தொடர்
இதைச் சொன்னபின் இயேசு பேதுருவிடம், ‘என்னைப் பின்தொடர்’ என்றார்.
பேதுருவுக்கும் இயேசுவுக்குமான நெருக்கத்தை நற்செய்தி நூல்களில் நாம் ஐந்து இடங்களில் வாசிக்கிறோம்: (அ) இயேசு பேதுருவை அழைக்கும் நிகழ்வு. (ஆ) ‘நீரே மெசியா’ என இயேசுவை அறிக்கையிடும் நிகழ்வு. (இ) இயேசுவைப் போல கடலில் நடக்க முயற்சி செய்யும் நிகழ்வு. (ஈ) இயேசுவை மறுதலிக்கும் நிகழ்வு. (உ) இயேசுவின்மேல் உள்ள அன்பை அறிக்கையிடம் நிகழ்வு. ‘ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியுமே!’ என்று மொழியும் பேதுருவின் சொற்கள் அவருடைய சரணாகதியின், வெளிப்படைத்தன்மையின், அர்ப்பணத்தின் அடையாளங்களாக இருக்கின்றன.
சொற்களால் பேதுரு அறிக்கையிட்டவுடன், இயேசு ‘நீ கைகளை விரித்துக் கொடுப்பாய்’ என்று சொல்லி அவரைப் பற்றிக்கொள்கிறார். தம்மைப் பின்தொடருமாறு அழைக்கிறார். ‘கைகளை விரித்துக்கொடுக்கும் ஒருவர்’ தன் உரிமையை இழக்கிறார் என நாம் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. மாறாக, அவர் சுதந்திரம் பெறுகிறார். இனி தான் எங்கு செல்ல வேண்டும் என்பதை அவர் முடிவெடுக்கத் தேவையில்லை. கடவுளிடம் கரங்களை அவர் நீட்டிக்கொடுத்தாலே போதும். ‘மனிதர்களைப் பிடிப்பதற்காக’ அழைக்கப்பட்ட நம் கைகளை கடவுள் முதலில் பிடித்தால் அன்றி, நாம் மனிதர்களைப் பிடிக்க இயலாது.
உயிர்ப்புக்குப் பின்னர் இயேசு பேதுருவையும் மற்ற திருத்தூதர்களையும் எதிர்கொள்ளும் நிகழ்வில், இயேசுவே கரியினால் நெருப்பு மூட்டி திருத்தூதர்களுக்கு காலை உணவு தயாரிக்கிறார். கரியால் மூட்டப்பட்ட நெருப்பு இதற்கு முன்னர் கயபாவின் இல்ல வளாகத்தில் இருந்தது. அங்கேதான் பேதுரு இயேசுவை மூன்று முறை மறுதலித்தார். அதே கரி நெருப்பின் மணம் பேதுருவுக்கும் இயேசுவுக்கும் ஒரே நேரத்தில் பழைய நினைவுகளைக் கொண்டுவந்திருக்கும். மறுதலிக்கும் நினைவை சீடத்துவத்தின் நினைவாக மாற்றுகிறார் இயேசு.
மூன்று முறை மறுதலித்த பேதுரு மூன்று முறை இயேசுவின்மேல் உள்ள அன்பை அறிக்கையிடுகிறார். இயேசுவுக்கும் அவருக்குமான நெருக்கம் இங்கே உறுதி செய்யப்படுகிறது. நிகழ்வின் இறுதியில், ‘என்னைப் பின்தொடர்’ என்று பேதுருவை அழைக்கிறார் இயேசு. நற்செய்தியின் தொடக்கத்தில் இயேசு முதல் திருத்தூதர்களைச் சந்திக்கிற நிகழ்வில், ‘வந்து பாருங்கள்’ என்று மட்டுமே மொழிகிறார். இங்குதான் பேதுரு அழைக்கப்படுகிறார்.
பேதுருவின் குற்றம் தண்ணீராலும் நெருப்பாலும் கழுவப்படுகிறது. ‘அது ஆண்டவர்!’ என்று படகில் சொல்லக் கேட்டு அரை நிர்வாணமாகத் தண்ணீரில் நீந்தி வருகிறார் பேதுரு. கரி நெருப்பின் வெதுவெதுப்பு அவருடைய பழைய பாவத்திலிருந்து அவரை விடுவிக்கிறது.
தூய ஆவியாருடைய பெருவிழாவுக்கு மிக அருகில் வந்துவிட்ட நமக்கு தூய ஆவியாரைக் குறிக்கிற தண்ணீரும் நெருப்பும் முன்மொழியப்படுகின்றன.
ஆவியாரைப் பெற்றுக்கொள்கிற ஒருவர் இயேசுவைப் பின்தொடர்கிறார்.
முதல் வாசகத்தில், பவுல் உரோமைக்குச் செல்வதற்கான வாய்ப்பை உருவாக்கிக்கொள்கிறார். பவுலின் அறிவுத்திறன் நமக்கு வியப்பளிக்கிறது. ஏற்கெனவே பயணம், நோய், சிறைத்தண்டனை எனக் களைத்திருக்கிறார் பவுல். உரோமையிலும் அவர் சான்றுபகர வேண்டும் என்று இயேசு அவருக்குச் சொல்கிறார். உரோமைக்கு எப்படிச் செல்வது? பணம் இருந்திருக்காது பவுலிடம், அல்லது நேரக் குறைவு. தனக்கு வருகிற ஒரு வாய்ப்பைப் பற்றிக்கொள்கிறார். ‘நான் உரோமைப் பேரரசரால் விசாரிக்கப்பட வேண்டும்’ என்று சொல்கிறார் பவுல். உரோமைக் குடிமக்களுக்கென வழங்கப்பட்டிருந்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கிறார். சிறைக்கைதியாக இருந்தாலும் பத்திரமாக அவர் அழைத்துச் செல்லப்படுவார் என்ற உறுதி அவருக்குள் இருந்தது.
தன் வாழ்வின் ஒவ்வொரு வாய்ப்பையும் நற்செய்தி அறிவிப்புக்கான வாய்ப்பாகப் பயன்படுத்துகிறார் பவுல். பவுலின் புத்திக்கூர்மையும் மனத்திடமும் நேர்முகமான எண்ணமும் நமக்கு வியப்பளிக்கின்றன.
இயேசுவை நாம் இன்றும் என்றும் பற்றி நடக்க முயற்சி செய்வோம்.
இன்றைய நாளில் காசியா நகர் புனித ரீத்தாவை நினைவுகூர்கிறோம். திருமண வாழ்க்கையில் நுழைந்தபோது இயேசுவைப் பின்பற்றத் தொடங்கிய ரீத்தா கணவனை இழந்த பின்னர் துறவற வாழ்வில் இணைந்து தன் துன்பத்திலும் இயேசுவைப் பின்தொடர்கிறார்.
இயேசுவுக்கு பக்தர்கள் இன்று நிறைய இருக்கிறார்கள். சீடர்கள்தாம் குறைவாக இருக்கிறார்கள்.
சீடத்துவம் என்னும் சவாலை ஏற்க பேதுருவும் பவுலும் ரீத்தாவும் நம்மை அழைக்கிறார்கள்.
‘என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்’ (மத் 16:24)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment