இன்றைய இறைமொழி. வியாழன், 21 மே 2026. இணைந்திருத்தல்

இன்றைய இறைமொழி
வியாழன், 21 மே 2026
பாஸ்கா காலம் ஏழாம் வாரம்
திப 22:30. 23:6-11. யோவா17:20-26

இணைந்திருத்தல்

‘எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்!’

நாம் தொடர்ந்து வாசித்து வந்த இயேசுவின் பிரியாவிடைப் பேருரை இன்றைய நற்செய்தி வாசகத்தோடு நிறைவு பெறுகிறது. சீடர்களும் சீடர்களுடைய அறிவிப்பின் வழியாக இயேசுவைப் பின்பற்றுகிற அனைத்து நம்பிக்கையாளர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது இயேசுவின் இறைவேண்டலாகவும் அழைப்பாகவும் இருக்கிறது.

‘ஒன்றாக இருத்தல்’ என்பது ‘ஒன்றுபோல இருத்தல்’ அல்ல, மாறாக, வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டுதல், இணைந்திருத்தல் என்பதாகும். இயேசுவுக்கும் தந்தைக்குமான நெருக்கமே நம் அனைவரிடமும் இருக்க வேண்டிய நெருக்கத்திற்கான உருவகமாக இருக்கிறது. சீடர்கள் நடுவே காணப்படும் ஒற்றுமையே இயேசு இந்த உலகுக்குத் தந்தையால் அனுப்பப்பட்டவர் என்பதன் அடையாளமாக இருக்கிறது.

‘இணைந்திருத்தல்’ அல்லது ‘நெருக்கத்தை’ இயேசு யோவான் நற்செய்தியில் திராட்சைக் கொடி உருவகம் வழியாகவும் எடுத்துரைக்கிறார். இணைந்திருத்தல் வழியாக கிளைகள் ஊட்டம் பெறுகின்றன, கனி தருகின்றன.

‘நீ உன் சுண்டுவிரலை நகர்த்தும்போது தூரத்தில் உள்ள நட்சத்திரத்தை நகர்த்துகிறாய்’ எனக் கற்பிக்கிறது தாவோயிஸம். மானுடர்களாகிய நாம் சமூகத்திற்காகப் படைக்கப்பட்டவர்கள். சமூகம் மற்றும் குழும வாழ்வு நம் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒருவர் மற்றவருக்கு இடையேயான நெருக்கத்தை நாம் உணர்வதே ‘ஒன்றாக இருத்தலுக்கான’ தொடக்கம்.

நாம் வாழும் இந்த உலகம் தனிமனித சுதந்திரம், தனியுரிமை ஆகியவற்றின்பேரில் நம்மை தனித்தனி தீவுகளாக மாற்றிவிடுகிறது. தனியாக இருக்கும் நாம் எளிதில் தோற்கடிக்கப்படுகிறோம். நம் குடும்பம், பணியிடம், சமூகம், பங்கு, திருஅவை ஆகியவற்றோடு இணைந்திருத்தல் அவசியம். மேலும், மனிதர்களை வேற்றுமைப்படுத்திப் பார்க்கும் போக்கும் அதிகமாக வளர்கிறது. எனக்கு அருகில் இருப்பவருக்கும்
எனக்குமான ஒற்றுமையைப் பார்ப்பதை விடுத்து வேற்றுமையைப் பார்க்கத் தொடங்கினால் பிரிவு ஏற்படுகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் ஓர் இரவில் ஆண்டவர் பவுலின் அருகில் நின்று, ‘துணிவோடிரும், எருசலேமில் என்னைப் பற்றிச் சான்று பகர்ந்ததுபோல உரோமையிலும் நீர் சான்று பகர வேண்டும்’ என்று அவரை உறுதிப்படுத்துகிறார். பவுல் தன் நற்செய்திப் பணியின் வழியாக கடவுளோடு இணைந்திருந்தார். கடவுளோடு இணைந்திருக்கிற ஒருவர் அனைத்தையும் அனைவரையும் கடவுளில் பார்க்கத் தொடங்குகிறார்.

‘முப்புரிக் கயிறு அறுவது கடினம்’ (சஉ 4:9)

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment