இன்றைய இறைமொழி. வியாழன், 16 ஏப்ரல் 2026. சான்றும் நம்பிக்கையும்

இன்றைய இறைமொழி
வியாழன், 16 ஏப்ரல் 2026
பாஸ்கா காலம் இரண்டாம் வாரம் – வியாழன்
திப 5:27-33. யோவா 3:31-36

சான்றும் நம்பிக்கையும்

இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர்கள் பேதுருவும் யோவானும் மீண்டும் தலைமைச்சங்கத்தாரால் விசாரிக்கப்படுகிறார்கள். இயேசுவின் உயிர்ப்புக்குத் திருத்தூதர்கள் சான்றுபகர்கிறார்கள். இரண்டு பேரின் சான்று செல்லும் என்பது யூத சட்டமாக இருந்தாலும் திருச்சங்கம் அவர்களுடைய சான்றை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

நற்செய்தி வாசகத்தில், ‘இயேசு மேலிருந்து வந்தவர். விண்ணைச் சார்ந்தவர்’ என்று அறிக்கையிடுகிறார் திருமுழுக்கு யோவான். மேலிருந்து வருகிற இயேசு மேலானவை பற்றிச் சான்று பகர்கிறார். ஆனால், அவருடைய சான்றை பலர் நம்பவில்லை.

சான்றும் நம்பிக்கையும் இணைந்தே செல்கின்றன.

சான்று பகர்தலின் நோக்கம் நம்பிக்கை உருவாக்கமே.

கடவுள்மேல் உள்ள நம்பிக்கை இன்று வேகமாகக் குறைந்துவருகிறது. ஒரு பக்கம் சமயங்கள் மனிதர்கள் நடுவே தங்களின் நம்பகத்தன்மையை இழந்துவிட்டன. சமய நம்பிக்கையை மையப்படுத்திய வன்முறை, அடிமைத்தனம், போர் ஆகியவற்றைப் பார்க்கிற மானுடம் சமயம் இல்லாமல் இருந்தால் நன்று என்று எண்ணுகிறது. இன்னொரு பக்கம் சமயம் தன் சார்ந்தவற்றை – நம்பிக்கை, புனிதர்கள், வானுலகம் – வலிந்து திணிக்கிறது.

கடவுளின் மகன் இந்த உலகிற்கு வந்து கடவுளைப் பற்றிச் சொன்னதையே மானுடம் ஏற்கவில்லை எனில், மானிடர்களாகிய நாம் கடவுளுக்குச் சான்று பகர்வதை ஏற்றுக்கொள்ளுமா? என்ற கேள்வியும் எழுகிறது.

‘மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிடக் கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்’ என்று திருச்சங்கத்தின்முன் கூறுகிறார்கள் திருத்தூதர்கள்.

கடவுளுக்குக் கீழ்ப்படிவதாகச் சொல்லியே வரலாற்றில் சிலுவைப் போர்கள் நடைபெற்றன. இன்றும் போர்கள் நடைபெறுகின்றன.

‘கடவுளுக்குக் கீழ்ப்படிதல்’ என்பது சில நேரங்களில் மனிதர்கள் தங்கள் கருத்தியலைத் திணிப்பதற்கான ஒரு வழியாகப் பயன்படுத்தப்படுகிறது.

இன்றைய நாள் நமக்குத் தரும் பாடம் என்ன?

நம்பிக்கையில் நாம் நிலைத்திருப்பதற்கான வரம் வேண்டுவது!

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment