இன்றைய இறைமொழி. செவ்வாய், 20 அக்டோபர் 2026. விழித்திருக்கும் பணியாளர்

இன்றைய இறைமொழி
வாழ்வைச் சந்திக்கும் நற்செய்தி
செவ்வாய், 20 அக்டோபர் 2026
பொதுக்காலம் 29-ஆம் வாரம் – செவ்வாய்

எபே 2:12-22. லூக் 12:35-38

விழித்திருக்கும் பணியாளர்

இன்று நம் கண்கள் அதிக நேரம் விழித்திருக்கின்றன. செயல்திறன்பேசிகளையும் தொடுதிரைகளையும் மணிக்கணக்காகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் நம் மனம் விழித்திருக்கிறதா? நம்மைச் சுற்றி நடப்பவற்றையும், நம்முடன் வாழ்கின்றவர்களின் தேவைகளையும், கடவுளின் உடனிருப்பையும் உணர்ந்திருக்கிறோமா? கண்கள் திறந்திருப்பது மட்டுமே விழிப்புணர்வு அல்ல. மனமும் விழித்திருக்க வேண்டும்.

இன்றைய நற்செய்தியில், விழித்திருக்கும் பணியாளர்களை எடுத்துக்காட்டாக முன்வைக்கிறார் இயேசு. திருமண விருந்திலிருந்து திரும்பிவரும் தலைவருக்காகப் பணியாளர்கள் காத்திருக்கின்றனர். தலைவர் எப்போது வந்தாலும் கதவைத் திறக்க அவர்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும். இந்த எடுத்துக்காட்டின் வழியாக, கிறிஸ்தவ வாழ்வில் விழிப்புணர்வின் தேவையை இயேசு வலியுறுத்துகிறார்.

பணியாளரின் மனநிலை இரண்டு பண்புகளைக் கொண்டுள்ளது: பொறுப்புணர்வும் பற்றற்ற நிலையும். எடுத்துக்காட்டாக, ஒரு வீட்டின் சாவி பணியாளரிடம் ஒப்படைக்கப்படுகிறது. சாவி தன்னிடம் இருப்பதால் அந்த வீடு தனக்குச் சொந்தமானது என அவர் உரிமை கொண்டாட முடியாது. அதே வேளையில், சாவியைப் பாதுகாக்கும் பொறுப்பும் அவருக்கு இருக்கிறது. நம் வாழ்வும் அப்படித்தான். நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள உறவுகள், பொறுப்புகள், திறமைகள், வாய்ப்புகள் அனைத்தையும் உரிமை கொண்டாடாமல், பொறுப்புடன் கையாள அழைக்கப்படுகிறோம்.

விழிப்புணர்வின் மூன்று அடையாளங்களை இயேசு முன்வைக்கிறார்.

முதலாவது, ‘வரிந்துகட்டப்பட்ட இடை.’ இது தயார்நிலையைக் குறிக்கிறது. எப்போது அழைக்கப்பட்டாலும் செயலாற்ற ஆயத்தமாக இருப்பதே உண்மையான விழிப்புணர்வு. செய்ய வேண்டிய நன்மையை நாளைக்குத் தள்ளிப்போடாமல் இன்றே செய்வதுதான் தயார்நிலை.

இரண்டாவது, ‘எரிந்துகொண்டிருக்கும் விளக்கு.’ விளக்கு இருளை அகற்றி வெளிச்சம் தருகிறது. நம்பிக்கையும் மகிழ்ச்சியும் நம்முள் தொடர்ந்து ஒளிர வேண்டும். நமது உள்ளத்தின் வெளிச்சம் முகத்தில் புன்னகையாகவும், செயல்களில் அன்பாகவும் வெளிப்பட வேண்டும்.

மூன்றாவது, ‘கதவைத் திறக்கக் காத்திருத்தல்.’ பணியாளர் தன் வேலைகளைச் செய்துகொண்டிருந்தாலும் அவருடைய கவனம் தலைவரின் வருகையின்மேல் இருக்கிறது. காத்திருத்தல் என்பது செயலற்ற நிலை அல்ல. நம்மைத் தேடிவரும் மனிதர்களையும், அவர்கள் வழியாக நம்மைச் சந்திக்கும் கடவுளையும் அடையாளம் காணும் மனநிலையே காத்திருத்தல்.

ஆனால் இன்றைய நற்செய்தியின் மிகப்பெரிய வியப்பு இறுதியில் நிகழ்கிறது. விழித்திருக்கும் பணியாளர்களைக் காணும் தலைவர் அவர்களைப் பந்தியில் அமரச்செய்து, தாமே அவர்களுக்குப் பணிவிடை செய்கிறார்!

பணியாளர்கள் தலைவருக்காக விழித்திருக்கிறார்கள். தலைவரோ அவர்களுக்குப் பணிவிடை செய்கிறார்!

இங்கே தலைவர் இயேசுவைக் குறிக்கிறார். தம் சீடர்களுக்குப் பணிவிடை செய்யும் தலைவராக இயேசு தம்மை வெளிப்படுத்துகிறார் (காண். லூக் 22:27). நமது விழிப்புணர்வுக்குப் பதிலாக அவர் தருவது வெறும் பாராட்டு அல்ல் தமது அன்பையும் உடனிருப்பையும் நம்முடன் பகிர்ந்துகொள்ளும் அருளாகும்.

இன்று நம் வாழ்வில் விழிப்புணர்வின்மை பல பிரச்சினைகளை உருவாக்குகிறது. நம் கண்கள் திரைகளில் நிலைத்திருக்கும்போது, நமக்கு அருகிலிருக்கும் மனிதர்களை நாம் கவனிக்கத் தவறுகிறோம். அவர்களுடைய குரல்கள் நம் காதுகளில் விழுந்தாலும், அவர்களுடைய உணர்வுகள் நம் உள்ளத்தைத் தொடுவதில்லை.

மனம் தூங்கிவிட்டால், கண்கள் விழித்திருந்தாலும் ஒன்றும் மனதில் படியாது!

இன்றைய அழைப்பு: இன்று சிறிது நேரம் தொடுதிரைகளிலிருந்து விலகி, நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் அவர்களுடைய தேவைகளையும் கவனிப்போம். நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை விழிப்புணர்வுடன் நிறைவேற்றுவோம்.

இன்றைய கேள்வி: என் கண்கள் விழித்திருக்கின்றன. என் மனம் விழித்திருக்கிறதா?

இறைவேண்டல்: ஆண்டவராகிய இயேசுவே, என் உள்ளத்தின் விளக்கு அணைந்துவிடாமல் காத்தருளும். உமது உடனிருப்பையும், பிறருடைய தேவைகளையும் உணர்ந்து, விழிப்புணர்வுடனும் அன்புடனும் வாழ எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a Reply