இன்றைய இறைமொழி. செவ்வாய், 13 ஜனவரி ’26. அதிகாரம் / ஆற்றல்

இன்றைய இறைமொழி
செவ்வாய், 13 ஜனவரி ’26
பொதுக்காலம் முதல் வாரம், செவ்வாய்
1 சாமுவேல் 1:9-20. மாற்கு 1:21-28

அதிகாரம் / ஆற்றல்

மனிதர்களாகிய நாம் நிகழ்வுகளையும் மனிதர்களையும் நம் அதிகாரத்திற்குள் கொண்டுவர விரும்புகிறோம். நமக்கு வெளியே இருந்து வருகிற அதிகாரம் வரையறைக்கு உட்பட்டது. வெளியே இருந்து வருகிற அதிகாரமும் தலைப்பும் வெளியே சென்றுவிடும். நமக்கு உள்ளேயிருந்து புறப்படுகிற அதிகாரம் வரையறை கடந்தது. அது நமக்குள்ளேயே ஊற்றெடுப்பதால் அதை யாரும் நிறுத்திவிட முடியாது. நம் கையை விட்டு அகலும் அனைத்தும் நமக்கு அச்சத்தைத் தருகின்றன. ‘அதிகாரி’ அல்லது ‘ஆற்றல் கொண்டவர்’ என்று நாம் ஒருவரை அழைக்கக் காரணம் அவருடைய சொல் அங்கே செயலாக மாறுவதை வைத்துத்தான். சொல் செயலாக மாறவில்லை என்றால் அங்கே அதிகாரம் இல்லை என்பதே பொருள்.

முதல் வாசகத்தில், அன்னா செய்கிற இறைவேண்டல் அவருடைய உள்மன அதிகாரத்தை ஆற்றலைக் காட்டுகிறது. குரு ஏலியால் தான் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும் தன் இறைவேண்டலில் உறுதியாக இருக்கிறார் அன்னா. தான் இறைவேண்டல் செய்து மன்றாடியது தன் மகனுடைய பிறப்பு வழியாக நிறைவேறக் கண்டு மகிழ்கிறார்.

நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் போதனை கொண்டிருந்த அதிகாரம் குறித்து மக்கள் வியப்படைகிறார்கள். இயேசுவின் அதிகாரம் அவருடைய ‘அப்பா அனுபவத்திலிருந்து’ பிறந்தது. தனக்கு வெளியே உள்ள சமகாலத்து மறைநூல் பள்ளியின் அதிகாரத்தையோ, அல்லது தன் ஆசிரியர்களின் அதிகாரத்தையோ சார்ந்து நில்லாமல் தன் அதிகாரத்தை மட்டுமே சார்ந்து நிற்கிறார் இயேசு. அவருடைய அதிகாரத்தின் மேன்மையை வல்ல செயல் வழியாகவும் காண்கிறோம். தொழுகைக் கூடத்திலிருந்த பேய் இயேசுவை அடையாளம் கொண்டு அறிக்கையிடுகிறது. இயேசு பேயை விரட்டுகிறார்.

இறைவேண்டலும் போதனையும் வல்ல செயலும் அதிகாரத்தின் வெளிப்பாடுகளாக அமைகின்றன.

அன்னாவும் இயேசுவும் கடவுளையே தங்கள் ஆற்றல் மையங்களாகக் கொண்டிருக்கிறார்கள். அன்னா குரு ஏலியின் ஆற்றலை அல்ல, மாறாக, தன் இறைவேண்டலின் ஆற்றலையே நம்புகிறார். இயேசுவும் மறைநூல் அறிஞர்களின் ஆற்றலைச் சார்ந்திருக்கவில்லை.

நம் இருத்தல் பற்றிய விழிப்புநிலை, கடவுளோடு கொண்டிருக்கிற நெருக்கம், சொல்லும் செயலுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைவு ஆகியவற்றின் வழியாக நாமும் நம் உள்ளார்ந்த அதிகாரத்தைக் கண்டுபிடிக்க இயலும்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

One response to “இன்றைய இறைமொழி. செவ்வாய், 13 ஜனவரி ’26. அதிகாரம் / ஆற்றல்”

  1. arputhasamy23 Avatar
    arputhasamy23

    Very Good Reflection Yesu.

    Like

Leave a reply to arputhasamy23 Cancel reply