இன்றைய இறைமொழி
புதன், 31 டிசம்பர் ’25
கிறிஸ்து பிறப்பின் எண்கிழமை 7-ஆம் நாள்
1 யோவா 2:18-21. யோவா 1:1-18
அவரது நிறைவிலிருந்து
இன்று ஆண்டின் இறுதிநாள். ‘ஒன்றின் தொடக்கமல்ல. அதன் முடிவே கவனிக்கத்தக்கது’ (சஉ 7:8) என்கிறார் சபை உரையாளர். இந்த ஆண்டின் முடிவில் நாம் கவனிக்கத்தக்கது என்ன? நம் மாற்றம்! நம் வாழ்க்கையில் ஆண்டு ஒன்று கூடுகிறது. நம் உடல், உள்ளம், அணுகுமுறை மாற்றம் பெறுகிறது. சில முடிந்திருக்கும். சில புதிதாகத் தொடங்கியிருக்கும். வெற்றி, தோல்வி, வளமை, வறுமை, உடல்நலம், நோய், பயணம், ஓய்வு என நாம் பல பாதைகளைக் கடந்திருப்போம். இவை அனைத்தின் வழியாக நாம் எப்படி மாறியிருக்கிறோம்? – இதுவே நம் கேள்வியாக இருக்கட்டும்.
இன்றைய நற்செய்தியின் மூன்று கருத்துருக்கள் இந்த இறுதி நாளில் நம் சிந்தனையைத் தூண்டுகின்றன:
(அ) ‘அவரிடம் வாழ்வு’
‘அவரிடம் வாழ்வு இருந்தது. அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது. இருள் அதன்மேல் வெற்றிகொள்ளவில்லை.’
இந்த ஆண்டு முழுவதும் நம் வாழ்வில் ஒளியும் இருளும் இணைந்து பயணித்திருக்கின்றன. நம் வாழ்வில் இருள் நம்மைச் சூழ்ந்திருந்தாலும் ‘இருள் நம்மேல் வெற்றி கொள்ளவில்லை’ என்பதே நம் வாழ்வியல் அனுபவம். நாம் அனைத்தையும் கடந்து வந்துவிட்டோம். இருளின் இல்லாமையை நம் விவிலியம் வாக்குறுதியாகக் கொடுக்கவில்லை. மாறாக, இருள் இருந்தாலும், இருள் நம்மை வெற்றி கொள்ளாது என்ற நம்பிக்கையைத் தருகின்றது. ஆக, இருள் நம்மை வெற்றிகொள்ள இயலாத நேரங்களுக்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம்.
(ஆ) ‘கடவுளின் பிள்ளைகள்’
‘அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். அவர்கள் இரத்தத்தினாலோ, உடல் இச்சையினாலோ, ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல. மாறாக, கடவுளால் பிறந்தவர்கள்.’
இந்த அருள்வாக்கியத்தின் முதல் பகுதி சோகமாக இருந்தாலும், பிந்தைய பகுதி மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘அவரை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையைக் கொடுக்கின்றார்.’ அதாவது, ஒரு ஸ்டெப் நம் வாழ்க்கையை உயர்த்துகிறார். இயேசு தன் வாழ்க்கை முழுவதிலும் தான் சந்தித்த, தன்னைச் சந்தித்த அனைவருடைய வாழ்க்கையையும் ஒரு ஸ்டெப் உயர்த்துகின்றார். உடல் விருப்பத்தில் பிறந்த மனிதர்களிடமே இவ்வளவு ஆற்றல் இருக்கிறது என்றால், அதைவிட உயர்வாகப் பிறந்தவர்கள் என்று சொல்லப்படுகின்ற ‘கடவுளின் பிள்ளைகளிடம்’ எவ்வளவு ஆற்றல் இருக்கும்! இந்த ஆற்றலே நம்மைப் புதிய ஆண்டுக்குள் உந்தித் தள்ளுவதாக!
(இ) ‘யாவரும் நிறைவாக’
‘இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம்’ என்கிறார் யோவான். ஆண்டின் நிறைவில் நம் மனமும் அவருடைய நிறைவால் நிறைந்துள்ளது. ‘இது போதாது’ என்ற குறைவு மனப்பான்மை, நம்மை ‘இன்னும் இன்னும் வேண்டும்’ என்ற தேடலுக்கு உட்படுத்தியிருக்கலாம். உறவுகளில் நம் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கலாம். தேவைகளை நாம் கூட்டிக்கொண்டே இருந்திருக்கலாம். அல்லது புதிய புதிய நிலைகளை எதிர்நோக்கியிருந்திருக்கலாம். ‘போதாது என்றால் எதுவும் போதாது. போதும் என்றால் இதுவே போதும்!’ என்ற மனநிலையை நாம் பெற்றுக்கொள்வோம். ஏனெனில், நம் நிறைவாக இறைவன் இருக்கின்றார்.
‘நன்றி’ என்ற ஒற்றைச் சொல்லால் நாம் இந்த ஆண்டிற்கு விடைகொடுப்போம்.
‘யாவரும் நிறைவாக’ என்று இறங்கி வந்த வானகத்தின் நிறைவு அனைவரையும் நிரப்ப ஒருவர் மற்றவருக்காக இறைவேண்டல் செய்வோம்!
இந்த ஆண்டை ஓர் இறைவேண்டலோடு நிறைவு செய்வோம்:
இறைவா,
இதோ உம் திருமுன் நான் நிறைவுடன் நிற்கின்றேன்.
உம் கைகளால் என் கொடைகள் நிறைந்துள்ளன.
நான் தடுமாறிய பொழுதுகள், தடம் மாறிய நேரங்கள்
தவறவிட்ட வாக்குறுதிகள், தவறி விட்ட உறவுகள் அனைத்தையும்
உம் பாதம் ஒப்படைக்கின்றேன்.
உம் திருமகனின் பிஞ்சு விரல் பிடித்து புதிய ஆண்டுக்குள் நடக்க விரும்புகிறேன்.
என் உள்ளத்தின் வெறுமை, தனிமை, சோர்வு, விரக்தி, ஏமாற்றம் அனைத்தும்
கடந்து போகும்!
நீர் என்னைவிட்டுக் கடந்து போகாமலிருந்தால்!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

Leave a reply to psychicllamaad12d60ff7 Cancel reply