இன்றைய இறைமொழி. புதன், 25 ஜூன் ’25. போலி இறைவாக்கினர்கள்

இன்றைய இறைமொழி
புதன், 25 ஜூன் ’25
பொதுக்காலம் 12-ஆம் வாரம் – புதன்
தொடக்கநூல் 15:1-12, 17-18. மத்தேயு 7:15-20

போலி இறைவாக்கினர்கள்

‘நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்’

போலி இறைவாக்கினர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார் இயேசு. போலிகள் என்பவை ‘போல’ இருப்பவை. அவற்றுக்கென்று தனித்தன்மை கிடையாது. அவை மற்றவற்றைச் சார்ந்தே இருக்கின்றன. தாம் குறிப்பவற்றை அவற்றால் நிறைவேற்ற இயலாது. போலியான மருத்துவர்கள் நலம் தருவதற்குப் பதிலாக பயம் தருகிறார்கள். போலியான மருந்துகள் குணம் தருவதற்குப் பதிலாக நோயைத் தருகின்றன. போலியான பொருள்கள் நம்மை ஏமாற்றுகின்றன. அவை தம்மிலே முரணானவை.

இரு உருவகங்களைத் தருகிறார் இயேசு: ஆட்டுத் தோலைப் போர்த்திய ஓநாய், மரமும் கனியும்.

ஆடு மற்றும் ஓநாய் ஒன்றுக்கொன்று முரணானது. வெளியே தெரிகிற உருவம் உள்ளே உள்ள இயல்புக்கு முரணானது. மரத்தின் கனி அதன் உள் இயல்பையே வெளிப்படுத்துகிறது. நல்ல மரம் கெட்ட கனி தர இயலாது. கெட்ட மரம் நல்ல கனி தர இயலாது. மரம் தன் இயல்பை மறுதலிக்க இயலாது.

தூய ஆவியாரின் ஆற்றலாலேயே கடவுளின் பிள்ளைகள் தங்கள் வாழ்வில் கனிதருகிறார்கள். நம்மை உண்மையான திராட்சைச் செடியோடு இணைத்த அவர் நாம் ஆவியில் கனி தர – அன்பு, மகிழ்ச்சி, அமைதி பெற்று வாழ ஆற்றல்படுத்துகிறார் (‘கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி,’ 736). நம் வாழ்வு மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளப்படும்போது கனிதருகிறது. மகிழ்ச்சி மற்றும் எதிர்நோக்கால் நாம் மற்றவர்களின் வாழ்க்கையை நிரப்பும்போது கனி நீடிக்கிறது. (‘க்றிஸ்துஸ் விவித்,’ 108).

இரு சவால்கள்: ஒன்று, போலியாக இருப்பவர்கள் பற்றி எச்சரிக்கையாக இருக்கும் நாமே எத்தனை முறை போலியாக இருக்கிறோம். நம் சொற்களும் செயல்களும் ஒன்றுக்கொன்று முரண்படுவது ஏன்? இரண்டு, நம் வெளிப்புறத்தில் மாற்றம் வரவேண்டும் எனில், நம் இயல்பிலும் மாற்றம் வர வேண்டும்.

மரத்தின் இயல்பை வெளியில் காட்டுவது கனி. மனிதரின் இயல்பை வெளியில் காட்டுவது அவருடைய சொல்லும் செயலும். மனத்தில் எண்ணங்கள் பலவாக இருக்கலாம். ஆனால், எண்ணங்கள் சொற்களாகவும் செயல்களாகவும் வெளியில் வரும்போது ஒருவர் யாரென்று நாம் அறிந்துகொள்கின்றோம். நம் உள்ளார்ந்த இயல்பு புதுப்பிக்கப்பட வேண்டும். புதுப்பிக்கப்பட்ட நம் இயல்பில் நாம் பேசும் சொற்களும் செய்யும் செயல்களும் நன்மையாகவே வெளிப்படும். அதுபோல நம் வாழ்வில் மாற்றம் வேண்டி நாம் பல முயற்சிகள் செய்கின்றோம். வெறும் செயல்களை மட்டும் மாற்ற முயற்சி செய்கின்றோம். ஆனால், உள்ளார்ந்த இயல்பு மாறினால்தான் வெளிப்புறத்திலும் மாற்றம் இருக்கும். எடுத்துக்காட்டாக, திருடுகின்ற ஒருவர் திருட்டுச் செயலை மட்டும் நிறுத்தினால் போதாது. அப்படி நிறுத்துவது சில நாட்கள் மட்டுமே நீடிக்கும். ஆனால், பேராசை என்ற உள்ளார்ந்த இயல்பு அகற்றப்பட்டால் வெளிப்புறத்தில் மாற்றம் வந்துவிடும் எளிதாக.

இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்துகொள்கிறார். உடன்படிக்கை செய்யும் நிகழ்வுக்கு முன், ஆபிரகாமின் பொறுமையின்மையைப் பார்க்கிறோம். ஆண்டவராகிய கடவுள் தனக்கு அளித்த வாக்குறுதி குறித்துப் பொறுமை இழக்கிறார் ஆபிரகாம். தன் வீட்டு அடிமை மகன் தனக்குப் பின் உரிமையாளன் ஆவான் என்று தனக்குள்ளே சொல்லிக்கொள்கிறார். ஆண்டவராகிய கடவுளின் சொல்லும் செயலும் முரணாக இருக்குமோ எனப் பயந்து போகிறார் ஆபிரகாம். ஆனால், இறைவனில் முரண் இல்லை என்பதை அவர் விரைவில் கண்டுகொள்கிறார்.

‘நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்.’ இயேசுவோடு இணைந்திருப்பவர் போலியாக இருப்பதில்லை. அவர் அனைத்திலும் கனி தருகிறார்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

One response to “இன்றைய இறைமொழி. புதன், 25 ஜூன் ’25. போலி இறைவாக்கினர்கள்”

  1. Josephine Clara Avatar
    Josephine Clara

    இயேசுவோடு இணைந்து இருந்தால் மட்டுமே நல்ல கனிகளைத் தர முடியும்.

    அதுவும் மிகுதியாகத் தர முடியும்.

    Like

Leave a reply to Josephine Clara Cancel reply