இன்றைய இறைமொழி. புதன், 5 மார்ச் ’25. வாழ்வியல் நிலை

இன்றைய இறைமொழி
புதன், 5 மார்ச் ’25
திருநீற்றுப் புதன்
யோவேல் 2:12-18. திருப்பாடல் 51. 2 கொரிந்தியர் 5:20-6:2. மத்தேயு 6:1-6, 16-18

வாழ்வியல் நிலை

திருநீறு அல்லது சாம்பல் அணிந்து இன்று நாம் தவக்காலத்திற்குள் நுழைகின்றோம்.

(1) தவக்காலம் என்றால் என்ன?

(அ) தவக்காலம் என்பது ஒரு நேரம் அல்லது காலம். இது வெறும் நாள்காட்டி நேரமாக – அதாவது, 5 மார்ச் தொடங்கி 20 ஏப்ரல் 2025 அன்று நிறைவுக்கு வருகின்ற நேரமாக – நின்றுவிடக் கூடாது. மாறாக, நம் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தக் கூடிய காலமாக இது இருந்தால் நலம்.

(ஆ) தவக்காலம் என்பது தயாரிப்புக் காலம். கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவைப் பொருளுள்ள விதத்தில் கொண்டாடுவதற்கான தயாரிப்புக் காலமாக இது இருக்கிறது.

(இ) வாழ்வின் மறுபக்கத்தைக் கொண்டாடும் காலம். நிறைய உணவு உண்ணுதலை விடுத்து பசித்திருத்தல், சேர்த்து வைத்தலை விடுத்து பகிர்ந்து கொடுத்தல், கடவுளிடமிருந்து தள்ளி வந்ததை விடுத்து அவரிடம் திரும்பிச் செல்தல் என வாழ்வின் மறுபக்கத்தை அறியவும் கொண்டாடவும் நம்மை அழைக்கிறது இக்காலம்.

(2) தவக்காலத்திற்கான வாழ்வியல் நிலை

(அ) கடவுளிடம் திரும்பி வருதல். ஏனெனில், கடவுள் நம்மிடம் திரும்பி வருகின்றார். இன்றைய முதல் வாசகத்தில் (காண். யோவே 2:12-18), ‘உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்’ என்று மக்களை அழைக்கின்றார். ஆடைகளைக் கிழித்துக் கொண்டு அழுவதை நிறுத்தி விட்டு இதயத்தைக் கிழித்துக் கொள்ளுமாறு அழைக்கின்றார்.

(ஆ) நோன்பு மற்றும் ஒறுத்தல் வழியாக நம் வாழ்வை ஒழுங்கு செய்வது. நோன்பு என்பது பசியை வலிந்து ஏற்கும் நிலை. ஒறுத்தல் என்பது இன்பத்தை விரும்பி விடும் நிலை. இப்படி ஏற்பதன் வழியாக நம் மானுட நிலையின் நொறுங்குநிலையை, உறுதியற்ற நிலையை அனுபவிக்கின்றோம்.

(இ) மற்றவர்களை நோக்கிச் செல்தல். பிறரன்புச் செயல்கள் வழியாக தேவையில் இருப்பவர்களை நாடிச் செல்லத் தவக்காலம் நம்மை அழைக்கிறது. இரக்கம் என்பது மற்றவர்களின் இருத்தலை உணர்ந்து நாம் அளிக்கும் பதிலிறுப்பு.

(3) திருநீற்றுப் புதன் முன்மொழியும் சவால்கள்

(அ) இந்நாளைப் பற்றிக்கொள்வோம். ‘இதுவே தகுந்த காலம். இதுவே மீட்பின் நேரம்’ என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் சொல்லக் கேட்கின்றோம். ‘நாளை’ என்பது இல்லை. இன்றே, இப்போதே நம்மை மாற்றும்போதுதான் வாழ்க்கை மாறுகிறது.

(ஆ) வெளிப்புற அடையாளங்களை விடுத்து, நம் உள்ளறைக்குச் செல்தல். இன்று நாம் எப்போதும் வெளியே சுற்றிக்கொண்டிருக்கின்றோம். நம்மைப் பற்றிய அந்தரங்களை சமூக வலைத்தளங்களில் அலசிப் பார்க்கின்றோம். எல்லாம் எல்லாருக்கும் தெரிய வேண்டும் என நினைக்கின்றோம். ஆனால், வாழ்வின் முதன்மையானவை அனைத்தும் நம் உள்ளறையில் உள்ளன. கதவுகளை அடைத்து உள்ளறைக்குச் செல்வது அவசியம்.

(இ) கடின இதயம் விடுத்தல். ‘உங்கள் இதயங்களைக் கடினப்படுத்திக்கொள்ள வேண்டாம். அவரது குரலுக்குச் செவிகொடுங்கள்’ என்கிறது நற்செய்திக்கு முன் வசனம். கடினப்படும் உள்ளம் மாற்றத்திற்குத் தயாராவதில்லை. உறைந்த உள்ளம் உயிரற்றதாகி விடுகின்றது. நம் உறைநிலையை விடுப்போம்.

இத்தவக்காலம் அருளின் காலமாக நமக்கு அமைவதாக!

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

One response to “இன்றைய இறைமொழி. புதன், 5 மார்ச் ’25. வாழ்வியல் நிலை”

  1. totallystupendousb4a5d24917 Avatar
    totallystupendousb4a5d24917

    நன்றி தந்தையே

    Like

Leave a reply to totallystupendousb4a5d24917 Cancel reply