இன்றைய இறைமொழி. வியாழன், 20 பிப்ரவரி ’25. நீர் மெசியா!

இன்றைய இறைமொழி
வியாழன், 20 பிப்ரவரி ’25
பொதுக்காலம் 6-ஆம் வாரம் – வியாழன்
தொடக்கநூல் 9:1-13. திருப்பாடல் 102. மாற்கு 8:27-33

நீர் மெசியா!

இன்றைய நற்செய்தி வாசகம் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது: (அ) ‘மெசியா’ வெளிப்பாடு. (ஆ) இயேசு துன்புறும் மெசியா.

இயேசு தாம் யார் என்பதை நேரடியாகத் தம் சீடர்களுக்கு அறிவிப்பதற்குப் பதிலாக தம்மைப் பற்றிய மக்களுடைய பார்வைகளையும் அவர்களுடைய கருத்துகளையும் கேட்டறிந்து அதன் வழியாக வெளிப்படுத்துகிறார். ‘மெசியா’ வெளிப்பாடு இரண்டு கேள்விகளாக நகர்கிறது: (அ) அவர்கள் என்ன சொல்கிறார்கள்? (ஆ) நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

(அ) நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?

மெசியா வெளிப்பாட்டின் தொடக்கம் மூன்றாவது நபரிடமிருந்து, நமக்கு வெளியே தனித்து நிற்கும் நபர் அல்லது நபரிடமிருந்து தொடங்குகிறது. மேலும் இங்கே சீடர்கள் பெற்றிருக்க வேண்டிய கள அறிதலும், பொது அறிவும் முன்மொழியப்படுகிறது. இயேசு திருமுழுக்கு யோவான் என்பது ஏரோதுவின் புரிதலாக இருந்தது. மெசியா வருமுன் எலியா வர வேண்டும் என்பது அக்கால எதிர்பார்ப்பாக இருந்தது. இயேசு ஓர் இறைவாக்கினர் – எலிசா போல வல்ல செயல்கள் ஆற்றுகிறவர் – என்பது மக்களிடையே பரவலான பேச்சாக இருந்தது.

(ஆ) நீங்கள் நான் யாரெனச் சொல்கிறீர்கள்?

இங்கே கேள்வி இரண்டாவது நபர் நோக்கி – முன்னிலைக்கு – நகர்கிறது. தாங்கள் இயேசுவிடம் கண்டதையும் கேட்டதையும் வைத்து சீடர்கள் தாங்களாகவே ஒரு விடையைத் தர வேண்டும். திருத்தூதர்கள் சார்பாகப் பதிலுரைக்கிற பேதுரு, ‘நீர் மெசியா!’ என்கிறார். மிகவும் சுருக்கமான விடையாக இருந்தாலும், மிகவும் ஆழமானதாகவும், வெளிப்பாடு நிறைந்ததாகவும் இருக்கிறது. இயேசுவின் சமகாலத்தில் மெசியா எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. சிலர் தங்களையே மெசியா என அறிவித்துக்கொண்டார்கள்.

வாசகத்தின் இரண்டாவது பகுதியில், இயேசு தம் பாடுகளையும், இறப்பையும், உயிர்ப்பையும் முன்னுரைக்கிறார். பேதுரு கொண்டிருந்த தவறான புரிதலைக் களைகிறார் இயேசு. துன்பத்தின் வழியேதான் மெசியா நிலையை அடைய முடியும் எனக் கற்பிக்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில், நோவாவோடு உடன்படிக்கை செய்துகொள்கிற கடவுள் அவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை பற்றி அறிவுறுத்துகிறார். கடவுளுடைய சொற்கள் அவர்களை நெறிப்படுத்துகின்றன.

நாம் கற்கும் பாடங்கள் எவை?

(அ) ‘நான் உங்களுக்கு யார்?’ என்னும் இயேசுவின் கேள்வி இன்று நம்மை நோக்கியும் வருகிறது. இந்தக் கேள்விக்கு விடையளிக்கும்போது, ‘நான் யார்?’ என்ற இருத்தல் கேள்விக்கும் நாம் விடையளிக்கிறோம். நம் தனிமையில், மௌனத்தில் ஒலிக்கும் இயேசுவின் கேள்விக்கு நாம் விடை காண முயற்சி செய்வோம்.

(ஆ) துன்பத்தின் மேன்மை. நம் மூளை இயல்பாகவே இன்பத்தை விரும்பி துன்பத்தை வெறுக்கிறது. ஆனால், துன்பம்தான் நம் வாழ்வை நாம் மேம்படுத்திக்கொள்ள உதவி செய்கிறது. நாம் துன்புறும் ஒவ்வொரு பொழுதும் வளர்கிறோம். துன்பத்திலிருந்து தப்பி ஓடுவதற்குப் பதிலாக அதைத் தழுவிக்கொள்ள முயற்சி செய்வோம்.

(இ) மேன்மையானதைத் தழுவ வேண்டுமெனில் தாழ்வானதை விட்டுவிட வேண்டும்! பேதுருவின் தவறான புரிதலைக் கடிந்துரைக்கிறார் இயேசு. மேன்மையானதைத் தழுவ வேண்டுமெனில் நம் எண்ணமும் மேன்மையானதாக இருக்க வேண்டும். கடவுள்போல இருக்க நாம் துணிந்தால் மனிதர்போலச் சிந்திக்கிற நிலையிலிருந்து விடுதலை பெற வேண்டும்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

One response to “இன்றைய இறைமொழி. வியாழன், 20 பிப்ரவரி ’25. நீர் மெசியா!”

  1. totallystupendousb4a5d24917 Avatar
    totallystupendousb4a5d24917

    Thanks dear Father

    Like

Leave a reply to totallystupendousb4a5d24917 Cancel reply