இன்றைய இறைமொழி. சனி, 4 ஜனவரி ’25. சீடத்துவத்தின் மூன்று புலங்கள்

இன்றைய இறைமொழி
சனி, 4 ஜனவரி ’25
கிறிஸ்து பிறப்புக் காலம்
1 யோவான் 3:7-10. யோவான் 1:35-42

சீடத்துவத்தின் மூன்று புலங்கள்

‘இயேசுவோடு தங்குதலும் உடனிருப்பவர்களிடம் இயேசுவைப் பற்றி அறிவிப்பதும் அவர்களை அவரிடம் கொண்டு செல்வதும் சீடத்துவத்தின் மூன்று புலங்கள் ஆகும்.’

இயேசுவின் முதற்சீடர்கள் அழைக்கும் நிகழ்வைப் பதிவு செய்கிற ஒத்தமைவு நற்செய்தியாளர்கள், அந்நிகழ்வு கலிலேயக் கடலோரத்தில் நடப்பதாகவும் இயேசுவே தாமாக அவர்களை அழைப்பதாகவும் பதிவு செய்கிறார்கள். மேலும், திருத்தூதர்களை இயேசு அழைப்பதன் நோக்கம் அவர்கள் தம்மோடு இருப்பதற்கும், நற்செய்தியை அறிவிக்கவும் பேய்களை ஓட்டவும் அனுப்பப்படுவதற்கும் ஆகும் (காண். மாற் 3:14-15).

நான்காம் நற்செய்தியில் (யோவான்), இந்நிகழ்வு முற்றிலும் வித்தியாசமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. திருமுழுக்கு யோவான் இயேசுவைப் பற்றிச் சுட்டிக்காட்டியவுடன் முதற்சீடர்கள் அவரைப் பின்தொடர்கிறார்கள். அவர்கள் இயேசுவோடு தங்குகிறார்கள். இயேசுவைப் பற்றி மற்றவர்களுக்கு அறிவித்து அவர்களையும் இயேசுவிடம் கொண்டு வருகிறார்கள்.

(அ) அவரோடு தங்குதல்

‘என்ன தேடுகிறீர்கள்?’ – இச்சொற்கள்தாம் யோவான் நற்செய்தியில் இயேசு பேசுகிற முதல் சொற்கள். இக்கேள்வி சீடர்களைப் பார்த்து மட்டுமல்ல, வாசகராகிய நம்மைப் பார்த்தும் கேட்கப்படுகிறது. சீடர்கள்போலவே நாமும் பதில் தெரியாமல் வேறு ஒரு கேள்வியை எழுப்புகிறோம்: ‘நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?’ கேள்விக்கு எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல், ‘வந்து பாருங்கள்’ (வந்து நீங்களே பாருங்கள்!) எனச் சொல்கிறார் இயேசு. ‘தங்குதல்’ அல்லது ‘இணைந்திருத்தல்’ என்பது யோவான் நற்செய்தியில் முதன்மையான கருத்துரு ஆகும். இயேசுவோடு தங்குதலில்தான் சீடத்துவம் தொடங்குகிறது.

(ஆ) அவரை அறிவித்தல்

இயேசுவோடு தங்கியிருந்த இருவரில் ஒருவரான அந்திரேயா அவருடைய சகோதரர் சீமோனிடம் போய், ‘நாங்கள் மெசியாவைக் கண்டோம்!’ எனச் சான்று பகர்ந்து அறிவிக்கிறார். நாம் எதைக் காட்டுகிறோமோ அதை மட்டும்தான் மற்றவர்கள் அறிவார்கள். இயேசுவைப் பற்றி மற்றவர்கள் அறிய வேண்டுமெனில் நாம் அவர்களுக்கு அவரைப் பற்றிக் காட்ட வேண்டும்.

(இ) அவரிடம் கொண்டுவருதல்

அந்திரேயா சீமோனை இயேசுவிடம் அழைத்துவருகிறார். இயேசுவைச் சந்தித்தவுடன் சீமோனுடைய வாழ்க்கை மாற்றம் பெறுகிறது. ‘கேபா’ என்னும் புதிய பெயரையும், புதிய அழைத்தலையும் பெறுகிறார் சீமோன். இப்போது அந்திரேயா போல அவர் இயேசுவோடு தங்க வேண்டும், அவரைப் பற்றி அறிவிக்க வேண்டும், அவரிடம் மற்றவர்களைக் கொண்டுவர வேண்டும்.

சீடத்துவம் இங்கே எம்.எல்.எம் (மல்டிலெவல் மார்க்கெடிங்) போல வளர்கிறது. திருமுழுக்கு யோவானிடமிருந்து அந்திரேயா, அந்திரேயாவிடமிருந்து பேதுரு என சீடத்துவ வட்டம் வேகமாக வளரத் தொடங்குகிறது.

ஆக, சீடத்துவம் நாம் கற்கவேண்டிய முதற்பாடம். ஒரு முக்கோணத்தின் மூன்று புலங்களும் மேற்காணும் மூன்று செயல்கள் சீடத்துவத்தை வரையறுக்கின்றன.

இரண்டாவதாக, நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் உரையாடல் சொற்கள் அனைத்தும் இயேசுவை நோக்கியதாகவே இருக்கின்றன. நம் வாழ்வில் நாம் உதிர்க்கும் வார்த்தைகள் அனைத்தும் வார்த்தையாகிய இறைவனை நோக்கியதாகவே இருக்க வேண்டும்.

மூன்றாவதாக, சீடத்துவத்துக்குள் நுழையும் ஒவ்வொருவரும் அடுத்தடுத்து தம்மையே மறைத்துக்கொள்கிறார். இறுதியில் இயேசு மட்டுமே தெரிகிறார். முதலில் சுட்டிக்காட்டிய திருமுழுக்கு யோவான் முதற்சீடர்களின் பின்னால் மறைந்துகொள்கிறார். அந்திரேயா பேதுருவின் பின்னால் மறைந்துகொள்கிறார். சீடர்கள் ஒருபோதும் தலைவரின் இடத்தை எடுத்துக்கொள்ள இயலாது.

இறுதியாக, சீடத்துவம் என்பது அருள்பணியாளர்கள் மற்றும் துறவற வாழ்வுக்கான அழைத்தல்நிலை என நம் புரிதலைச் சுருக்கிவிடக் கூடாது. அழைத்தல்நிலையைத் தாண்டி அனுபவ நிலையில் நிற்கிறது சீடத்துவம். இயேசுவோடு இன்று தங்குவது என்றால் அவருடைய சொற்களைக் கேட்பது, நற்கருணையில் அவரைச் சந்திப்பது, அருளடையாளங்களில் அவரைக் கொண்டாடுவது போன்றவை ஆகும்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

2 responses to “இன்றைய இறைமொழி. சனி, 4 ஜனவரி ’25. சீடத்துவத்தின் மூன்று புலங்கள்”

  1. totallystupendousb4a5d24917 Avatar
    totallystupendousb4a5d24917

    Thanks dear Father

    Like

    1. Francis Avatar
      Francis

      Good.

      Like

Leave a reply to totallystupendousb4a5d24917 Cancel reply