இன்றைய இறைமொழி
செவ்வாய், 23 ஏப்ரல் 2024
பாஸ்கா காலம் 4-ஆம் வாரம் – செவ்வாய்
திப 11:19-26. யோவா 10:22-30
பெரியவற்றைக் காணுதல்
‘சிறியவற்றில் பெரியவற்றைக் காணுதலே ஞானம்’ என்பதற்கு விவிலியம் சான்று பகர்கிறது. கீழ்த்திசை ஞானியர் சிறிய குழந்தையில் பெரிய கடவுளைக் கண்டு அவர்முன் நெடுஞ்சாண்கிடையாக விழுகிறார்கள்.
எருசலேமில் கோவில் அர்ப்பண விழாவின்போது இயேசுவைச் சந்திக்கிற யூதர்கள் அவரிடம் எழுப்பும் கேள்வியும், அந்தக் கேள்விக்கு இயேசு தரும் பதிலுமே இன்றைய நற்செய்தி வாசகம். ‘இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும்? நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்!’ எனக் கேட்கிறார்கள் யூதர்கள். இக்கேள்வியில் நம்பிக்கைத் தேடல் அல்ல, மாறாக, வெற்று ஆர்வமே அடங்கியுள்ளது என்பது நமக்குப் புலப்படுகிறது.
இயேசு அவர்களுக்கு நேரிடையாகப் பதில் தராமல், ‘நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்!’ என்று மொழிகிறார்.
இந்த நற்செய்திப் பகுதி, இயேசுவைப் பற்றிய மூன்று பார்வைகளை நமக்குத் தருகிறது: (அ) இயேசு ஒரு திருப்பயணி, (ஆ) இயேசு ஒரு மெசியா, (இ) இயேசுவே இறைமகன்.
எருசலேம் கோவில் அர்ப்பண விழா என்பது கட்டாயத் திருவிழா இல்லை என்றாலும், இயேசு ஒரு திருப்பயணி போல எருசலேம் நோக்கிப் பயணம் செய்கிறார். இப்போது அர்ப்பணம் செய்யப்படுகிற கோவிலை எடுத்துவிட்டு, நிரப்ப வந்த கடவுள் என்பதை மக்கள் கண்டுகொள்ளவில்லை. அவர்களுடைய பார்வை கொஞ்சம் பெரியதாக இருக்கிறது. இயேசு மெசியாவாக இருப்பாரோ என்னும் ஐயம் அவர்களுக்கு எழுகிறது. இந்த ஐயத்தை அவர்கள் தாங்களாகவே தங்களுடைய நம்பிக்கைப் பார்வையாலேயே சரிசெய்துகொள்ள வேண்டும் என்பதை அறியவில்லை. இயேசு தாம் இறைமகன் என வெளிப்படுத்துகிறார்.
இயேசுவே தம்மை வெளிப்படுத்தாவிடில் அவரை நாம் கண்டுகொள்ள முடியாது என்பதும் இங்கே புலப்படுகிறது.
இயேசு இன்றும் நம் கண்முன் நிற்கிறார்: மனிதராக, மெசியாவாக, இறைமகனாக. நாம் அவரைக் கண்டுகொள்ள வேண்டுமெனில், சிறியவற்றிலும் பெரியவற்றைக் காணும் ஞானம் பெற வேண்டும். இந்த ஞானம் எப்படி நமக்கு வரும்?
இயேசுவே இதற்கான விடையைத் தருகிறார்: (அ) இயேசுவின்மேல் நம்பிக்கை. (ஆ) இயேசுவின் குரல் கேட்கும் ஆட்டுக்குட்டியாக இருத்தல். (இ) இயேசுவைப் பின்தொடர்தல்.
இன்றைய முதல் வாசகத்தில், கடவுளின் திருஅவை பெறுகிற வளர்ச்சியையும் அந்தியோக்கியை நோக்கிய அதன் பயணத்தையும் எடுத்துரைக்கிறார் லூக்கா. இந்த வாசகத்தில் முதன்மையான நபராக இருப்பவர் பர்னபா.
இவருடைய நான்கு பண்புகளைக் குறிப்பிடுகிறார் லூக்கா: (அ) கடவுளின் அருள்செயலைக் கண்டு அவர் மகிழ்ந்தார். (ஆ) அனைவரையும் ஊக்கப்படுத்தினார். (இ) அவர் நல்லவராக இருந்தார். (ஈ) சவுலைத் தேடி அழைத்து வந்து பணிக்கு அமர்த்துகிறார். சவுலின் இறையழைத்தல் ஊக்குநராக, அவருடைய பணியை நெறிப்படுத்துபவராக இருக்கிறார்.
இவற்றுக்கு அடிப்படையாக இருந்தது பர்னபாவின் நம்பிக்கைப் பார்வை. சிறியவற்றில் பெரிய ஆற்றலைக் கண்ட பர்னபா நமக்கு ஒரு முன்மாதிரி.
நிற்க.
‘வாழ்வின் எதார்த்தங்களைக் கண்டு சோர்வும் விரக்தியும் அடைகிற நாம் சில நேரங்களில் யோபு போல, ‘எங்கே என் எதிர்நோக்கு? என் எதிர்நோக்கைக் காண்பவர் யார்?’ (17:15) எனக் கேட்கிறோம். ஆனால், மனித வாழ்வை நிர்ணயிக்கும், நகர்த்தும் அடிப்படையான மதிப்பீடு எதிர்நோக்கு. எதிர்நோக்கு நம் வாழ்வுக்கு சுவை தருகிற உப்பு போன்றது,’ என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 79)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a reply to Savarimuthu Joseph Rathinam Cancel reply