இன்றைய இறைமொழி
வெள்ளி, 19 ஏப்ரல் 2024
பாஸ்கா காலம் 3-ஆம் வாரம் – வெள்ளி
திப 9:1-20. யோவா 6:52-59
பாதை மாறுதல்
‘அவரோடு‘ என்னும் விருதுவாக்குடன் 2009-ஆம் ஆண்டு (19 ஏப்ரல்) தொடங்கிய என் குருத்துவப் பயணம் இன்று 15-ஆவது மைல்கல்லைக் கடக்கிறது. ‘அவரோடு’ எனத் தொடங்கிய நான், ‘அவரோடு விதைப்பவர் [with him, the SOWER – இறைவார்த்தை (வார்த்தைகள்), பரிவு, எதிர்த்தகைவுக்காக அனுப்பப்படுதல் [Sent Out for Word/Words, Empathy, and Resilience]‘ என்று அழைத்தலின் மற்ற பரிமாணம் நோக்கி நகர்கிறேன். ‘அருள்பணியாளர் [priest], இரக்கத்தின் தூதுவர் [missionary of mercy], எழுத்தாளர் [content writer], மொழிபெயர்ப்பாளர் [translator], திருமறைநூல்கள் ஊடிணக்க ஆர்வலர் [inter-scriptural scholar], மென்திறன் பயிற்றுநர்’ [soft skills mentor] என்னும் ஆறு நிலைகளில் என் பணிகளை இன்றுமுதல் கூர்மைப்படுத்திக்கொள்ள விழைகிறேன். வழித்துணையாய் உடன்வரும் உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி, வழியாம் கிறிஸ்துவைப் பற்றிக்கொள்கிறேன் இறுக!’
நிற்க.
ஸ்தேவான் கல்லெறியப்படும்போது துணிகளைச் சேகரித்துக் காவல் காத்துக்கொண்டிருந்த சவுல், ஒவ்வோர் இல்லமாகச் சென்று புதிய நம்பிக்கையாளர்களைத் துன்புறுத்திய சவுல், தமஸ்கு நகர் செல்லும் வழியில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவால் தடுத்தாட்கொள்ளப்படும் நிகழ்வை இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம். இவ்வாசகப் பகுதியில் வரும் சொல்லாடல்கள் நம் சிந்தனையைத் தூண்டுகின்றன:
(அ) ‘உனக்குச் சொல்லப்படும்!’
‘நீ நகருக்குள் செல். நீ என்ன செய்ய வேண்டும் என்பது அங்கே உனக்குச் சொல்லப்படும்’ என்று சவுலை நோக்கி ஆண்டவர் சொல்கின்றார். அல்லது இப்படியாக ஆண்டவரின் குரல் சவுலின் செவிகளில் விழுகின்றது. இங்கு ஓர் ஆச்சர்யமான முரண் இருக்கிறது. தனக்கென ஓர் இலக்கு வைத்துக்கொண்டு, தன் பணியினைத் தெளிவாக வரையறுத்துக்கொண்டு, தன் பணிக்குத் தேவையான பரிந்துரைக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டு புறப்பட்ட சவுலின் பயணம் தடைபடுகிறது. அவர் தனக்கென வைத்திருந்த திட்டம் எதுவும் இனி செல்லாது. அவர் இனி என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்குச் சொல்லப்படுமே தவிர, அவராக இனி எதுவும் செய்ய இயலாது. ‘ஒருவருக்குச் சொல்லப்படும்’ என்பது படைப்பிரிவினரின் வார்த்தை. படைப்பிரிவில் உள்ளவர்கள் தங்களுக்கென்று எந்தவொரு திட்டமும் வைத்துச் செயல்பட இயலாது. தங்கள் தலைவரின் கட்டளை ஒன்றை நிறைவேற்றுவது மட்டுமே அவர்களுடைய பணி. ஆக, தனக்குத் தானே தலைவராக இருந்து செயல்பட்ட சவுலைத் தடுத்தாட்கொள்கின்ற ஆண்டவராகிய இயேசு, இதுமுதல் சவுலின் தலைவராக மாறுகின்றார். இனி எல்லாமே அவருக்குச் சொல்லப்படும்.
(ஆ) ‘நான் தேர்ந்தெடுத்துள்ள கருவி’
இங்கே பவுலின் நோக்கு வாக்கியத்தை மிக அழகாக எழுதுகின்றார் லூக்கா: ‘அவர் (சவுல்) பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச் செல்ல நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட கருவியாய் இருக்கிறார்.’ ஆண்டவருடைய கைகளில் உள்ள ஒரு கருவி சவுல். கருவியைப் பயன்படுத்துபவரைப் பொருத்தே கருவி மதிப்பு பெறுகின்றது. கருவி ஒருபோதும் தன் திட்டப்படி செயல்பட இயலாது. தான் யார் கையில் இருக்கிறோமோ அவருக்கு மட்டுமே அது முழுமையான சொந்தமாக இருப்பதால், அவரின் திட்டத்தை மட்டுமே கருவி செயல்படுத்தும்.
(இ) ‘உடனடியாக பறைசாற்றத் தொடங்கினார்’
புதிய பார்வை பெறுகின்ற சவுல், உணவு உண்டு வலிமை பெற்றபின் சீடர்களோடு தங்கியிருக்கின்றார். பின் இயேசுவே இறைமகன் என்று அறிவிக்கத் தொடங்குகிறார். சவுல் தன் போதனையைத் தொடங்கியபோது நிறைய எதிர்ப்புகள் வந்திருக்கும். அவருடைய பழைய காலத்தைச் சுட்டிக்காட்டி, பலர் அவரைப் பற்றி இடறல்பட்டிருப்பார்கள். அவர் நற்செய்தி அறிவிப்பது போல நடித்து மக்களை ஈர்த்து துன்புறுத்துவாரோ? என்ற கலக்கம் கொண்டிருப்பார்கள். ஆனால், பவுல் அதைப் பொருட்படுத்தவே இல்லை. ‘உன் நிகழ்காலத்தை ஏற்றுக்கொள்ள இயலாதவர்கள் உன் இறந்தகாலத்தை எடுத்து உன்னைக் கறைப்படுத்த நினைப்பார்கள்’ என்பது ஞானக்கூறு. தன்னைப் பற்றிய கறை எளிதில் அழிக்க இயலாததாக இருந்தாலும், பவுல் துணிந்து நற்செய்தி அறிவிக்கின்றார். அவர் பெற்ற அனுபவத்தை யாரும் கறைப்படுத்த இயலாது.
இன்று பாதை மாற்றம் நம் வாழ்விலும் வருகிறது. ‘பாதை மாறுவதே பயணம்’ என்னும் எதார்த்தத்தை நாம் ஏற்றுக்கொள்தல் நலம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் பேருரையைக் கேட்கிற யூதர்கள், ‘நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?’ என்ற தங்களுக்குள்ளே வாக்குவாதம் செய்கிறார்கள். இவர்களுக்கு விடையளிக்கிற இயேசு தாம் இதுவரை உரைத்ததன் சுருக்கத்தைச் சொல்கிறார். ‘எனது சதை, இரத்தம்’ என அவர் மொழிவதை, அவருடைய கல்வாரிப் பலி என்றும் நற்கருணை என்றும் புரிந்துகொள்ளலாம்.
பாலைநிலத்தில் மன்னா உண்டதால் நிறைவு பெற்று தங்கள் நம்பிக்கைப் பார்வையைச் சுருக்கிக்கொண்டவர்களின் பாதையைத் திருப்பிவிடுகிறார் இயேசு.
‘பாதை மாறுவதே பயணம்!’
நிற்க.
‘எதிர்நோக்கு கொண்ட ஒருவர் தன் வாழ்வை வித்தியாசமாக வாழ்கிறார்’ – திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 76)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a reply to srleema Cancel reply