இன்றைய இறைமொழி. வெள்ளி, 23 பிப்ரவரி 2024. மேலான நெறி

இன்றைய இறைமொழி
வெள்ளி, 23 பிப்ரவரி 2024
தவக்காலம் முதல் வாரத்தின் வெள்ளி
எசேக்கியேல் 18:21-28. மத்தேயு 5:20-26

மேலான நெறி

தீமையை விடுத்து நன்மையைப் பற்றிக்கொள்வதும், நன்மையைப் பற்றிக்கொள்பவர் அதில் தொடர்ந்து நிலைத்து நிற்பதும், செயல்களைத் தாண்டி மனப்பாங்கு நோக்கிப் பயணம் செய்வதும் மேலான நெறி எனக் கற்பிக்கின்றன இன்றைய வாசகங்கள்.

இஸ்ரயேல் மக்களோடு வழக்காடுகிற ஆண்டவராகிய கடவுள், ”தலைவரின் வழி செம்மையானதாக இல்லை’ என்று நீங்கள் சொல்கிறீர்கள். இஸ்ரயேல் வீட்டாரே! கேளுங்கள். என் வழியா நேர்மையற்றது? உங்கள் வழிகள் அன்றோ நேர்மையற்றவை!’ என மொழிகிறார்.

ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களைத் தம் சொந்த இனம் என்று தெரிந்துகொண்டு அவர்களோடு உடன்படிக்கை செய்துகொள்கிறார். தம் பிள்ளைகள்போல எண்ணிப் பேணிக்காத்து வருகிறார். ஆனால், அவர்கள் சிலைவழிபாடு செய்து தம்மை விட்டுத் திரும்பியபோது, அவர்களை பாபிலோனிய நாடுகடத்தலுக்குக் கையளிக்கிறார். ஆண்டவராகிய கடவுள் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையை மறந்துவிட்டார் என ஆண்டவரைப் பழித்துரைக்கிறார்கள் இஸ்ரயேல் மக்கள். அவர்கள் செய்த தவற்றை ஏற்றுக்கொள்வதை விடுத்து ஆண்டவரைக் குறைகூறினார்கள். ‘ஆண்டவர் நேர்மையாக நடந்துகொள்ளவில்லை’ என்னும் அவர்களுடைய பழிச்சொல்லுக்கு விடையளிக்கிற கடவுள், அவர்களுடைய தவற்றைச் சுட்டிக்காட்டுவதுடன், ஒருவர் செய்கிற தவற்றுக்கு ஏற்ற தண்டனையை அவர் பெறுகிறார் என மொழிகிறார்.

நல்லவர் நல்லவற்றை விடுத்துத் தீமையை நோக்கிச் சென்றால் அவர் தண்டிக்கப்படுவார் என்கிறார். அதாவது, ஒருவரின் முந்தைய நன்மையை முன்னிட்டு அவர் காப்பாற்றப்படமாட்டார். அல்லது, ‘நான் அன்று நல்லவராக இருந்தேன், அதுவே போதும், இன்று நான் எப்படி இருந்தாலும் பரவாயில்லை’ என்று சொல்லி பழம்பெருமை பாராட்ட இயலாது. அதே வேளையில், தீயவர் தீயவற்றை விடுத்து நன்மையைப் பற்றிக்கொண்டால் அவர் வாழ்வு பெறுவார். அவருடைய பழைய தீமைகளும் மன்னிக்கப்படும்.

ஆக, தீமையை விட்டு நன்மையை மட்டுமே பற்றிக்கொள்ளவும், நன்மையைப் பற்றிக்கொண்டவர் அதில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதும் முதல் வாசகம் மொழிகிற செய்தியாக இருக்கிறது.

நற்செய்தி வாசகத்தில், தம் சீடர்களின் நெறி மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிடச் சிறந்திருக்க வேண்டும் என மொழிகிற இயேசு, ‘கொலை செய்யாதே!’ என்னும் சட்டம் பற்றிய புதிய புரிதலைத் தருகிறார். கொலை என்னும் வெளிப்புறச் செயலை மையப்படுத்திய இச்சட்டத்தை சற்றே நீட்டி, கோபம் என்னும் உள்புற மனப்பாங்கை நோக்கை நம்மைத் திருப்புகிறார் இயேசு.

மேலும், நிறைவான பலியை ஒப்புக்கொடுக்க வேண்டுமெனில் மனத்தாங்கல் இல்லாத நிறைவான மனம் வேண்டும் எனவும், மனத்தாங்கல் உடனடியாக ஒப்புரவாக மாற வேண்டும் எனவும் கற்பிக்கிறார். உடனடியான விரைவான ஒப்புரவு எதிரிகளின் கைகளினின்று நம்மை விடுவித்து நமக்கு வாழ்வைத் தரும்.

நம் நேரிய செயல்கள் ஒரு புறம் இருக்க, இன்னொரு பக்கம் நாம் கடவுளின் இரக்கத்தையும் நினைவில் கொள்ள வேண்டும் என அழைக்கிறது இன்றைய பதிலுரைப்பாடல்: ‘ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்? நீரோ மன்னிப்பு அளிப்பவர். மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர்!’ (காண். திபா 130).

நிற்க.

யூபிலிக் கொண்டாட்டத்தின் பொருள் பற்றிப் பேசுகிற மோசே, யூபிலி ஆண்டில் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவராகிய கடவுளோடும், ஒருவர் மற்றவரோடும் ஒப்புரவாக வேண்டிய அவசியத்தைச் சுட்டிக்காட்டுகிறார்: ‘ஐம்பதாம் ஆண்டைத் தூயதாக்கி, நாட்டில் வாழ்வோருக்கெல்லாம் தன்னுரிமை அறிவியுங்கள். அது உங்கள் யூபிலி ஆண்டு. அந்த ஆண்டில் நீங்கள் உங்கள் நிலப்பகுதிக்கும், உங்கள் இனத்தாரிடமும் திரும்ப வேண்டும் … உங்களுள் எவரும் தம் இனத்தாரை ஏமாற்றலாகாது. கடவுளுக்கு அஞ்சி நடங்கள்! ஏனெனில் நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!’ (லேவி 25:10, 17). (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 38).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

One response to “இன்றைய இறைமொழி. வெள்ளி, 23 பிப்ரவரி 2024. மேலான நெறி”

  1. srleema Avatar

    Dear Fr Yesu Karuna todays Reflection keeps me careful observation on my path not to satisfy with previous achivements.thank you Good night

    Like

Leave a comment