இன்றைய இறைமொழி. திங்கள், 12 பிப்ரவரி 2024. வானத்திலிருந்து அடையாளம்

இன்றைய இறைமொழி
திங்கள், 12 பிப்ரவரி 2024
பொதுக்காலம் 6-ஆம் வாரத்தின் திங்கள்
யாக்கோபு 1:1-11. மாற்கு 8:11-13

வானத்திலிருந்து அடையாளம்

வானத்திற்குக் கீழே உள்ள அடையாளங்களைக் கண்டறிய இயலாதவர்கள் வானத்திலிருந்து வரும் அடையாளங்களையும் கண்டறிய இயலாது என்பதால் அவர்களுக்கு வேறு எந்த அடையாளமும் வழங்கப்படாது.

இயேசு விண்ணேற்றம் அடையும் நிகழ்வில், திருத்தூதர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தபோது, அவர்களுக்குத் தோன்றுகிற வெண்ணிற ஆடை அணிந்த இருவர், ‘நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக்கொண்டே நிற்கிறீர்கள்?’ எனக் கேட்கிறார். இவ்வாறாக, வானத்துக்குக் கீழே உள்ளவற்றைப் பார்க்குமாறு தூண்டுகிறார்கள் தூதர்கள் (காண். திப 1).

‘பரிசேயர் வந்து இயேசுவோடு வாதாடத் தொடங்கினர்’ எனத் தொடங்குகிறது நற்செய்தி வாசகம். வாதாடுவதற்கான பொருள், சூழல் குறிப்பிடப்படவில்லை. தொடர்ந்து, ‘வானிலிருந்து ஓர் அடையாளம் காட்டும்!’ என இயேசுவிடம் கேட்கிறார்கள் அவர்கள். அடையாளம் தர மறுக்கிற இயேசு படகேறி மறுகரைக்குச் செல்கிறார்.

நிகழ்வில் நாம் காணும் பரிசேயர்களின் தவறு இரண்டு: (அ) வானத்திலிருந்து இறங்கி வந்த இயேசுவே இறையாட்சியின் அடையாளம் என்பதை அவர்கள் அறியவில்லை. (ஆ) வானத்திற்குக் கீழே இயேசு ஆற்றிய போதனைகளும் நிகழ்த்திய வல்ல செயல்களும் தங்கள் கண்முன்னே நடந்தாலும் அவர்கள் அவற்றின் வழியாக இயேசு யார் என்பதைக் கண்டுணரவில்லை.

ஏற்கெனவே தாங்கள் கண்ட, காணுகிற அடையாளங்களைத் தவிர்த்துவிட்டு, புதிய அடையாளத்தைத் தேடிச் செல்கிறார்கள்.

முதல் ஏற்பாட்டில் அடையாளங்கள் கேட்டு கடவுளைச் சோதிக்கும் நிகழ்வுகளை நாம் வாசிக்கிறோம். கடவுள் தங்களோடு இருக்கிறாரா என்பதை அறிந்துகொள்ளவும், கடவுள் தங்கள் சார்பாக செயலாற்றுகிறாரா என்பதைத் தேர்ந்து தெளியவும் மக்கள் அடையாளங்கள் அல்லது அறிகுறிகள் கேட்கிறார்கள்.

‘நம்புகிறவர்கள் அடையாளங்கள் தேடுவதில்லை. அடையாளங்கள் தேடுபவர்கள் நம்புவதில்லை’ என்கிறார் அக்வினா நகர் தோமா.

அருளடையாளங்கள் பற்றிய நம் புரிதலை நாம் எண்ணிப்பார்ப்போம். கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களாகிய நாம் ஏழு அருளடையாளங்களைக் கொண்டாடுகிறோம். இவை யாவும் கடவுள் நம்மோடு இருக்கிறார், கடவுள் நமக்கு இரக்கம் காட்டுகிறார், கடவுள் நம்மை வழிநடத்துகிறார் என்பதற்கான அடையாளங்களாக இருக்கின்றன.

‘அருளடையாளங்களின் செல்லத் தகுநிலை’ பற்றிக் கடந்த வாரம் வத்திக்கான் திருப்பேராயம் (நம்பிக்கைக் கோட்பாடு சார்ந்த) வெளியிட்டுள்ள ‘ஜெஸ்திஸ் வெர்பிஸ்க்வே’ (‘செயல்களும் சொற்களும்;’) என்னும் பாடம், தன் படைப்பாற்றலைப் பயன்படுத்தி அருளடையாளங்களின் உட்பொருளையும் வடிவத்தையும் மாற்றுகிற அருள்பணியாளர், தன்னை முதன்மைப்படுத்துகிறாரே அன்றி, கிறிஸ்துவையும் கிறிஸ்து தருகிற அருளையும் முதன்மைப்படுத்துவதில்லை என மொழிகிறது. மேலும், ஒவ்வோர் அருளடையாளக் கொண்டாட்டமும் கடவுளின் உடனிருத்தலை நமக்குத் தொடர்ந்து உணர்த்துகிறது என்கிறது இந்த ஏடு. (யூபிலி கி.பி. 2025 துணுக்கு 29).

இன்றைய முதல் வாசகத்தில், சோதனை, துன்பம், நம்பிக்கை, மனவுறுதி, ஞானம் பற்றித் தன் திருஅவைக்கு அறிவுறுத்துகிற யாக்கோபு, இறைவேண்டலில் நாம் தவிர்க்க வேண்டிய ஐயப்பாடு, பிளவுபட்ட உள்ளம், இருமனம் பற்றிப் பேசுகிறார். இருமனம் கொண்டவர்கள் அடையாளங்களைக் கண்டாலும் இயேசுவை நம்புவதில்லை.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

One response to “இன்றைய இறைமொழி. திங்கள், 12 பிப்ரவரி 2024. வானத்திலிருந்து அடையாளம்”

  1. charlesgp1953 Avatar
    charlesgp1953

    Thanks.

    Like

Leave a comment