இன்றைய இறைமொழி. ஞாயிறு, 11 பிப்ரவரி 2024. அவர் நலமடைந்தார்!

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 11 பிப்ரவரி 2024
ஆண்டின் பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு
32-ஆவது உலக நோயுற்றோர் நாள்
லேவியர் 13:1-2, 44-46. 1 கொரிந்தியர் 10:31-11:1. மாற்கு 1:40-45

அவர் நலமடைந்தார்!

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 11-ஆம் நாளில், அன்னை கன்னி மரியாவை லூர்து அன்னையாக நினைவுகூர்கிற அன்று, உலக நோயுற்றோர் நாளைக் கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு 32-ஆவது உலக நோயுற்றோர் நாளின் செய்தியாக ‘மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று: உறவுகளைக் குணமாக்குவதன் வழியாக நோயுற்றோரைக் குணமாக்குதல்‘ என்னும் தலைப்பில் செய்தி வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தையின் செய்தியையும் இந்நாளின் வாசகங்களையும் இணைத்து இன்றைய நாளில் சிந்திப்போம்.

இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்களில் மையமாக இருக்கின்ற ஒரு வார்த்தை ‘தொழுநோய்.’ தொழுநோய் பீடித்தவர் ‘நடைபிணம்’ என்று அந்த நாள்களில் கருதப்பட்டார் தொழுநோயாளர் அன்றைய எபிரேய மற்றும் கானானிய சமூகத்தில் மூவகை துன்பங்களை அனுபவித்தார்:

(அ) உடல்சார் துன்பம்: தொழுநோய் பீடித்த உடல் புண்களால் நிறைந்து நாற்றமெடுக்கும். தோலின் நிறம் மாறும். தோல் தன் உணரும் தன்மையை இழக்கும். தோலுக்கு உணரும் தன்மை இல்லாததால் நாய் அல்லது பூனை புண்களை நக்கினாலும், எறும்புகள் அல்லது ஈக்கள் மொய்த்தாலும் உணர முடியாது. கை மற்றும் கால் விரல்கள் சூம்பிப் போகும். மருந்துகள் இல்லாத நிலையில் இறப்பு ஒன்றே இதற்கான மருந்து என்று கருதப்பட்டது.

(ஆ) உறவுசார் துன்பம்: தொழுநோய் ஒருவர் மற்றவருக்குப் பரவக் கூடிய நோய் என்பதாலும், மருந்துகள் அல்லது தடுப்பு மருந்துகள் இல்லாத நிலையில் சமூகப் பரவலைத் தடுப்பதற்காக, நோயுற்ற நபரைத் தொற்றொதுக்கம் செய்வது வழக்கம். இப்படியாக தொழுநோய் பீடித்த ஒருவர் அவருடைய குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து பிரித்துவைக்கப்பட்டதால் உறவுசார் துன்பத்தையும் அவர் அனுபவிக்க நேரிட்டது.

(இ) சமயம்சார் துன்பம்: ஒருவர் தான் செய்த பாவத்திற்கு கடவுள் தரும் தண்டனையே தொழுநோய் என்று கருதப்பட்டது. கடவுளால் மட்டுமே இதைக் குணமாக்க இயலும் (காண். நாமான் நிகழ்வு) என்ற நிலை இருந்ததால், இந்நோய் பீடிக்கப்பட்டவர் கடவுளின் சாபத்துக்கு ஆளானவராகக் கருதப்பட்டார்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். லேவி 13), தொழுநோய் பீடித்தவரை எப்படித் தொற்றொதுக்கம் செய்ய வேண்டும் எனவும், அவர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றியும் ஆண்டவர் மோசே மற்றும் ஆரோனுக்கு வலியுறுத்துகிறார். கடவுளிடமிருந்து வரும் பாவம் என்று கருதப்பட்டதால் குருக்களே இந்நோய் பற்றிய தொற்றொதுக்கத்தை அனுமதிப்பவர்களாகவும், மீண்டும் மக்களை ஊருக்குள் அழைப்பவர்களாகவும் இருக்கின்றனர். தொழுநோய் என்பது கடவுள் மோசேக்குத் தரும் அடையாளமாகவும், முணுமுணுத்த மிரியாமுக்கு அவர் வழங்கிய தண்டனையாகவும் இருக்கிறது.

இரண்டாம் வாசகத்தில், புனித பவுல் கொரிந்து நகரக் குழுமத்தில் எழுந்த உணவுசார்ந்த பிரச்சினை ஒன்றைப் பற்றி அவர்களுக்கு அறிவுறுத்துகின்றார். சிலைகளுக்குப் படைத்தவற்றை உண்பதா வேண்டாமா என்ற பிரச்சினை கொரிந்து நகரில் எழுகின்றது. கொரிந்து நகரில் இருவகையான நம்பிக்கையாளர்கள் இருந்தனர். முதல் வகையினர் தங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருந்தனர். சிலைகளுக்குப் படைக்கப்பட்டதை உண்டதால் தங்கள் நம்பிக்கை மறைந்து போகும் என்று எண்ணவில்லை. இரண்டாம் வகையினர் நம்பிக்கையில் வலுவற்று இருந்தனர். சிலைகளுக்குப் படைக்கப்பட்ட உணவு இவர்களைப் பொருத்தவரையில் ஓர் இடறலாகக் கருதப்பட்டது. நம்பிக்கையில் வலுக்குறைந்து நின்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் மற்ற குழுவினர் சிலைகளுக்குப் படைக்கப்பட்டதை உண்டனர். அவர்களுக்கு அறிவுறுத்துகின்ற பவுல், ‘நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்ய வேண்டும் எனவும்,’ மேலும் ‘ஒருவர் மற்றவருக்குப் பயன்தருவதையே நாட வேண்டும்’ என்றும் சொல்கின்றார். இவ்வாறாக, அவர்கள் மற்றவர்களைப் பற்றிய அக்கறை கொண்டிருக்க அழைக்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில், தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வருகின்றார். அவர் இயேசுவை எங்கே சந்திக்கிறார் என்று தெரியவில்லை. தொழுநோயாளர் வசிக்கும் இடத்திற்கு இயேசு சென்றாரா, அல்லது ‘தீட்டு, தீட்டு’ என்று கத்திக்கொண்டே தொழுநோயாளர் இயேசுவிடம் வந்தாரா என்ற குறிப்பு இல்லை. மேற்காணும் இரண்டு நிலைகளிலும் இயேசு தம் சமகாலத்துச் சமூகத்தின் புரிதலைப் புரட்டிப் போடுகின்றார். ‘நீர் விரும்பினால் எது நோயை நீக்க உம்மால் முடியும்’ என்னும் தொழுநோயாளரின் வார்த்தைகளில் நம்பிக்கை தெரிவதோடு, இறைவிருப்பம் நிறைவேறுவதையே அவர் விரும்புகிறார் என்ற அவருடைய நல்லுள்ளமும் தெறிகிறது.

இயேசுவின் வல்ல செயல் மூன்று நிலைகளில் நடந்தேறுகிறது: ஒன்று, தொழுநோயாளர்மேல் இயேசு பரிவு கொள்கின்றார். இரண்டு, அவரைத் தொட்டு நலம் தருகின்றார். மூன்று, அவரை மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்காக மோசேயின் கட்டளையை நிறைவேற்றுமாறு பணிக்கின்றார்.

இயேசுவின் பரிவுள்ளம் தொழுநோய்பீடித்தவருக்கு நலம் தருவதுடன் அவரைக் குழுமத்துடனும் கடவுளுடனும் இணைக்கிறது.

முதல் படைப்பு நிகழ்வில் அனைத்தும் நல்லதெனக் காண்கிற கடவுள், மனிதரைப் படைத்தபோது அதை மிகவும் நல்லதெனக் காண்கிற கடவுள், ‘மனிதன் தனிமையாக இருப்பது நல்லது அன்று’ என்று கருதுகிறார். மனிதனுக்கு ஏற்று துணையை கடவுள் உருவாக்குவதன் வழியாக, மனிதர்கள் ஒருவர் மற்றவருடன் இணைந்து வாழ வேண்டும் என்று நிர்ணயிக்கிறார்.

நோயுற்றவர்கள் தங்கள் நோய்தரும் வலியை அனுபவிப்பதோடு தனிமையையும் அனுபவிக்கிறார்கள். கடவுள் தங்களுக்குத் தண்டனை கொடுத்துவிட்டதாக எண்ணிக் கடவுளிடமிருந்து தள்ளிப் போகிறார்கள். உறவினர்கள், நண்பர்கள், மற்றும் குழுமத்திலிருந்து தங்களையே தனிமைப்படுத்திக்கொள்கிறார்கள். நல்ல சமாரியன் எடுத்துக்காட்டில் நாம் காணும் காயப்பட்ட நபர்போல நோயுற்றவர் தனிமையில் கிடக்கிறார். குருவும் லேவியும் அவரை விட்டு விலகிச் செல்கிறார்கள். நல்ல சமாரியரோ அவர் அருகில் வருகிறார். அவருடைய உடனிருப்பே நலம் தருவதாக மாறுகிறது. காயப்பட்ட அந்த நபரை சாவடியில் சேர்க்கிறார் சமாரியர். முழுமையாக அவர் நலம் பெறும்வரை இன்னொருவரிடம் ஒப்படைக்கப்படுகிறார். இவ்வாறாக, மனிதர்களின், மனித உறவுகளின் உடனிருப்பே காயப்பட்டவருக்கு நலம் தருகிறது.

இன்றைய நாள் நமக்கு விடுக்கும் செய்தி என்ன?

(அ) இயேசுவைப் போல பரிவுள்ளம் கொள்வது

இயேசுவின் பரிவு என்னும் உணர்வு, தொடுதல் என்னும் செயலாக மாறுகிறது. நல்ல சமாரியர் தான் கொண்டிருந்த பரிவின் பொருட்டே தன் பயணத்தை நிறுத்தித் தன் கழுதையிலிருந்து இறங்குகிறார்.

(ஆ) உடனிருப்பைக் காட்டுதல்

‘தொடுதல்’ என்னும் செயல் ஒருவர் மற்றவருக்கு நாம் காட்டும் உடனிருப்பை எடுத்துரைக்கிறது. நாம் இந்த உலகிற்கு வந்தபோது நம்மை ஏந்திக்கொள்வதற்குக் கைகள் இருந்தன. நம் இருத்தல் மற்றவர்களுடைய உடனிருப்பால் சாத்தியமாகிறது எனில், நம் உடனிருத்தலால் மற்றவர்களுடைய இருத்தலும் மேன்மையுற வேண்டும்.

(இ) குழுமத்துடன் மறுஇணைப்பு செய்தல்

நலம் பெற்றவர் மீண்டும் குழுமத்துடன் சேருமாறு அனுப்புகிறார் இயேசு. மறுபக்கம், நோயுற்றவர்களை நம் சிந்தனையில் ஏந்த வேண்டும். அவர்களுடைய தேவைகளை நாம் கண்டுணர வேண்டும். அவர்களுக்கான சிறப்பான மேய்ப்புப் பணி அக்கறை வளர வேண்டும்.

‘அவர் நலமடைந்தார்’ – ஏனெனில், இயேசு அவரைத் தொட்டார்.

கடவுளின் பரிவுள்ளம் நம் இன்னல்களினின்று நம்மை விடுவிக்கிறது என்கிறார் திருப்பாடல் ஆசிரியர் (காண். திபா 32).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

One response to “இன்றைய இறைமொழி. ஞாயிறு, 11 பிப்ரவரி 2024. அவர் நலமடைந்தார்!”

  1. ronald rex Avatar
    ronald rex

    Profound thinking and reflection.

    Like

Leave a comment