இன்றைய இறைமொழி. ஞாயிறு, 4 பிப்ரவரி 2024. பணியாளர் – பொறுப்பாளர் – தலைவர்

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 4 பிப்ரவரி 2024
ஆண்டின் பொதுக்காலம் 5-ஆம் ஞாயிறு
யோபு 7:1-4, 6-7. 1 கொரிந்தியர் 9:16-19, 22-23. மாற்கு 1:29-39

பணியாளர் – பொறுப்பாளர் – தலைவர்

க்வோரா என்ற இணையதளத்தில் வினாக்கள் எழுப்பப்பட்டு வாசகர்கள் விடைகளைப் பகிர்வதுண்டு. கடந்த வாரம் கேட்கப்பட்ட வினாக்களில் ஒன்று இது: ‘உங்கள் மகள் உங்கள்மேல் ஏற்படுத்திய தாக்கம் என்ன?’

இக்கேள்விக்கு வாசகி ஒருவர் பின்வருமாறு விடையளிக்கின்றார்: ‘நுழைவுத்தேர்வு ஒன்றுக்குத் தயாரித்துக் கொண்டிருந்த என் மகள், தேர்வின் இறுதி நாளில் என்னிடம், ‘அம்மா! இதுவே என் வாழ்வில் நான் எழுத வேண்டிய இறுதித் தேர்வாக இருக்கட்டும். தேர்வுத் தயாரிப்புக்கான வலியை என்னால் தாங்க இயலவில்லை. 15 இலட்சம் பேருடன் மோத என்னால் இயலாது. தினமும் எனக்குக் கொஞ்சம் சோறு கொடுங்கள். தூங்க ஓர் இடம் கொடுங்கள். நான் இந்த வீட்டிலேயே இருந்துவிடுகிறேன். புத்தகங்கள் வாசிப்பதிலும், திரைப்படங்கள் பார்ப்பதிலும், உறவினர்களைச் சந்திப்பதிலும், நண்பர்களோடு உரையாடுவதிலும் என் நேரத்தைக் கழித்துக்கொள்கிறேன்’ என்றாள். இந்தக் காலக் குழந்தைகள் எதிர்கொள்ளும் மனச்சோர்வை நான் அறிந்துகொண்டேன். ஆனால், வாழ்க்கையின் இனிமையான இரகசியங்கள் அனைத்தும் துன்பங்களைக் கடந்து வருவதில் தான் அடங்கியிருக்கின்றன என்பதை என் மகளுக்குச் சொல்ல இயலாமல் தவிக்கிறேன். இதுவே அவள் ஏற்படுத்திய தாக்கம்!’

நிற்க.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். யோபு 7:1-4,6-7) நாம் காணும் யோபின் வார்த்தைகள் மேற்காணும் விடையில் வரும் மகளின் வார்த்தைகள் போல உள்ளன: ‘மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போராட்டந்தானே?’ நேர்மையாளரின் துன்பம் பற்றியும், ஒருவர் தாங்க இயலாத அளவுக்கு அனுமதிக்கப்படும் துன்பம் பற்றியும் பேசுகிறது யோபு நூல். நேர்மையாளராகவும் பாவமற்றவராகவும் வாழ்ந்த யோபு திடீரென ஒரு நாள் தன் பிள்ளைகள், கால்நடைகள், உடைமைகள் என அனைத்தையும் இழந்து, உடல் எல்லாம் கொப்புளங்களால் நிரம்பி வழிய, ஆழ்ந்த துன்பத்திற்கு ஆளாகிறார். தன் துன்பத்திற்குக் காரணம் தன்னைப் பற்றிக் கடவுளும் அலகையும் மேற்கொண்ட உரையாடல் என்பது யோபுக்குத் தெரியாது. வருந்துகிறார், புலம்புகிறார், கொந்தளிக்கிறார் யோபு. ஆன்மீக அளவில் அந்நியப்பட்டவராய், உடலளவில் துன்புறுபவராய், சமூக அளவில் ஒதுக்கப்பட்டவராய் மாறுகிறார் யோபு. கோபமும் கிளர்ச்சியும் கொண்ட அவரால் தன் துன்பத்தின் தோற்றுவாயைக் காண இயலவில்லை. அவருடைய துன்பத்திற்கான காரணம் என்று நண்பர்கள் கொடுத்த இறையியல் காரணங்கள் ஆழமற்றவையாக இருந்தன. அவர்களால் இன்னும் அதிகச் சோர்வுக்கு உள்ளாகிறார் யோபு.

யோபு கடவுளோடு உரையாடும் பகுதியான முதல் வாசகத்தில், ‘கூலியாள்களின் நாள்,’ ‘நிழலுக்கு ஏங்கும் அடிமை,’ ‘காத்திருக்கும் வேலையாள்,’ ‘வெறுமையான திங்கள்,’ ‘தறியின் ஓடுகட்டை’, ‘வெறுங்காற்று’ என்னும் பல்வேறு உருவகங்களால் தன் துன்பத்தை விவரிக்கின்றார். வாழ்க்கை மிகக் குறுகியதாக இருந்தாலும், அதில் மாந்தர் படும் துன்பம் அளவுக்கதிகமாக இருக்கிறது. கடின உழைப்பு, அடிமையின் வேலை, வேலையாளின் காத்திருத்தல் போன்றவை இந்த உலகில் நடக்கும் அநீதியான துன்பத்தை அடிக்கோடிடுவதோடு இந்த உலகில் உள்ள அனைத்தும் வெறுமையையும் துன்பத்தையுமே தருகின்றன எனச் சொல்கின்றன யோபுவின் சொற்கள். தூக்கமின்மையிலும் ஓய்வின்மையிலும் கடக்கின்றன யோபுவின் நாள்கள். இதற்கு மேல் துன்புறத் தன்னால் இயலாது என்பது போல, ‘என் கண்கள் மீண்டும் நன்மையைக் காணா’ என விரக்தியில் சோர்ந்து போகின்றார் யோபு.

இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 9:16-19,22-23), நற்செய்திக்காக அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாக அடிக்கோடிட்டுக் காட்டுகிறார் பவுல். இயேசுவின் மேல் நம்பிக்கை கொண்டதற்காக மக்களைத் துன்புறுத்திய பவுல், இயேசுவின் மேல் நம்பிக்கை கொண்டவராய் தானே துன்புறுபவராக மாறுகின்றார். அவருடைய இதயம்-பணி, இயல்பு-இயக்கம் என அனைத்திலும் கிறிஸ்துவே நிறைந்து வழிகிறார். ஆக, நற்செய்தி அறிவித்தல் என்பது கட்டாயமும் அவசியமும் என்ற நிலை ஏற்படுகிறது பவுலுக்கு.

தன் பணி நிறைவேற வேண்டும் என்பதற்காக இரண்டு துன்பங்களை ஏற்கின்றார் பவுல். முதலில், தன் குழுமத்திடமிருந்து எந்தவொரு கைம்மாறும் எதிர்பாராமல் நற்செய்தி அறிவிக்க உறுதி ஏற்கிறார். தான் பெறுகின்ற கைம்மாறுக்காக அல்லாமல் இலவசமாக நற்செய்தியை அறிவிப்பதன் வழியாக, நற்செய்தி என்பது விலைமதிப்பற்றது என்பதையும் உணர்த்துகிறார் பவுல். இரண்டாவதாக, தனக்கெனச் சமூகத்தில் ஓர் உயர்ந்த நிலை இருந்தாலும், அந்த நிலையையும் விடுக்க முன்வருகின்றார் பவுல்: ‘நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன்.’ தன் உழைப்புக்கு ஏற்ற எந்தவித கைம்மாறும் இல்லாத துன்பத்தையும், அனைவருக்கும் அடிமையாகும் துன்பத்தையும் நற்செய்திக்காக ஏற்க முன்வருகிறார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 1:29-39), மனிதத் துன்பத்திற்கான இயேசுவின் பதிலிறுப்பை வாசிக்கின்றோம். இயேசுவின் வழக்கமான ஒரு நாள் வேலையை நற்செய்தி வாசகம் நம் கண்முன் கொண்டுவருகிறது: இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவிக்கின்றார், நோயுற்றோருக்கு நலம் தருகின்றார். நோயுற்றோர் நலம் பெறுதல் என்பது இறையாட்சியின் வெளிப்பாடாக இருந்தது. ஏனெனில், நோய் என்பது தீமையின் ஆதிக்கம் என்று கருதப்பட்டது.

நற்செய்தி வாசகம் மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது. முதல் பிரிவில், சீமோனுடைய மாமியாரின் காய்ச்சலைக் குணமாக்குகிறார் இயேசு. சீமோனின் மாமியார் வீட்டில் இருக்கிறார். அந்த வீடுதான் அவருடைய உலகம். அந்த வீட்டை அவர் நிர்வகித்தார், அந்த வீட்டுக்கு வந்தவர்களை உபசரித்தார். சமூகம் வரையறுத்த அந்த வேலைகளை அவர் துன்பமெனக் கருதவில்லை. நோயினால் வருந்திய அவர் வீட்டுக்குள்ளேயே செயலற்றவராகக் கிடந்தார். இயேசு அவருடைய கையைப் பிடித்துத் தூக்கியதன் வழியாக, தன் முழுமையையும் நிறைவையும் அவருடன் இணைத்துக்கொள்கிறார். எழுந்த அவர் உடனடியாகத் தன் உலகத்தை இயக்கத் தொடங்குகின்றார். ஆக, இயேசுவின் கரம் மானுடத்தின் துன்பம் நீக்கும். இரண்டாவது பிரிவில், அந்த ஊரில் இருந்த நோயாளர்கள், தீய ஆவி பிடித்தோர், மற்றும் பல்வேறு பிணிகளால் வருந்திய அனைவருக்கும் நலம் தருகின்றார் இயேசு. இயேசு தீய ஆவியின்மேல் கொண்டிருந்த அதிகாரம் இங்கே புலனாகிறது. மூன்றாவது பிரிவில், ‘எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்’ என்று இயேசுவிடம் சொல்லப்பட்டபோது, ‘ஆஹா! இங்கிருத்தல் நலம்! எல்லாரும் நம்மை அறிவர்! நமக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கும்!’ என்ற இன்பத்தின் வழியைத் தேடாமல், ‘நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம்!’ என இலக்குத் தெளிவுடன் புறப்படுகின்றார் இயேசு. தான் செல்கின்ற வழியில் துன்பங்கள் பல இருக்கும் என்று தெரிந்தாலும், இயேசு துன்பத்தையே தெரிவு செய்கின்றார்.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு, துன்பத்துக்கான மனித பதிலிறுப்புகளை வரையறுக்கிறது. துன்பத்தின் நடுவில் சோர்வு மற்றும் விரக்தியடைந்த யோபு, கடவுளிடமிருந்து விலகாமல் நிற்கின்றார். துன்பத்தையும் ஏழ்மையையும் தன்மேல் ஏற்றுக்கொண்டு நற்செய்தி அறிவித்தல் என்னும் தன் இலக்கோடு சமரசம் செய்யாமல் இருக்கிறார் பவுல். நற்செய்தி வாசகத்தில் தன் இறைவேண்டல் வழியாகவும், உடனிருப்பு வழியாகவும் மனிதத் துன்பத்தைத் தன்மேல் ஏற்றுக்கொள்கின்றார் இயேசு.

நம் மனித உடலும் மனமும் இயல்பாகவே துன்பத்தை வெறுக்கின்றன. சில கலாச்சாரங்களில், சிறுவர் சிறுமியர்கள் இளவல் பருவம் அடைந்தவுடன், அவர்களைக் கட்டாயத் துன்பத்துக்கு உட்படுத்துவர். காடுகளில் அவர்களை அலைந்து திரியச் செய்தல், தன் உணவைத் தானே சேகரித்தல், தனியாக வாழக் கற்றுக்கொள்தல், வேலை தேடுதல் எனப் பல்வேறு துன்பங்களை அவர்கள் ஏற்க வேண்டும். அப்படி அவர்கள் துன்பம் ஏற்பதன் வழியாகவே, அவர்கள் விழுமியங்களில் வளர முடியும் என்பது நம்பிக்கை.

நாம் முதலில் கண்ட அந்தப் பெண்ணுடைய மகள்போல இருந்தால் துன்பம் போய்விடுமோ? இல்லை! இன்பம் என நினைத்த அனைத்தும் அந்தப் பெண்ணுக்குத் துன்பமாக மாறலாம். வீட்டிலேயே இருப்பதால் மனம் சோர்வடையலாம். உறவினர்களிடம் அதிகமாகப் பேசுவதால் சண்டைகள் வரலாம். நண்பர்களோடு உரையாடுவதால் தேவையற்ற பிரச்சினைகள் வரலாம். போதிய உடற்பயிற்சி இராததால் நோய்கள் வரலாம். ஆக, இன்பம் காலப்போக்கில் துன்பமாக மாறிவிடும்.

ஆக, துன்பம் என்பது ஒரு வாழ்வியல் எதார்த்தம். இன்று நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் துன்பத்தை நாம் எப்படி ஏற்றுக்கொள்வது?

(அ) பணியாளர்போல

யோபு தன் வாழ்வை ஓர் அடிமையின் வாழ்வுக்கு ஒப்பிடுகிறார். துன்பத்தைச் சுமையாகவே பார்க்கிறார். யோபு தன் துன்பம் காரணமாகச் சற்றே புலம்பினாலும் பொறுமை காக்கிறார். துன்பம் வரும்போது பெரும்பாலும் நாம் வேகமாகச் செயல்படுகிறோம். நம் மூளையும் பரபரப்பாகி நம்மை ஏதாவது செய்யத் தூண்டுகிறது. இந்நேரங்களில் நாம் எடுக்கும் செயல்கள் இன்னும் அதிகமான தீமைகளை வருவிக்கின்றன. பரபரப்பாக இருப்பவர்கள் அடிமைகள்.

(ஆ) பொறுப்பு ஏற்பது

நற்செய்தி அறிவிப்பைத் தன் சுமை என்று பார்க்காமல், பொறுப்பு எனப் பார்க்கிறார் பவுல். அடிமை அல்லது பணியாளர் தனக்குக் கொடுக்கப்படும் அனைத்தையும் சுமை எனப் பார்ப்பார். ஆனால், பொறுப்பாளரோ அனைத்தையும் விரும்பி ஏற்கிறார். பொறுப்புணர்வுடன் அவற்றைக் கையாளுகிறார். பணியாளர் தலைமைத்துவத்தைவிட பொறுப்பாளர் தலைமைத்துவம் மேன்மையானது.

(இ) தலைவராக இருப்பது

தம் நாள் முழுவதும் தாம் நிறையப் பணிகள் செய்தாலும், நிறையப் பேரைச் சந்தித்தாலும் எவற்றையும் யாரையும் பற்றிக்கொள்ளவில்லை இயேசு. தம் வாழ்வைத் தம் கட்டுக்குள் வைத்திருக்கிறார். ஆகையால்தான், தனிமையாக இறைவேண்டல் செய்யக் நேரம் கண்டுபிடிக்கிறார். மற்றவர்கள் அவரைத் தேடினாலும் தம் இலக்கு நோக்கிப் பயணம் செய்கிறார். எந்தவிதமான கவனச் சிதறல்களுக்கும் இடம் கொடுக்க மறுக்கிறார்.

இறுதியாக,

யோபு தன்னைப் பணியாளர் என நினைக்கிறார். பவுலோ தன்னைப் பொறுப்பாளர் என உணர்கிறார். இயேசுவோ தலைவராகத் திகழ்கிறார். பணியாளர் என்னும் நிலையில் அனைத்தும் நமக்குச் சுமையாக இருக்கிறது. பொறுப்பாளராக மாறும்போது சற்றே துன்பம் அகல்கிறது. தலைவர் நிலையில் நமக்கு நிகழும் அனைத்தும் நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும் அதிகாரம் அல்லது ஆற்றல் பிறக்கிறது.

‘உடைந்த உள்ளத்தோரை ஆண்டவர் குணப்படுத்துகிறார்’ (காண். திபா 146) எனப் பாடுகிறார் திருப்பாடல் ஆசிரியர் (பதிலுரைப் பாடல்).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

One response to “இன்றைய இறைமொழி. ஞாயிறு, 4 பிப்ரவரி 2024. பணியாளர் – பொறுப்பாளர் – தலைவர்”

  1. jacobmsouza Avatar
    jacobmsouza

    Very good message father. Thank you so much.

    Like

Leave a reply to jacobmsouza Cancel reply