இன்றைய இறைமொழி
திங்கள், 22 ஜனவரி 2024
பொதுக்காலம் 3-ஆம் வாரத்தின் திங்கள்
2 சாமுவேல் 5:1-7, 10. மாற்கு 3:22-30
வலியவரைக் கட்டுதல்
விமர்சனங்கள் தவிர்க்க இயலாதவை. நடத்தையியல் (ஆங்கிலத்தில், ‘பிஹேவியரல் ஸைகாலஜி) கூற்றுப்படி நாம் பேசும் ஒவ்வொன்றுமே விமர்சனம்தான். ‘இந்த வாட்ச் நல்லா இருக்கு!’ ‘நீங்க நல்லா இருக்கீங்க!’ ‘இந்தக் கலர் உங்களுக்கு பொருத்துமா இருக்கு! என்று நாம் எதைப் பற்றிப் பேசினாலும், அது விமர்சனமே. நம்மிடம் மற்றவர்கள் பகிர்வதும் விமர்சனங்களே.
நேர்முகமான விமர்சனங்கள் நம்மை வளர்க்கின்றன. எதிர்மறையான விமர்சனங்கள் நம்மைத் தளர்க்கின்றன.
இன்றைய முதல் வாசகத்தில் தாவீது எதிர்மறையான விமர்சனம் ஒன்றை எதிர்கொள்கின்றார். தன் முப்பதாவது வயதில் அரசராகப் பொறுப்பேற்றபின் தன் சொந்த ஊருக்கு வருகின்றார். அங்கிருந்த எபூசிய இனத்தவர்கள், ‘நீர் இங்கே வர முடியாது. பார்வையற்றவரும் முடவரும் கூட உம்மை அப்புறப்படுத்தி விடுவார்கள்!’ என்று சொல்லி தாவீதுக்கு எதிராகப் பேசுகிறார்கள்.
இவர்கள் தாவீது ஆண்டவரால் அருள்பொழிவு பெற்றவர் என்பதை அறிந்திருக்கவில்லை. தாவீது போர்க்களத்தில் பிலிஸ்தியர் கோலியாத்தை எதிர்கொண்டு வெற்றி பெற்ற நிகழ்வையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அல்லது அறிந்தவர்களாக இருந்தாலும், தாவீது இளவலாக இருந்ததால் அவரைக் குறித்து இடறல்பட்டனர். அல்லது தாவீது தங்களுக்கு வேண்டாம் என்ற எண்ணத்தில் அவரை எதிர்த்தனர்.
நற்செய்தி வாசகத்தில், இயேசு பேய்களை ஓட்டுவதைக் கண்ட மறைநூல் அறிஞர்கள், ‘இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது. பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்’ என்றும் சொல்லி அவரைக் குறித்து இடறல் படுகின்றனர்.
மறைநூல் அறிஞர்கள் தாங்கள் சார்ந்த பள்ளி அல்லது தங்களுக்குக் கற்றுத்தந்த ரபியின் அதிகாரத்தைக் கொண்டே போதிப்பார்கள். நோய் நீக்குதல், பேய் ஓட்டுதல் போன்ற வல்ல செயல்களைச் செய்ய அவர்களால் இயலாது. ஆனால், இயேசு தொடக்கமுதல் தம் சொந்த அதிகாரத்தில் போதிப்பவராகவும், நோய் நீக்குதல், பேய் ஓட்டுதல் போன்ற வல்ல செயல்கள் செய்ய ஆற்றல் பெற்றவராகவும் இருக்கிறார். இதைப் பொறுத்துக்கொள்ளாத மறைநூல் அறிஞர்கள் அவர்களுக்கு எதிராக மேற்காணும் எதிர்மறை விமர்சனத்தைக் கட்டவிழ்க்கிறார்கள்.
தாவீது மற்றும் இயேசு என்னும் இரு இளவல்களும் ஏறக்குறைய தங்களுடைய முப்பதாவது வயதில் மிக அழகாக எதிர்மறை விமர்சனங்களைக் கையாளுகின்றனர்.
அவர்கள் செய்வது என்ன?
‘வலியவரைக் கட்டுகின்றனர்’
‘முதலில் வலியவரைக் கட்டினாலன்றி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது. அவரைக் கட்டி வைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்’ என்று இயேசு உருவகமாகச் சொல்கிறார்.
வலியவரைக் கட்டினால் அவர் வலுவிழந்து போவார்.
தாவீது எபூசியரை வெற்றிகொள்கின்றார்.
இயேசு மறைநூல் அறிஞர்களுக்குத் தான் யாரெனத் தெளிவுபடுத்துகின்றார்.
எபூசியரும் மறைநூல் அறிஞர்களும் தாவீது மற்றும் இயேசுவிடமிருந்த இறை ஆற்றலை மறுத்ததுடன், தீயவன் அவர்களில் இருப்பதாகச் சொல்லி, அவர்களது ஆற்றலை இழிவுபடுத்துகின்றனர்.
நாம் வலியவரைக் கட்டிவிட்டால் அவர் வலுவிழந்து போகின்றார். கட்டியவர் வலியவர் ஆகின்றார். சாத்தான் வலியவர் போலத் தெரிந்தாலும் அவரைக் கட்டிய இயேசு அதைவிட வலியவர் ஆகின்றார்.
இந்த நாள் தரும் செய்திகள் இரண்டு:
ஒன்று, எனக்கு அடுத்திருப்பவரின் மேன்மையை நான் காணும்போது அல்லது அறியும்போது நான் ஆற்றும் எதிர்வினை என்ன? அவரை ஏற்றுப் பாராட்டுகிறேனா? அல்லது அவருக்கு எதிராக விமர்சனம் செய்து அவரை ஏற்றுக்கொள்ள மறுக்கிறேனா?
இரண்டு, நான் மற்றவரை மேற்கொள்ள வேண்டுமெனில், நான் வலிமையுடையவராகச் செயல்பட்டு மற்றவர்மேல் வெற்றிகொள்ள வேண்டும். எதிரியின் பலத்தை தேர்ந்து தெளிதல், உகந்த நேரத்துக்காகப் பொறுமையுடன் காத்திருத்தல், ஏற்ற கருவிகளைப் பயன்படுத்துதல், விரைவாகச் செயல்படுதல், வெற்றி காணுதல்.
நிற்க.
‘மனிதர்கள் தங்களுடைய உடலால் கடவுளை மாட்சிப்படுத்த வேண்டும் என முன்மொழிந்து இதயத்தின் தீய எண்ணங்கள்போலச் செயலாற்றுவதைத் தடுக்கிறது மனித மாண்பு பற்றிய புரிதல்’ (‘மகிழ்ச்சியும் எதிர்நோக்கும்,’ இன்றைய உலகில் திருஅவை, எண்.14, யூபிலி கி.பி. 2025 துணுக்கு 14).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a reply to Antony Raj shj Cancel reply