இன்றைய இறைமொழி. வியாழன், 18 ஜனவரி 2024. பொறாமை

இன்றைய இறைமொழி
வியாழன், 18 ஜனவரி 2024
பொதுக்காலம் 2-ஆம் வாரத்தின் வியாழன்
1 சாமுவேல் 18:6-9, 19:1-7. மாற்கு 3:7-12

பொறாமை

சவுலின் போதாத நேரம் அனைத்தும் அவருக்கு எதிராகவே நடக்கின்றது. சவுலின் அனுமதியுடன்தான் தாவீது போர்க்களத்தில் கோலியாத்தை எதிர்கொள்கின்றார், வெற்றி பெறுகின்றார். ஆக, சவுலின் சார்பாகவே தாவீது போரிடுகின்றார். தாவீதின் வெற்றி சவுலின் வெற்றியே. தாவீதின் வெற்றியும் தன் வெற்றியே என்று கொண்டாடுவதற்குப் பதிலாக, அவர்மேல் பொறாமை கொண்டு அவரை அழிக்கத் தேடுகின்றார் சவுல்.

சவுலைச் சந்திக்க வந்த பெண்கள் பாடிக்கொண்டே வருகின்றனர். பாடகருக்கே உரிய பாணியில், மிகைப்படுத்திப் பாடுகின்றனர்: ‘சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார், தாவீது பதினாயிரம் பேரைக் கொன்றார்.’ ‘ஆமாம் அப்படித்தான்!’ என்று சொல்லிவிட்டு சவுல் நகர்ந்திருந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை. மாறாக, அவர் பெண்களின் சொற்களைத் தன் மூளைக்குள் எடுத்துக்கொண்டு அதீதமாகச் சிந்திக்கின்றார்.

விளைவு, பொறாமை.

ஒப்பீடு, எதிர்பார்ப்பு, ஏமாற்றம், பொறாமை, கோபம், சந்தேகம், அச்சம், பகைமை எனப் பொறாமை வளர்ந்து உருப்பெறுகிறது என்று தன் ‘ஒப்புகைகள்‘ நூலில் எழுதுகிறார் அகுஸ்தினார்.

தாவீது பெற்ற வெற்றியை சவுல் அடைந்த வெற்றிகளோடு ஒப்பீடு செய்கிறார்கள் பெண்கள். சவுலும் அவர்களுடைய சொற்களை திரும்பச் சொல்வது அவற்றை ஆமோதிப்பது போல இருக்கிறது. தாவீதுக்குச் சொல்லப்பட்ட எண்களே தனக்கும் சொல்லப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறார். அது நிறைவேறாததால் ஏமாற்றம் கொள்கிறார். ஏமாற்றம் பொறாமையாக மாறுகிறது. பொறாமை கோபமாக உருவெடுக்கிறது. தன் இடத்தைத் தாவீது பிடித்துவிடுவார் என்னும் சந்தேகம் வருகிறது. சந்தேகம் அச்சமாக வலுப்பெறுகிறது. தாவீதுடன் மனத்தில் பகைமையை உருவாக்கி அவரைக் கொல்ல நினைக்கிறார் சவுல்.

பொறாமை கொள்வதால் சவுல் அடையும் துன்பங்கள் எவை?

(அ) பார்வை குறுகியதாக மாறுகிறது

பொறாமை அடுத்தவரைப் பற்றிய ஓர் அச்சத்தை நமக்குள் உருவாக்குகிறது. எதார்த்தத்தைவிட மிகப் பெரிய தோற்றத்தை ஏற்படுத்துவதால் அச்சம் வருகிறது. ஆனால், உண்மையில் நம் பார்வை குறுகுகின்றது. சவுல் தாவீதை மிகவும் மிகைப்படுத்திப் பார்க்கின்றார். இப்போதே தன் அரியணை பறிபோய்விட்டதாக உணர்கின்றார். ஆனால், உண்மையில் தாவீது ஓர் இளவல். அவ்வளவுதான். சவுலுக்குக் கட்டுப்பட்டவர்தான். பொறாமையால் சவுலின் பார்வை சுருங்குகிறது.

(ஆ) அழிக்க நினைக்கும் எண்ணம்

தாவீது சவுலின் பார்வையிலிருந்து மறைந்தாலும் அவருடைய இருத்தல் சவுலின் மனத்தில் நிலையாகப் பதிந்துவிடுகிறது. பொறாமை அடுத்தவரின் இருப்பை அழிக்குமாறு நம்மைத் தூண்டுகிறது. அடுத்தவரை அழிக்க இயலாத நிலையில், அவருடைய நற்பெயரையாவது அழித்துவிட முயற்சி செய்கிறது. அடுத்தவரின் இருத்தல் இருக்கும் வரை பொறாமை இருக்கும். சவுல் தாவீதைக் கொல்ல நினைக்கிறார். பொறாமை கொண்ட உள்ளம் குறுகிவிடுவதால், இதைத்தவிர வேறொன்றும் அதனால் சிந்திக்க இயலாது. அடுத்தவரை அழித்துவிடுவதால் பொறாமை போய்விடும் என்னும் மாயையில் இருக்கிறார் சவுல்.

(இ) இளவலும் புத்திசொல்லும் நிலை வரும்

சவுலின் பொறாமை மற்றும் பகைமை உணர்வுகளைக் காண்கிற அவருடைய மகன் யோனத்தான் அவருக்கு அறிவுரை வழங்குகிறார். நம்மைவிடக் கீழானவர்களும் நமக்கு புத்திமதி சொல்லும் அளவுக்கு நம்மைத் தாழ்த்திவிடுகிறது பொறாமை.

பொறாமையை எப்படிக் களைவது?

மிக எளிதான வழி, பொறாமை உணர்வைத் தூண்டுதல் உணர்வாக மாற்றிக்கொள்வதுதான் (convert envy into inspiration). நம் உள்ளத்தில் பொறாமை எழுப்புகிற மற்றவரின் செயலை நாமும் செய்ய முடியும் என்ற தூண்டுதலைப் பொறாமை தந்தால் நாம் பொறாமையிலிருந்து விடுபட முடியும். எடுத்துக்காட்டாக, என் சமூக வலைத்தளத்தைவிட என் நண்பரின் சமூக வலைத்தளம் அதிகமான பார்வையாளர்களை இழுக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த இடத்தில் அந்த நண்பர்மேல் பொறாமை கொள்ளாமல், அவரையே நம் தூண்டுதலாக எடுத்துக்கொண்டால், அவருடைய வெற்றியை நாம் கொண்டாட இயல்வதோடு, அவரைப் போலச் செயலாற்றி அவர் நிலைக்கு நாம் உயரவும் முடியும்.

இரண்டாவதாக, நிறைவு மனப்பான்மையை (abundance mindset) வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்தப் பிரபஞ்சம் எல்லாருக்குமானதை நிறைவாகக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒன்று கிடைக்கிறது என்பதால் மற்றவருக்கு அது கிடைக்காது என்பதல்ல. குறைவு மனப்பான்மை (scarcity mindset) கொண்டிருப்பவர் மற்றவருக்குக் கிடைத்துவிட்டதால் அது தன்னிடமிருந்து பறிபோய்விட்டது என நினைக்கிறார். அந்தப் பதற்றத்தோடு அவர் தொடர்ந்து வாழ்கிறார். விளைவு, தனக்கென வருவதையும் அடைய முடியாமல் தவிக்கிறார்.

அக்வினா நகர் தோமா பொறாமையின் இரண்டு திசைகள் பற்றிப் பேசுகிறார். ஒன்று, நான் மற்றவர்மேல் பொறாமைப்படுவது. இரண்டு, மற்றவர்கள் என்மேல் பொறாமைப்படுவது. இரண்டையும் நான் வெற்றிகொள்ள வேண்டும். மற்றவர்கள் என்மேல் பொறாமை கொள்வதை நான் வெற்றிபெற வேண்டும் என்றால், என் பெயர், புகழ், மற்றவர்களின் கருத்து ஆகியவற்றோடு என்னை இணைத்துக்கொள்ளக் கூடாது, என் மகிழ்ச்சியை இரகசியமாகக் கொண்டாட அறிந்திருக்க வேண்டும்.

நற்செய்தி வாசகத்தில், இயேசு அவருடைய பணியில் அடைகிற வெற்றிகளை வாசிக்கிறோம். அனைவரும் அவர்மேல் வந்து விழுகிறார்கள். பெயரும் புகழும் உடையவராக இருக்கிறார். ஆனால், அவர் செய்தது என்ன? மெசியா இரகசியம் காக்கிறார். தம்மைப் பற்றிப் பேச வேண்டாம் என்று தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்.

நிற்க.

குழுமத்தில் தோழமை அல்லது ஒன்றிப்பு உணர்வுக்குத் தடையாக இருப்பது பொறாமை. பொறாமை மற்றவர்களைப் பற்றிய அச்சத்தையும் முற்சார்பு எண்ணங்களையும் உருவாக்குகிறது. பொறாமை என்பது தனிநபர் உள்ளத்தில் எழக்கூடிய உணர்வுதானே தவிர, அதற்கென்றி வெளிப்புற இருத்தல் எதுவும் கிடையாது. (யூபிலி கி.பி. 2025 துணுக்கு 11).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

2 responses to “இன்றைய இறைமொழி. வியாழன், 18 ஜனவரி 2024. பொறாமை”

  1. Rev. Jacob Souza Avatar
    Rev. Jacob Souza

    Very true , excellent message Father. God bless you.

    Like

  2. charlesgp1953 Avatar
    charlesgp1953

    Jealousy and ego are two daring devilis destroys God’s children.
    Jealousy leads to anger. Anger leads to crime (sin. ) Well said dear fr.

    Like

Leave a reply to charlesgp1953 Cancel reply