இன்றைய இறைமொழி
ஞாயிறு, 14 ஜனவரி 2024
ஆண்டின் பொதுக்காலம் 2-ஆம் ஞாயிறு
1 சாமுவேல் 3:3-10, 19. 1 கொரிந்தியர் 6:3-15, 17-20. யோவான் 1:35-42
ஆன்மிக வழிகாட்டுதல்
‘நான் தூரமாகப் பார்க்க முடிவதற்குக் காரணம், நான் மற்றவர்களுடைய தோள்களின்மேல் ஏறிநிற்பதால்தான்’ – தன் அறிவியல் மற்றும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு என்ன காரணம் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, சர் ஜசக் நியூட்டன் அளித்த பதில் இது. கடவுளை அறியவும், அனுபவிக்கவும், பின்பற்றவும் நாம் எவ்வளவோ முயற்சிகள் எடுக்கிறோம். ஆனால், நம் வாழ்வு குறுகியது என்பதாலும், அனைத்தையும் தேடி அறிவது கடினமானது என்பதாலும் நமக்கு ஆன்மிக வழிகாட்டிகள் தேவைப்படுகிறார்கள். ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்று நம் மரபில் சொல்லப்படுவதுண்டு. நம் தேடலின் படிநிலைகள் மட்டுமல்ல இந்த வரிசை, மாறாக, அம்மா குழந்தையின் அப்பாவை அடையாளம் காட்டுகிறாள், அப்பா குழந்தைக்கு ஆசிரியரை அடையாளம் காட்டுகிறார், ஆசிரியர் குழந்தைக்குக் கடவுளை அடையாளம் காட்டுகிறார்.
முதல் வாசகத்தில், இளவல் சாமுவேலுக்கு ஆண்டவரின் குரலை அடையாளம் காட்டுகிற ஆன்மிக வழிகாட்டியாகத் திகழ்கிறார். நற்செய்தி வாசகத்தில், இயேசுவை, ‘கடவுளின் செம்மறி’ எனத் தம் சீடர்களுக்கு அடையாளம் காட்டுகிறார் திருமுழுக்கு யோவான்.
முதல் வாசகத்தில் (காண். 1 சாமு 3:3-10,19), சாமுவேலின் அழைப்பு நிகழ்வை வாசிக்கின்றோம். கடவுள் சாமுவேலை அழைக்க, இளவல் சாமுவேல் அந்த அழைப்புக்கு பதிலிறுப்பு தருகின்றார். ‘சாமுவேல்’ என்றால் ‘கடவுள் கேட்டார்’ என்பது பொருள். கடவுள் இஸ்ரயேல் மக்களின் குரலைக் கேட்டார் என்ற செய்தியைத் தாங்கி நிற்கிறது சாமுவேல் நூல். முதலில், கடவுள் மலடியாயிருந்த அன்னாவின் விண்ணப்பத்தைக் கேட்டார். பின்னர், தங்களுக்கென்று ஓர் அரசன் வேண்டும் என்ற இஸ்ரயேல் மக்களின் விண்ணப்பத்தைக் கேட்டார் சாமுவேல். பால்குடி மறந்தவுடன் அன்னா சாமுவேலை ஏலியிடம் கொண்டுபோய் விடுகின்றார். சீலோவிலே குருவாக இருந்த அவருடைய இல்லத்திலேயே சாமுவேல் தங்குகின்றார். அங்குதான் அழைத்தல் நிகழ்வு நடக்கிறது. கடவுள் நேரடியாகவும் தனிப்பட்ட விதத்திலும் இளவல் சாமுவேலை அழைக்கின்றார். ஆனால், கடவுளின் குரலை ஏலியின் குரல் என நினைத்துக் கொள்கின்றார் சாமுவேல். இரு முறை அப்படியே நடக்கின்றது. இந்த இடத்தில், ‘சாமுவேல் ஆண்டவரை இன்னும் அறியவில்லை’ என்று ஒரு குறிப்பைத் தருகின்றார் ஆசிரியர். ஞானமும் கனிவும் நிறைந்த தந்தையாக இருந்த ஏலி, சாமுவேல் ஆண்டவரது குரலை அடையாளம் காண உதவுகின்றார். ‘ஆண்டவரே பேசும்! உம் அடியான் கேட்கிறேன்!’ எனப் பதிலிறுக்குமாறு சொல்லி அனுப்ப, சாமுவேல், ‘பேசும்! உம் அடியான் கேட்கிறேன்!’ என்கிறார்.
இங்கே இறைவனின் குரலைக் கேட்கிறார் சாமுவேல். பின்னர் மக்களின் குரலைக் கேட்டு அதை ஆண்டவரின் காதில் போட்டு வைக்கிறார்.
சாமுவேல் மூன்று முறை அழைக்கப்படும் நிகழ்வு, அவருடைய அறிதலில் எழுந்த படிநிலையைக் காட்டுகிறது. இந்தப் படிநிலையில் ஏலியின் வழிகாட்டிநிலை முக்கியமானது. கண்பார்வை மங்கிய நிலையில் அவர் இருந்தாலும், ஆண்டவரின் வார்த்தை அரிதாக இருந்தாலும், ஆண்டவரின் குரலை அடையாளம் கண்டு சாமுவேலுக்கு வழிகாட்டுகிறார் ஏலி. ‘பேசும்! உம் அடியான் கேட்கிறேன்!’ என்ற சாமுவேலின் தயார்நிலை, ‘காது வழியாகக் கேட்டல்’ என்பதோடு அல்லாமல், ‘கீழ்ப்படிகிறேன்’ என்ற பொருளையும் தருவதால், சாமுவேல் இங்கேயே ஓர் இறைவாக்கினராகத் தன் பணியைத் தொடங்குவதைப் பார்க்கின்றோம். ‘சாமுவேல் வளர்ந்தான். ஆண்டவர் அவனோடு இருந்தார். சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை’ என நிகழ்வை நிறைவு செய்கிறார் ஆசிரியர்.
ஆக, சாமுவேலுக்கு ஆண்டவரின் அழைத்தல் வருகின்றது. அந்த அழைத்தலை அறிந்துகொள்ள ஏலி உதவுகின்றார். அறிந்துகொண்ட சாமுவேல் அதற்கேற்ற பதிலிறுப்பு செய்கின்றார். பதிலிறுப்பின் விளைவாக இறைவாக்கினராகின்றார். இதுமுதல் ஆண்டவரின் குரல் எது என்பதை இஸ்ரயேல் மக்கள் அறியவும், தேர்ந்து தெளியவும் அவர்களுக்கு இவர் வழிகாட்டுவார். இவ்வாறாக, சாமுவேல் இஸ்ரயேல் மக்களின் ஆன்மிக வழிகாட்டியாக மாறுகிறார்.
நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 1:35-42) இன்னோர் அழைத்தல் கதையாடலை வாசிக்கின்றோம். திருமுழுக்கு யோவான் தன் சீடர்கள் இருவரிடம் இயேசுவைச் சுட்டிக்காட்டி, ‘இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!’ என முன்மொழிகின்றார். அதைக் கேட்ட அச்சீடர்கள் இருவரும் இயேசுவைப் பின்தொடர்கின்றனர். யோவான் நற்செய்தியின் முதல் அலகில், இயேசுவுக்கு வழங்கப்படும் ஏழு தலைப்புகளில் ஒன்று, ‘கடவுளின் ஆட்டுக்குட்டி’ என்பது. இயேசுவின் கல்வாரிப் பலியை இத்தலைப்பு குறித்துக்காட்டுவதுடன், தம் ஒரே பலியின் வழியாக உலகின் பாவத்தைப் போக்க வந்த மீட்பர் அல்லது மெசியா என்பதையும் குறிக்கிறது.
இந்த நிகழ்வில், இயேசுவே தாமாக முன்வந்து, ‘என்ன தேடுகிறீர்கள்?’ எனக் கேட்கின்றார். இயேசுவுக்குப் பதிலிறுக்கின்ற சீடர்கள், தங்கள் விடையை ஒரு கேள்வியாக முன்வைக்கின்றனர்: ‘ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?’ ‘தங்குதல்’ என்பது யோவான் நற்செய்தியில் மிகவும் பொருள் பொதிந்த வார்த்தை. ஏனெனில், இயேசு கிறிஸ்து வழியாக கடவுள் அல்லது வாக்கு மனுக்குலத்தோடு ‘தங்குகின்றார்.’
‘வந்து பாருங்கள்’ என்னும் இயேசுவின் பதில் மொழி அவர்களைத் தம்மோடு இருப்பதற்கு அழைப்பதோடு, தம் உடனிருப்பை அனுபவிக்கவும் தூண்டுகிறது. மேலோட்டமான வாசிப்பில், இயேசுவின் இடம் எங்கே இருக்கிறது என்று பார்க்க சீடர்கள் சென்றார்கள் என்று தோன்றுகிறது. ஆனால், ஆழமான வாசிப்பில், அவர்கள் அவரைப் பின்பற்றத் தொடங்கினார்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது.
இயேசுவோடு தங்கிய அந்த அனுபவம் அவர்களைப் புரட்டிப் போடுகின்றது. இருவரில் ஒருவரான அந்திரேயா நேரடியாகத் தன் சகோதரர் சீமோனைச் சென்று பார்க்கின்றார். ‘நாங்கள் மெசியாவைக் கண்டோம்!’ என அறிக்கையிடுகின்றார். ‘போதகர்’ என்று அழைத்துப் பின் தொடர்ந்தவர், ‘மெசியாவை’ கண்டது எப்படி? இறையனுபவம் பெற்ற ஒருவர் இன்னொருவரைத் தேடிச் சென்று அழைத்து வருவது யோவான் நற்செய்தியில் காணப்படும் ஓர் இறையியல் கூறு (காண். யோவா 1:43-51ளூ யோவா 4:28-30,39-42).
அந்திரேயா மற்றும் இன்னொரு சீடரின் ஆன்மிக வழிகாட்டியாக இருக்கிறார் திருமுழுக்கு யோவான். இறையனுபவம் பெற்ற அந்திரேயா சீமோனுடைய ஆன்மிக வழிகாட்டியாக மாறுகிறார்.
இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 6:13-15,17-20), தூய்மையானவற்றுக்கும் பாவத்துக்குரியவற்றுக்கும் உள்ள வேறுபாட்டைக் காணத் தவறிய கொரிந்து நகரக் கிறிஸ்தவ மக்களைக் கடிந்துகொள்கின்றார் பவுல். கொரிந்து ஒரு துறைமுக நகரம். வளமைக்கும், ஆடம்பரத்துக்கும், மேட்டிமையான வாழ்க்கை முறைக்கும் பெயர் பெற்றது. பரத்தைமை மற்றும் கூடாஒழுக்கம் அதிகமாக இருந்த அந்த நகரத்தில், நம்பிக்கையாளர்கள் தங்களின் தூய்மை நிலையைத் தக்கவைக்கவும், தங்கள் அழைப்புக்கேற்ற அறநெறி வாழ்க்கை வாழவும் வேண்டிய தேவை இருந்தது. பாலியல் பிறழ்வுகள் கிறிஸ்தவ அறநெறிக்கு எதிரானது என்பது பவுலின் போதனையாக இருக்கிறது. மேலும், உடல் மற்றும் ஆன்மா கொண்டுள்ள ஒவ்வொரு தனிநபரும் ‘தூய ஆவியார் குடிகொள்ளும் கோவில்’ என்று அவர்களுக்கு அறிவுறுத்துகின்றார். பாலியல் நன்னடத்தை என்று வரும்போது கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் அதில் சமரசம் செய்துகொள்ளவே கூடாது என்பது பவுலின் எண்ணமாக இருந்தது. ஆக, கொரிந்து நகர மக்களின் ஆன்மிக வழிகாட்டியாகத் திகழ்கிறார் பவுல். அவர்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ற பதிலிறுப்பு செய்ய அவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.
இவ்வாறாக,
முதல் வாசகத்தில், ஏலி வழிகாட்ட, இளவல் சாமுவேல் ஆண்டவரின் குரலை அறிந்துகொள்கின்றார். ‘பேசும்! கேட்கிறேன்!’ எனப் பதிலிறுப்பு செய்கின்றார்.
இரண்டாம் வாசகத்தில், பவுல் வழிகாட்ட, கொரிந்து நகர இறைமக்கள் தங்கள் உடலாகிய கோவிலின் தூய்மையை அறிந்துகொள்வதோடு, பிறழ்வுபட்ட வாழ்வை அகற்றித் தூய்மையான வாழ்வு வாழ முன்வருகின்றனர்.
நற்செய்தி வாசகத்தில், திருமுழுக்கு யோவான் வழிகாட்ட, முதற்சீடர்கள் இயேசுவை மெசியா எனக் கண்டு அதற்குச் சான்று பகர்கின்றனர்.
ஏலி, பவுல், திருமுழுக்கு யோவான் போல நாமும் ஆன்மிக வழிகாட்டிகளாக இருக்கிறோம். சில நேரங்களில் நமக்கு ஆன்மிக வழிகாட்டிகள் தேவைப்படுகிறார்கள். இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு விடுக்கும் சவால்கள் எவை?
(அ) ஆன்மிக வழிகாட்டியின் பண்புகளும் பணிகளும்
ஆன்மிக வழிகாட்டி முதலில் தானே கடவுள் அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும். தான் பெற்ற கடவுள் அனுபவத்தின் பின்புலத்தில் தனக்குக் கீழே இருப்பவர்களை வழிநடத்த வேண்டும். தலத்திருஅவை ஆயர், பங்குத்தந்தை, துறவறத்தார் ஆகியோரைத் தாண்டி நம் குடும்பங்களில் உள்ள தாத்தா,பாட்டி, அப்பா, அம்மா, சமூகத்தில் உள்ள ஆசிரியர்கள், பெரியவர்கள் அனைவருமே ஆன்மிக வழிகாட்டிகள்தாம். சில நேரங்களில் ஆன்மிக வழிகாட்டிகளாக நாம் இருக்க வேண்டியதன் அவசியத்தை மறந்துவிடுகிறோம். இளவல்கள் வளர்ந்தவுடன் பார்த்துக்கொள்வார்கள் என நாம் ஓய்ந்திருக்கிறோம். கடவுள் அனுபவத்தை நாம் பெறுவதற்கும், பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.
(ஆ) இழத்தலை எதிர்கொள்வது
ஆன்மிக வழிகாட்டி தனக்குக் கீழிருப்பவருக்குத் தன் அனுபவத்தையும் ஞானத்தையும் பகிர்ந்தளிக்கும் தாராள உள்ளம் பெற்றிருக்க வேண்டும். தன்னிடம் கற்றுக்கொள்கிற சீடர் தன்னைவிட்டுச் சென்றுவிடுவார் என்பதும், அவர் தன்னைவிடப் பெரியவராக உயர்வார் என்பதும் வழிகாட்டிக்குத் தெரிந்தாலும், அவர் இழத்தலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார். ஆண்டவரின் குரலைக் கேட்கத் தொடங்கிவிட்ட சாமுவேல் என்னும் இளவலுக்குத் தன் குரல் இனித் தேவையில்லை என்பது ஏலிக்குத் தெரியும். கடவுளின் செம்மறியாகிய இயேசுவைப் பின்பற்றிச் சென்ற தன் சீடர்கள் இனித் தம்மைப் பின்தொடரமாட்டார்கள் என்பது திருமுழுக்கு யோவானுக்குத் தெரியும், தன் சீடர்களை இயேசுவின் பின்னால் அனுப்பிவிடுகிறார். தன் குழுமமே தன்னைத் தவறாகப் புரிந்துகொள்ளும் நிலை வரும் என்பது பவுலுக்குத் தெரிந்தாலும் பவுல் தன் கடமையைச் செய்கிறார். மற்றவர்கள் நம்மைவிடப் பெரியவர்கள் ஆகிவிடுவார்கள் என்ற எண்ணத்தில் சில நேரங்களில் நாம் அவர்களுக்கு வழிகாட்ட மறுக்கிறோம் அல்லது தயங்குகிறோம். கைகளை விரித்துக் கொடுப்பதும், கற்றுக்கொடுப்பதும் ஆன்மிக வழிகாட்டியின் முதன்மையான செயலாக இருக்க வேண்டும்.
(இ) உடனடிப் பதிலிறுப்பும் தொடர்பணியும்
ஆன்மிக வழிகாட்டியின் குரலுக்கு உடனடியான பதிலிறுப்பு அவசியம். ஏலியின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து செயலாற்றுகிறார் சாமுவேல். தங்கள் தலைவருக்குப் பணிந்து இயேசுவை உடனடியாகப் பின்பற்றுகிறார்கள் சீடர்கள். இவர்களை உந்தித் தள்ளியது இவர்களுடைய தாழ்ச்சியும் ஆர்வமும் அர்ப்பணமுமே. இவர்கள், தொடர்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்டத் தொடங்குகிறார்கள். ஆன்மிக வழிகாட்டுதல் என்பது வாழையடி வாழையாக நடந்தேறுகிறது. சாமுவேல் இஸ்ரயேல் மக்களின் வழிகாட்டியாகவும், அந்திரேயா சீமோன் பேதுருவின் வழிகாட்டியாகவும் மாறுகிறார்.
‘உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன்!’ (காண். திபா 40) என்று கடவுளின் அழைப்புக்குப் பதிலிறுப்பு செய்ய நம்மை அழைக்கிறது இன்றைய பதிலுரைப்பாடல். ஆண்டவரை அடையாளம் காட்டுகிறார்கள் ஆன்மிக வழிகாட்டிகள். அவர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அவற்றுக்குப் பதிலிறுப்பு செய்கிறோம் நாம்!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a reply to charlesgp1953 Cancel reply