இன்றைய இறைமொழி. திங்கள், 25 டிசம்பர் 2023. சில குடில்கள் எப்போதும் நீடிக்கின்றன!

இன்றைய இறைமொழி
திங்கள், 25 டிசம்பர் 2023
கிறிஸ்து பிறப்பு பெருவிழா – நள்ளிரவுத் திருப்பலி
எசாயா 9:1-6. தீத்து 2:11-14. லூக்கா 2:1-14

சில குடில்கள் எப்போதும் நீடிக்கின்றன!

ஒரு நிழற்படம். மங்கிய மாலைப்பொழுது. திடீரென மழைத்துளிகள் விழத்தொடங்கும் பொழுது. பழைய கைத்தறிச் சேலை ஒன்றை உடுத்தியவாறு ஓர் இளம் தாய். அவளுடைய மார்பைக் கட்டிக்கொண்டு தொங்கும் ஆடையில்லாக் கைக்குழந்தை. அவருக்கு அருகில் தலையைச் சொறிந்துகொண்டு ஒரு குழந்தை. இரு கைகளையும் தூக்கிக்கொண்டு இன்னொரு குழந்தை. சாலை ஒன்றில் அமர்ந்துகொண்டிருக்கும் இந்தக் குடும்பத்திற்குத் தார்ப்பாய்தான் வீடு. காற்றின் வேகத்தில் தார்ப்பாய் அடித்துச் செல்லப்படாதவாறு வெறும் இரப்பர் வளையல்கள் அணிந்த தன் கைகளைத் தலைக்கு மேல் தூக்கிக்கொண்டு மழைக்குள் அமர்ந்திருக்கிற அந்தத் தாய்க்குப் பெயரில்லை. நிழற்படத்தின் கீழே இத்தாலிய மொழியில் ஒரு வாக்கியம்: ‘சில குடில்கள் எப்போதும் நீடிக்கின்றன!’ (‘Alcuni presepi durano tutto l’anno’).

இன்று நம் ஆலயத்தில் குடில் ஜோடித்துள்ளோம். அசிசி நகர் புனித பிரான்சிஸ் முதன்முதலாக அமைத்த நிஜ மனிதர்களை வைத்து உருவாக்கிய குடிலின் 800-ஆவது ஆண்டு இது. இந்த ஆண்டில் நாம் அமைக்கும் குடில்களைச் சந்திக்கும்போதெல்லாம் ஒப்புரவு அருளடையாளம் பெற்றுத் தூய்மையான நிலையில், நம்பிக்கை அறிக்கை செய்து, திருத்தந்தையின் கருத்துகளுக்காக ஜெபித்தால் நமக்குப் பரிபூரண பலன் கிடைக்கும் என அறிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். புனித இஞ்ஞாசியார் குடில் முன் நின்று மேற்கொள்ளும் அழகான காட்சி தியானத்தைத் தன்னுடைய ஆன்மிகப் பயிற்சிகள் நூலில் எழுதுகிறார். குடில் என்பது இவ்வாறாக, மறைக்கல்வியும் நம்பிக்கையும் வழங்கும் இடமாகவும், காட்சி தியானத்தின் வழியாகக் கடவுளின் மையத்தை நோக்கி நம்மை நகர்த்தும் புள்ளியாகவும் இருக்கிறது.

கடவுளால் உருவாக்கப்பட்ட மனிதர்கள் எப்படி ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்களோ, அவ்வாறே மனிதர்களால் உருவாக்கப்பட்ட குடில்களும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்கின்றன. ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு மாதிரி ஜோடிக்கிறோம். கடந்த ஆண்டு போல இந்த ஆண்டு வேண்டாம் என்றும், அந்த ஆலயத்தில் செய்ததுபோல நம் ஆலயத்தில் வேண்டாம் என்றும் நினைக்கிறோம். உலக நிகழ்வுகளின் பின்புலத்தில், மையக்கருத்து கொண்டு, ஒரே பொருள்களைப் பயன்படுத்தி என நிறைய படைப்பாற்றலைப் பயன்படுத்தி குடில்கள் ஜோடிக்கிறோம்.

ஒரு பங்குத்தளத்தில் பங்குத்தந்தை ஒருவர் குடில் ஒன்றை ஜோடித்து, குழந்தை இயேசுவை வைப்பதற்குப் பதிலாக முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை வைத்து, அதன் மேலே, ‘நீங்களே இங்கு பிறக்கிற கிறிஸ்து’ என எழுதி வைத்தார். இவ்வாறாக, புதிய புதிய கருத்துகளுடனும் வடிவங்களுடனும் கிறிஸ்து ஒவ்வோர் ஆண்டும் பிறக்கிறார். ஆனால், நாம் வைத்திருக்கிற இக்குடில்கள் பிரிக்கப்படும். நாம் இன்று குடில்கள் வைக்கிற இடத்தில் இன்னும் நான்கைந்து மாதங்களுக்குள் உயிர்த்த ஆண்டவரை வைப்போம். குடில்கள் குகைகளாக மாறிவிடுகின்றன. நாம் அமைக்கும் குடில்கள் பிரிக்கப்படுகின்றன. புதிய குகைகளாக அவை மாறுகின்றன.

ஆனால், சில குடில்கள் என்னவோ எப்போதும் நீடிக்கின்றன. அவை ஒருபோதும் மாறுவதில்லை.

ஆண்டவராகிய இயேசு பிறந்த முதல் குடில் பற்றி எழுதுகிறார் புனித லூக்கா. குடில்கள் எதுவும் அமைக்கப்படாமலேயே ஒரு தம்பதியரின் பயணம் புறப்படுகிறது. யோசேப்பு தன் மனைவி மரியாவை அழைத்துக்கொண்டு தன் சொந்த ஊருக்கு வருகிறார். கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து புறப்பட்டு யூதேயாவிலுள்ள பெத்லகேம் நோக்கி வருகிறார்கள் யோசேப்பும் மரியாவும், மரியாவின் வயிற்றில் உள்ள குழந்தையும். கடவுள் தம் சொந்த ஊருக்கு வருகிறார். கடவுள் மனிதர்கள் நடுவே வசிக்க வருகிறார். இதையே யோவான் நற்செய்தியாளர், ‘அவர் தமக்குரியவர்களிடம் வந்தார்’ (யோவா 1:11) எனப் பதிவு செய்கிறார். நாம் எல்லாரும் அவருக்கு உரியவர்கள். அவர் நம்மைத் தேடி வருகிறார். இயேசுவின் முதற் பயணம் நாசரேத்திலிருந்து யூதேயாவை நோக்கி இருந்ததுபோல, அவருடைய இறுதிப் பயணமும் இருக்கும். தீவனத்தொட்டியில் கிடத்தப்பட்ட இயேசு, சிலுவையில் கிடத்தப்படுவார். அப்பத்தின் வீடு என்னும் அழைக்கப்படும் பெத்லகேமில் பிறந்த இயேசு, எருசலேமில் நற்கருணையை ஏற்படுத்தித் தம்மையே உணவாக வழங்குவார். எருசலேமிலிருந்து அவர் மீண்டும் தம் தந்தையிடம் திரும்புவார். ‘கடவுள் நம்மோடு’ என நம்மிடம் வந்த இயேசு, ‘கடவுள் நமக்காக’ எனக் கடவுளிடமே திரும்புவார்.

மரியா கருவுற்றிருந்தார் என்றும், அவர்கள் யூதேயாவுக்கு வந்தபோது அவருக்குப் பேறுகாலம் வந்தது எனவும் எழுதுகிறார் லூக்கா. கருவுற்ற பெண்கள், பேறுகாலத்திற்குக் காத்திருக்கிற பெண்களும் பயணம் செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்படும் அளவுக்குக் கொடுமையாக இருந்த மக்கள் தொகைக் கணக்கு நமக்குச் சற்றே கோபத்தை வரவைக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை அதிகாரம் என்னவோ வலுவற்றவர்களைப் பொருட்படுத்தாததாகவே இருக்கிறது.

குழந்தையைப் பெற்றெடுக்கிற மரியா தீவனத்தொட்டியில் குழந்தையைக் கிடத்துகிறார். ‘விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை‘ என்று இதற்கான காரணத்தைப் பதிவிடுகிறார் லூக்கா. இந்த வாக்கியத்துக்கு விளக்கம் தருகிற பேராயர் ஷீன், ‘அன்றைய நாளில் விடுதிகள் நிரம்பி வழிந்தன. அங்கே அமைச்சர்களுக்கு இடம் இருந்தது. அமைச்சர்களின் உதவியாளர்களுக்கு இடம் இருந்தது. மக்கள்தொகைக் கணக்கெடுக்கும் அதிகாரிகளுக்கு இடம் இருந்தது. ஆளுநரின் படைவீரர்களுக்கு இடம் இருந்தது. இரண்டு மடங்கு பணம் கொடுத்துப் பெறுவதற்கு இடம் இருந்தது. ஆனால், நாசரேத்துத் தம்பதிக்கு இடமில்லை.’ ‘கடவுள் எமக்கு வேண்டாம்’ என்று அன்றே சொன்னது மனுக்குலம். இதையே யோவான், ‘அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்குரியவர்கள் அவரை ஏற்றக்கொள்ளவில்லை’ (யோவா 1:11) என எழுதுகிறார்.

ஒட்டுமொத்த உலகையும் படைத்த கடவுளுக்கு விடுதியில் இடம் மறுக்கப்பட்டபோது யோசேப்பும் மரியாவும் அங்கிருந்து நகர்கிறார்கள். தாங்கள் யாரென்றும் மரியாவின் வயிற்றில் இருப்பது யாரென்றும் அவர்கள் மற்றவர்களுக்குப் புரியவைக்க விரும்பவில்லை. தன் கனவுபற்றி யோசேப்பு வாய்திறக்கவில்லை. கபிரியேல் தூதரைக் கண்ட காட்சி பற்றி மரியா சொல்லவில்லை. ஏனெனில், ‘பெரிய புதையலைக் கண்ட ஒருவன், எல்லாரிடமும் போய், ‘என்னிடம் புதையல் ஒன்று இருக்கிறது’ எனச் சொன்னால் அவனை யாரும் நம்ப மாட்டர்கள்’ என்பது அவர்களுக்குத் தெரியும்.

‘கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்’ எனப் பதிவு செய்கிறது விவிலியம் (சஉ 3:11). இடமும் தமக்குரியது காலமும் தமக்குரியது என்பது கடவுளுக்குத் தெரியும். மனிதர்களின் ‘நோ!’ என்னும் சொல், கடவுளை நம்மிடமிருந்து வெளியேற்றிவிட இயலாது. அவர் மாடடைக் குடிலில் பிறக்கிறார். தீவனத்தொட்டி அவருடைய இருப்பிடமாகிறது. துணிகள் சுற்றப்படுகின்றன. முதற்பெற்றோரின் பாவத்தால் வந்தது ஆடை. பாவம் போக்கப் பிறந்த குழந்தையையும் தழுவிக்கொள்கின்றன ஆடைகள். தீவனத்தொட்டி, ஆடைகள், குழந்தை – இம்மூன்றும் வானதூதர் வழங்குகிற அடையாளமாக மாறுகின்றன.

விடுதியில் இடம் இல்லையென்றாலும் தீவனத்தொட்டியும் ஆடைகளும் தயாராக இருந்தன. ஆக, கிறிஸ்து பிறப்பு என்பது எதிர்மறையான நிகழ்வு அன்று. மனிதர்களின் நிராகரிப்புக் கடவுளை ஒருபோதும் அந்நியமாக்கிவிடாது. அவர் தமக்கென ஓர் இடத்தைக் கண்டுபிடித்துக்கொள்கிறார்.

இந்நிகழ்வு நடந்துகொண்டிருக்கிற இதே நேரத்தில் நடக்கும் நிகழ்வுபற்றித் தொடர்ந்து எழுதுகிறார் லூக்கா:

இங்கே மாடடைக் குடில். அங்கே திறந்தவெளி. குடிலை ஒளிர்விக்கிறார் கடவுளின் மாட்சியாகிய கிறிஸ்து. திறந்தவெளியை ஒளிர்விக்கிறது கடவுளின் மாட்சிநிறை ஒளி.
வார்த்தை இங்கே பிறந்து கிடக்கிறது. வார்த்தை அங்கே அறிவிக்கப்படுகிறது.
இங்கே விழித்திருக்கிறார்கள் யோசேப்பும் மரியாவும். அங்கே விழித்திருக்கிறார்கள் இடையர்கள்.

பொய்யர்கள், திருடர்கள், மற்றவர்களின் விளைச்சலில் தம் மந்தைகளை மேயவிட்டு வளர்ப்பவர்கள், அழுக்கர்கள் எனச் சொல்லப்பட்ட இடையர்களுக்கு அறிவிக்கப்படுகிறது குழந்தை பிறப்பின் செய்தி: ‘இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத்தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அடையாளம்.’ ஒரே மூச்சில் சொல்லி முடிக்கிறார் வானதூதர்.

அகுஸ்து சீசர் போன்ற அரசர்களின் பிறப்புச் செய்தி மகிழ்ச்சியாக அறிவிக்கப்பட்ட அந்நாள்களில் இயேசுவின் பிறப்புச் செய்தியும் மகிழ்ச்சியின் செய்தியாக அறிவிக்கப்படுகிறது. ஆக, குழந்தை என்பது வலுவின்மையின் அடையாளமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அது ஓர் இளவரசராகவும் இருக்கிறது. ‘ஆண்டவர், மெசியா, மீட்பர்’ என்னும் மூன்று தலைப்புகளை குழந்தைக்கு வழங்குகிற வானதூதர், ‘உங்களுக்காக’ பிறந்திருக்கிறார் என அறிவிக்கிறார்.

யாரெல்லாம் மெசியாவுக்காகக் காத்திருக்கிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே மெசியாவின் பிறப்பு அறிவிக்கப்படுகிறது. இன்றைய முதல் வாசகத்தில், யூதா நாடு வலுவற்றிருந்தபோது, போர்மேகங்களும் குழப்பமும் கலக்கமும் சூழ்ந்திருந்த வேளையில் இறைவாக்குரைக்கிற எசாயா, ‘ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார். ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார். ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும். அவர் திருப்பெயரோ ‘வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்’ எனப்படும்’ என மொழிகிறார். இக்குழந்தை அரசர் எசேக்கியாவைக் குறிப்பதுபோல இருந்தாலும், கிறிஸ்தவ வாசிப்பில் இது இயேசுவையே குறிக்கிறது. ஏனெனில், என்றுமுள ஒருவரே என்றுமுள தந்தையாகவும் வலிமைமிகு இறைவனாகவும் இருக்க முடியும்.

‘அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்துள்ளார்’ எனத் தொடர்ந்து பதிவு செய்கிறார் யோவான் (1:12). இதையே, ‘உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி, உலகில் அவருக்கு உகந்தோருக்கு மகிழ்ச்சி’ எனப் பாடுகிறார்கள் வானதூதர்கள்.

‘உன்னதம்’ அல்லது ‘விண்ணகம்’ என்றால் என்ன என விளக்குகிற புனித அகுஸ்தினார், ‘விண்ணகம் என்பது மேலே இருக்கும் ஓர் இடம் அல்ல, மாறாக, நம் இதயத்தின் ஒரு பகுதி என எழுதுகிறார். உடைந்த இதயம்கொண்டோருக்கு அருகில் உள்ளார் கடவுள் (காண். திபா 34:18). தாழ்ச்சியோடு நாம் குனியும்போதுதான் அவரைக் கண்டுகொள்ள முடியும். இதன் பின்புலத்தில்தான் இன்றும் பெத்லகேமில் உள்ள இயேசு பிறந்த ஆலயத்தின் நுழைவாயில் மிகவும் சிறியதாக உள்ளது. தங்களையே வளைத்துக் குனிந்து நடக்கத் தயாராக இருப்பவர்களே உள்ளே நுழைய முடியும்.

‘கடவுள் தம் சொந்த ஊருக்குப் பயணம் செய்கிறார்,’ ‘கடவுள் குழந்தைபோல வலுவின்மையை ஏற்கிறார்,’ ‘கடவுள் நிராகரிக்கப்படுகிறார்,’ ‘கடவுள் நம் உணவாகத் தீவனத்தொட்டியில் கிடக்கிறார்,’ ‘முதல் ஆதாம் போல இந்த இரண்டாம் ஆதாமும் ஆடைகளால் உடுத்தப்படுகிறார்,’ ‘கடவுளின் மாட்சி ஒளிர்கிறது’ என்று கிறிஸ்து பிறப்பு பற்றி நாம் புரிந்துகொள்ளும் அனைத்துப் பாடங்களையும் ஒற்றை வரியில் தீத்துவுக்கு எழுதுகிறார் பவுல்: ‘மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.’ ஆக, கடவுளே வெளிப்படுத்தினாலன்றி அவருடைய மறைபொருளை நாம் அறிந்துகொள்ள இயலாது. கடவுள் மனித வலுவின்மை, இயலாமை வழியாகத் தம்மையே வெளிப்படுத்துகிறார்.

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா நமக்குத் தரும் பாடங்கள் எவை?

(அ) நாம் ஒவ்வொருவரும் கடவுள் பிறக்கிற குடில். நாம் இன்று அமைத்துள்ள குடில்கள் பிரிக்கப்படும். பிரிக்கப்படாத ஒரு குடில் என்றால் அது நம் ஒவ்வொருவருடைய வாழ்வுதான். நம் குடிலிலும் யோசேப்பு, மரியா போல நம் பெற்றோர்கள், இடையர்கள் போல உறவினர்கள், ஞானியர்கள் போல ஆசான்கள், பெரியவர்கள் இருக்கிறார்கள். நம் குடிலும் சில நேரங்களில் நாற்றம் அடிக்கும். ஆனால், இந்தக் குடிலில்தான் கடவுளின் மாட்சி வெளிப்படுகிறது. இந்தக் குடிலில்தான் நம் வலுவின்மை வெளிப்படுகிறது. நம்மைத் தாங்கவதற்குத் தீவனத்தொட்டியும், உடுத்திக்கொள்ள ஆடைகளும் தேவை. நாம் வாழ்க்கை என்னும் குடிலை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்வோம்.

(ஆ) நம்மைப் போலவே நமக்கு அடுத்திருப்பவரும் ஒரு குடில். அந்தக் குடிலிலும் கடவுள் இருக்கிறார். ‘வார்த்தை மனிதரானார். நம்மிடையே குடிகொண்டார்’ எனக் கடவுளின் மனுவுருவாதல்பற்றிப் பதிவு செய்கிறார் யோவான் (1:18). கடவுள் மனிதநிலையை ஏற்றதால் நம் மனிதம் இறைமை நிலையை அடைந்து மதிப்பும் மாட்சியும் பெறுகிறது. ஒவ்வொரு குழந்தையிலும் ‘ஆண்டவரை, மெசியாவை, மீட்பரை’ நாம் கண்டுகொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதரிலும் அவரைக் கொண்டாட வேண்டும். ‘உங்களுக்காகப் பிறந்துள்ளார்’ என மொழிகிறார் வானதூதர். நமக்கு அருகில் இருக்கும் ஒவ்வொருவரும் நமக்காகப் பிறந்துள்ளார். இவ்வுலகம் நமக்கானது. அனைவரும் நமக்குரியவர்கள். ஆக, ஒருவர் மற்றவரை அவருடைய வலுவின்மையோடு நாற்றத்தோடு நெடியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

(இ) தீவனத்தொட்டியில் கிடத்தப்பட்டிருந்த இயேசுவை இப்போது நாம் நற்கருணையில் உட்கொள்ளப்போகிறோம். வாழ்வுதரும் உணவாக அவர் நம்மையே தொடர்ந்து தருகிறார். தீவனத்தொட்டியில் கிடத்தப்பட்ட இயேசுவின் உடல் சிலுவையில் கிடத்தப்பட்டு நமக்கு மீட்பாக மாறுகிறது. அவருடைய உணவை உட்கொள்ளும் நாம் அவரைப் போலவே மாறுவது அவசியமாகிறது. நாம் எத்தனை குடில்கள் அமைத்துக் கொண்டாடினாலும் இயேசு அங்கே பிறப்பதில்லை. ஏனெனில், அவர் பிறந்து, வாழ்ந்து, இறந்து, உயிர்த்து நம்மோடு எப்போதும் வாழ்கிறார். அவர் மீண்டும் அரசராக வருவார் என்பதே நம் எதிர்நோக்கு. மண்ணகத்தின் குடில்களைக் காணும் நாம் விண்ணகத்தின் நம் நிலையான குடிலை நோக்கி நம் உள்ளத்தைத் திருப்புவோம். அங்கே இயேசு கடவுளின் வலப்புறம் வீற்றிருக்கிறார்.

சில குடில்கள் எப்போதும் நீடிக்கின்றன.
அரசு மருத்துவமனைகளில்.
அநாதை இல்லங்களில்.
முதியோர் காப்பகங்களில்.
சிறைகளில்.
புலம்பெயர்ந்தோரின் முகாம்களில்.
பேருந்து நிலையங்களில், இரயில் நிலையங்களில்.
சில குடில்கள் எப்போதும் நீடிக்கின்றன.
சொந்த ஊரிலும் மாட்டுத்தொழுவம் மட்டுமே தமக்குச் சொந்தமாக இருந்த யோசேப்பு போல,
தன் வயிற்றில் உள்ள குழந்தை உன்னத கடவுளின் மகன் என்றாலும் மௌனமாக நகர்ந்த மரியா போல,
நாம் என்னவோ நகர்ந்துகொண்டே இருக்கிறோம் நம் நிலையான குடில் நோக்கி!

ஆம், சில குடில்கள் எப்போதும் அகற்றப்படுவதில்லை!

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

One response to “இன்றைய இறைமொழி. திங்கள், 25 டிசம்பர் 2023. சில குடில்கள் எப்போதும் நீடிக்கின்றன!”

  1. Sr. Yesu Thangam Avatar
    Sr. Yesu Thangam

    Nice reflection! It opened many venues to ponder about the meaning of Christmas. Thank you.

    Like

Leave a reply to Sr. Yesu Thangam Cancel reply