இன்றைய இறைமொழி
செவ்வாய், 14 ஏப்ரல் 2026
பாஸ்கா காலம் இரண்டாம் வாரம் – செவ்வாய்
தமிழ்ப் புத்தாண்டு
திப 4:32-37. யோவா 3:7-15
மேலிருந்து பிறத்தல்
இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசுவுக்கும் நிக்கதேமுக்குமான உரையாடல் தொடர்கிறது. ‘மறுபடியும் பிறத்தல்’ என்பது கிரேக்க மூலப் பதத்தில் ‘மேலிருந்து பிறத்தல்’ (‘கெனேதே அனோதென்’) என்று உள்ளது (காண். யோவா 3:3, 7). தொடர்ந்து வரும் பகுதியில் ‘நீரினாலும் ஆவியாலும் பிறத்தல்’ (3:5), ‘ஆவியால் பிறத்தல்’ (3:8) என்று உள்ளது.
கீழிருந்து பிறத்தல் என்பது சாதராண மனிதப் பிறப்பு. மேலிருந்து பிறத்தல் என்றால் திருமுழுக்கு வழியாக அல்லது ஆவியாரின் கொடைகள் வழியாகப் பிறத்தல் என எடுத்துக்கொள்ளலாம்.
நம் அனைவருக்குமே இரண்டு பிறப்புகள் உள்ளன என்று சொல்லப்படுவதுண்டு. முதல் பிறப்பு, நாம் இந்த உலகில் நம் தாய் வழியாகப் பிறந்தது. இரண்டாவது பிறப்பு, நம் வாழ்வின் நோக்கம், இலக்கு ஆகியவற்றைக் கண்டுகொள்கிற பிறப்பு. இரண்டாவது பிறப்பே நம் வாழ்வுக்கு பொருள் தருகிறது. நம்மால் இந்த உலகுக்கும் மற்றவர்களுக்குமான பயன்பாட்டை நாம் இரண்டாவது பிறப்பின் வழியாகவே அறிகிறோம்.
நிக்கதேம் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட எபிரேய மரபு மற்றும் வளர்ந்த யூத பின்புலம் பற்றிய மேட்டிமை உணர்வு கொண்டிருந்தார். அவரோடு உரையாடுகிற இயேசு, நம் முதல் பிறப்பு கொண்டு வருகிற அடையாளங்கள் இரண்டாவது பிறப்பை நாம் அடைவதற்குத் தடையாக இருக்கும் என்று சொல்கிறார். யோவான் நற்செய்தியைப் பொருத்தவரையில் இயேசுவை இறைமகன் என்று நம்புகிறவர் மீண்டும் பிறக்கிறார் அல்லது மேலிருந்து பிறக்கிறார்.
கீழிருந்து பிறத்தலை நாம் முன்நிறுத்தும்போது பாலின வேறுபாடு, சாதிய வேறுபாடு, இன-சமய-மொழி வேறுபாடு பாராட்டுகிறோம். மேலிருந்து பிறக்கும்போது நாம் இவற்றையெல்லாம் கடந்தவராக – காற்று போல எங்கிருந்து வருகிறது எங்கே செல்கிறது என்று தெரியாததுபோல – விடுதலை உணர்வு பெற்றவராக மாறுகிறோம்.
மேலிருந்து பிறத்தலுக்கான இன்னொரு அடையாளத்தையும் இயேசு தருகிறார்: மானிட மகன் உயர்த்தப்படுதல். ‘உயர்த்தப்படுதல்’ என்பது இயேசுவின் சிலுவை இறப்பையும் உயிர்ப்பையும் விண்ணேற்றத்தையும் குறிக்கிறது.
இன்றைய முதல் வாசகத்தில், தொடக்கக் கிறிஸ்தவர்கள் புதிய வாழ்வு முறைக்குள் பிறக்கிறார்கள். இயேசுவின் உயிர்ப்பு திருத்தூதர்களின் தனிப்பட்ட வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வந்தது – பயம் விடுத்து அவர்கள் துணிச்சல் பெற்றார்கள். சீடர்களின் குழும வாழ்விலும் மாற்றத்தைக் கொண்டு வந்தது – தங்களுடைய சமகாலத்து மக்களின் வாழ்வியலுக்கு மாற்றான ஒரு வாழ்வியலைப் பின்பற்றத் தொடங்குகிறார்கள் – பொதுவுடைமை, பகிர்வு, நெருக்கம், ஒருமைப்பாடு, இறைவேண்டல் மைய வாழ்க்கை முறை.ஒட்டுமொத்த குழுமமே இங்கு மேலிருந்து பிறக்கிறது.
இன்றைய நாளில் நான் மேலிருந்து பிறப்பது எப்படி? மேன்மையானவற்றை, ஆவிக்குரியவற்றை நான் தக்கவைத்துக்கொள்வது எப்படி?
சித்திரை 1 இன்று. தமிழ்ப் புத்தாண்டை நாம் தொடங்குகிறோம். மறுபடியும் பிறந்தவர்களாக, மேன்மையுடையவர்களாக நாம் இந்தப் புத்தாண்டுக்குள் அடியெடுத்து வைப்போம்.
இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி
A ‘Yesni Prays’ Initiative

Leave a comment