இன்றைய இறைமொழி
ஞாயிறு, 12 ஏப்ரல் 2026
பாஸ்கா காலம் 2-ஆம் ஞாயிறு
இறைஇரக்கத்தின் ஞாயிறு
திப 2:42-47. திபா 118: 2-4, 13-15, 22-24. 1 பேது 1:3-9. யோவா 20:19-31
விரல் தொடும் நெருக்கம்
இன்றைய ஞாயிறு இறைஇரக்கத்தின் ஞாயிறு என்று கொண்டாடப்படுகிறது. பாஸ்கா எண்கிழமை இன்றுடன் நிறைவுபெறுகிறது. உயிர்ப்பு ஞாயிறு தொடங்கி இன்று வரை எட்டு நாள்களும் திருவழிபாட்டில் ஒற்றை நாள் என்று கருதப்படுகிறது.
திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் 2000-ஆவது ஆண்டில், அருள்சகோ பவுஸ்தினா கொவால்ஸ்கோ புனிதர் பட்டம் பெறுகிற நிகழ்வில், இந்த நாளை ‘இறைஇரக்கத்தின் ஞாயிறு’ என்று அறிவிக்கிறார். இறைஇரக்க பக்திமுயற்சியில் தனிப்பட்ட அளவிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் திருத்தந்தை. இறை இரக்கத்திற்கான திருவிழா 1930-ஆம் ஆண்டு புனித பவுஸ்தினாவுக்கு நம் ஆண்டவர் இயேசுவால் வெளிப்படுத்தப்பட்டது. ஒப்புரவு அருளடையாளம் பெற்று நற்கருணை வாங்குதல் வழியாக இறைவனின் இரக்கத்தைப் பெற நாம் அழைப்பு பெறுகிறோம்.
திருத்தந்தை பிரான்சிஸ், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு (2015-2016) கொண்டாட்டத்தில், கடவுளுடைய முகம் இரக்கம் என்று நமக்கு வலியுறுத்தினார்.
கடவுளில் வேரூன்றி மானிடர் நோக்கிப் பயணிக்கும் நம்பிக்கை
இன்றைய முதல் வாசகம் பெந்தகோஸ்தே நிகழ்வைத் தொடர்ந்து எருசலேமில் வாழ்ந்த நம்பிக்கையாளர்களின் வாழ்க்கை முறையை எடுத்துரைக்கிறது. ”திருத்தூதர் போதனை,’ ‘நட்புறவு,’ ‘அப்பம் பிடுதல்,’ ‘இறைவேண்டல் செய்தல்’ என்னும் நான்கு தூண்களில் கட்டப்பட்டிருந்தது தொடக்க கிறிஸ்தவம். பொதுவுடைமை வாழ்வு முறையை அவர்கள் மேற்கொண்டார்கள்: ‘அனைவரும் ஒன்றாய் இருந்தனர். எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர்.’ ‘ஆண்டவர் நாள்தோறும் அவர்களோடு சேர்த்துக்கொண்டே இருந்தார்’ – அவர்கள் தங்கள் நம்பிக்கையை வாழ்ந்தார்கள். ஆண்டவர் அவர்கள் வழியாக செயலாற்றினார்.
பாடங்கள்: நம்பிக்கை என்பது வாழ்க்கை முறை – மாற்று வாழ்க்கை முறை! திருஅவை என்பது அமைப்பு அல்ல, மாறாக, ஓர் அனுபவம். வாழ்க்கையால் நற்செய்தி அறிவிப்பு.
பேரன்பும் இரக்கமும்
இன்றைய பதிலுரைப்பாடல் (118) – பாஸ்கா எண்கிழமையில் நாம் தொடர்ந்து பாடிய திருப்பாடல் – ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என்று ஆண்டவரின் பேரன்பைப் போற்றிப் பாடுகிறது. ‘பேரன்பும்’ ‘இரக்கமும்’ இணைந்து செல்கின்றன. ஆண்டவராகிய கடவுளை தன் ஆற்றல், பாடல், மீட்பு என அறிக்கையிடுகிறார் பாடலாசிரியர்.
துன்பத்தில் மனஉறுதி
துன்புறும் தன் குழுமத்துக்கு அறிவுரை பகர்கிற பேதுரு, இந்நாளில் நாம் அடையும் துன்பம் அந்நாளில் நமக்கு மகிழ்ச்சி தரும் என்கிறார். மேலும், ‘பொன் புடமிடப்படுதல்’ என்னும் உருவகத்தைக் கையாண்டு ‘இன்று நாம் ஏற்கும் துன்பங்கள் நாளைய மகிழ்ச்சியாக மாறும்’ என்று எதிர்நோக்கு கொண்டிருக்க அழைக்கிறார்.
இரண்டு நாள்கள் – இரண்டு நிகழ்வுகள்
இன்றைய நற்செய்தி வாசகம் உயிர்த்த இயேசு தம் சீடர்களுக்கு தோன்றிய இரண்டு நிகழ்வுகளை – யோவான் நற்செய்தியின்படி – பதிவு செய்கிறது.
முதல் நிகழ்வு வாரத்தின் முதல்நாளில் – ஞாயிற்றுக்கிழமை, இயேசு உயிர்த்த அதே நாளில் – நடக்கிறது. சீடர்கள் பேதுருவும் யோவானும் வெற்றுக்கல்லறையைக் காண்கிறார்கள். பின்னர் இயேசு மகதலா மரியாவுக்குத் தோன்றுகிறார். தொடர்ந்து மாலையில் திருத்தூதர்களைச் சந்திக்கிறார் இயேசு. ‘உங்களுக்கு அமைதி உரித்தாகுக!’ என்று அமைதியை வழங்குகிறார். அவர்களுடைய பயத்திலிருந்து அவர்களை வெளியேற்றுகிறார். பயமும் குற்ற உணர்வும் கோபமும் கொண்டிருந்த சீடர்கள் மன்னிப்பை ஒருவர் மற்றவரோடு பகிர்ந்துகொள்ள அதிகாரம் வழங்குகிறார். இயேசுவின் வருகை சீடர்களுக்கு மகிழ்ச்சி தருகிறது. ‘ஆண்டவரைக் கண்டோம்’ என்று தோமாவுக்கு அவர்கள் அறிவிக்கிறார்கள். தோமா தயக்கம் காட்டுகிறார்.
இரண்டாவது நிகழ்வு – எட்டு நாள்களுக்குப் பின் – அதே இல்லத்தில் நடக்கிறது. சீடர்களின் பயம் நீங்கவில்லை. தோமாவுடன் உரையாடுகிற இயேசு அவரிடம் தம் கைகளையும் விலாவையும் நீட்டுகிறார். உடனடியாக ‘நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!’ என்று நம்பிக்கை அறிக்கை செய்கிறார். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்
தோமாவின் விரல்கள் வழியே நாம் இயேசுவைத் தொடுகிறோம். கடவுளின் உடலுக்குள் நம் கையை விடும் அளவுக்கு நெருக்கம்.
மேலும், தோமா இயேசுவின் உடலுக்குள் கையிடும் நிகழ்வு அவர் உடலைக் கொண்டிருந்தார் என்பதையும் நமக்கு எடுத்துரைக்கிறது.
இறுதியில் நற்செய்தி நூல் எழுதப்பட்டதன் நோக்கத்தை – நம்பவும் வாழ்வு பெறவும் – எடுத்துரைக்கிறார் யோவான்.
இறைஇரக்கத்தின் ஞாயிறு பின்புலத்தில் புரிதல்: மன்னிப்பு – ஒப்புரவு அருளடையாளம் – இன்றைய நாளில் நாம் ஒப்புரவு வழிபாட்டில் பங்கேற்க அழைக்கப்படுகிறோம். கடவுளுடைய இதயத்தைத் தொடும் அளவுக்கு நெருங்கி நிற்கும் மானுடம். கடிந்துகொள்ளாத கருணை – இயேசு தம் சீடர்களைக் கடிந்துகொள்ளவில்லை, மாறாக, அவர்கள் இருப்பதுபோல அவர்களை ஏற்றுக்கொள்கிறார்.
வாழ்வியல் சவால்கள்
கடவுளுடைய இதயத்தைத் தொடும் அளவுக்கு நம் விரல்கள் அவரை நெருங்கிச் செல்லுமாறு அனுமதிக்கிறது கடவுளின் இரக்கம். நம் ஒட்டுமொத்த நம்பிக்கைப் பயணத்தை நாம் இப்படியாக எடுத்துக்கொள்ள முடியும். கடவுளின் இதயத்தைத் தொடும் நம் விரல் அவருடைய இரக்கத்தை நமக்கும், நம் வழியாக மற்றவர்களுக்கும் வழங்குகின்றன. ‘இதைச் செய்தால் இது எனக்குக் கிடைக்கும்’ என்ற தன்னலமும், ‘இதைச் செய்தால் இது எனக்குக் கிடைக்க வேண்டும்’ என்ற தன்நீதியும் மேலோங்கி நிற்கும் காலத்தில், நம் அனைவருடைய தேவையும் இரக்கம் என்பதை நாம் உணர்வோம்.
இன்று நம் திருஅவை அமைப்புசார் நிறுவனமாக மாறிவிட்டது. தொடக்க நம்பிக்கையாளர்கள் கொண்டிருந்த குழும அனுபவம் நம்மில் குறைந்துகொண்டே வருகிறது. போதனை என்பது கோட்பாடு எனவும், அப்பம் பிட்குதல் என்பது வெறும் சடங்காகவும், கூடி வருதல் வேற்றுமையை மையப்படுத்தியதாகவும், பணி என்பது அதிகாரம் தேடுவதாகவும் மாறிவிட்டது. தொடக்க கிறிஸ்தவ அனுபவம் நோக்கி நாம் தனிப்பட்ட அளவிலும் குழுமமாகவும் மீண்டும் பயணம் செய்ய வேண்டும்.
பொன் புடமிடப்படுவதுபோல நம் வாழ்க்கை துன்பத்தால் கவலையால் புடமிடப்படுகிறது. நெருப்பின் வெப்பத்தை மட்டும் பார்க்கும் பொன் அதிலிருந்து தப்பி ஓட நினைக்கிறது. ஆனால், பார்வையைச் சற்றே அகலமாக்கி தான் அலங்கரிக்கும் அனைத்து கழுத்துகளையும் விரல்களையும் அது நினைத்தால் துன்பம் ஏற்கிறது. துன்பமே நம் வாழ்வைப் பக்குவப்படுத்துகிறது. தடைகளே நம் வாழ்க்கையின் பாதைகளாக மாறுகின்றன.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

Leave a comment