‘ஒருவர் தன் பிறப்பில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவராக இருந்தாலும், அவர் மதம் மாறியவுடன் உடனடியாகவும் முழுமையாகவும் அந்தச் சாதியத் தான்மையை இழக்கிறார்’ – மார்ச் மாதம் 24-ஆம் தேதி நம் நாட்டின் (இந்தியாவின்) உச்சநீதி மன்றம் என்று மொழிந்தது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ பாஸ்டர் சிந்ததா ஆனந்த். இவர் தாழ்த்தப்பட்ட சாதியான மதிகா குழுமத்தைச் சார்ந்தவர். கிறிஸ்தவ மத போதகராக (தனிப்பட்ட சபை ஒன்றை நடத்தியவர்) வேகமாக உயர்ந்த இவருக்கு டிசம்பர் 2020-இல் ஒருநாள் வருகிற அலைபேசி அழைப்பில் இவருடைய சாதிப் பெயரைச் சொல்லி ஒருவர் மோசமாகத் திட்டுகிறார், மிரட்டுகிறார். தொடர்ந்து, 3 ஜனவரி 2021 அன்று இவர் தன் கிராமத்தில் உள்ள ஒருவருடைய வீட்டில் செபக்கூட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது மீண்டும் வருகிற அந்த அலைபேசி நபர் இவரை வெளியே அழைத்து சாதியப் பெயரைச் சொல்லித் திட்டி அவரை அடித்திருக்கிறார். இன்னொரு முறை இதே போல இவர் ஒரு வீட்டில் செபம் முடித்துவிட்டுத் திரும்பும்போது மர்ம நபர்களால் தாக்கப்படுகிறார். இவருடன் வந்தவர்களும் காயம் அடைந்தார்கள். இவர்களுடைய கைப்பைகளும் பொருள்களும் பறிக்கப்பட்டன.
தன்னுடைய சொந்த ஊரான சாந்தோலே காவல் நிலையத்தில் தன்னைத் தாக்கிய ரெட்டி சமூகத்தைச் சார்ந்த நபர் மேல் வழக்கு பதிவு செய்கிறார் ஆனந்த். எஸ்-ஸி எஸ்-டி வகுப்பினர் மீதான வன்கொடுமை தடுப்புச்சட்டம் 1989-இன் கீழும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. ஆந்திர உயர்நீதிமன்றத்தை நாடுகிற ரெட்டி சமூகத்தைச் சார்ந்த குற்றம் சுமத்தப்பட்ட நபர், ‘வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் தன்மேல் நடவடிக்கை எடுக்குமாறு உள்ள கீழ் நீதிமன்றச் செயல்பாட்டை நிறுத்தவும். ஏனெனில், ஆனந்த் ஒரு கிறிஸ்தவர். கிறிஸ்தவராக மாறிய அவரை தாழ்த்தப்பட்டவர் என்று அடையாளப்படுத்த முடியாது!’ என்று முறையிடுகிறார்.
ஏப்ரல் 2025-இல் ஆந்திர உயர்நீதி மன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது. உடனடியாக உச்சநீதி மன்றத்தை நாடுகிறார் ஆனந்த்.
‘சாதியம் என்பது பிறப்பால் நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் தொடந்து வளரும்போது ஒரு சமூக எதார்த்தமாக அவருடன் வளர்கிறது. சமய அடையாளங்கள் சாதிய அடையாளத்தை நீக்குவதில்லை. கிறிஸ்தவத்திற்கு மதமாற்றம் அடைந்தால் சாதீயப் புண், சாதியப் பாகுபாடு, அல்லது அமைப்புசார் குறைபாடுகள் நீங்குவதில்லை. தாழ்த்தப்பட்ட நபர் சமூகத்தில் எப்போதும் தாழ்த்தப்பட்டவராகவே இருக்கிறார்’ என்று வாதிடுகிறார் ஆனந்த்.
இந்தப் பின்புலத்தில் உச்சநீதி மன்றம் மேற்காணும் தீர்ப்பை வழங்கியது: ‘ஒருவர் தன் பிறப்பில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவராக இருந்தாலும், அவர் மதம் மாறியவுடன் உடனடியாகவும் முழுமையாகவும் அந்தச் சாதியத் தான்மையை இழக்கிறார்’.
கிறிஸ்தவராக மதம் மாறிய ஒருவர் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கான உரிமைகளையும் பாதுகாப்பையும் பெற முடியாதா? – இதுதான் இந்த வழக்கின் மையமான கேள்வி.
உச்சநீதி மன்றத் தீர்ப்பின் கூறுகள்:
(அ) ஒருவர் மதமாற்றத்துக்குப் பின்னர் தாழ்த்தப்பட்ட சமூகத் தான்மையை (scheduled caste status) முழுமையாக இழக்கிறார்.
(ஆ) ‘சமயத்தை அறிக்கையிடுதல்’ (profession of religion) – மதமாற்றம் – என்பது பொதுவாக ஒரு சமய நம்பிக்கையை அறிக்கையிடுதல், அந்தச் சமயத்தின் வழிபாடுகளைப் பின்பற்றுதல். தனிமனித நம்பிக்கையாக சமயம் இருந்தால் அது மதமாற்றம் அல்ல.
(இ) கிறிஸ்தவத்தைப் பின்பற்றிக்கொண்டே தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கான நலத்திட்டங்களைப் பெற இயலாது.
(ஈ) தாழ்த்தப்பட்ட இனத்துக்கான தான்மையை ஒருவர் மீண்டும் பெற வேண்டுமெனில், அவர் தன் பிறப்புசார் சாதிய அடையாளத்துக்கான சான்றை வழங்க வேண்டும், தற்போதைய சமய அறிக்கையிடுதலை விட்டுத் தாய்மதம் (இந்துமதம்) திரும்ப வேண்டும் (reconversion), அவருடைய பிறப்புசார் சாதியக் குழுமம் அவரை ஏற்றுக்கொண்டதற்கான உறுதி வேண்டும் (assurance by the community). மேலும், தன் தாய்மதத்தின் சடங்குகளையும் மரபுகளையும் பின்பற்ற வேண்டும். தன் முந்தைய மதத்தை (கிறிஸ்தவம் அல்லது இசுலாமியத்தை) முழுமையாக விட வேண்டும்.
(உ) தாழ்த்தப்பட்ட சமூகம் (எஸ்.ஸி) என்பது சமயம் சார்ந்தது. தாழ்த்தப்பட்ட இனம் (பழங்குடியினர்) என்பது கலாச்சாரம் மற்றும் அடையாளம் சார்ந்தது. பழங்குடியினர் அடையாளம் மரபு சார்ந்ததே அன்றி, சமயம் சார்ந்தது அல்ல.
மானுடப் பகுப்பாய்வு
(அ) ஒருவர் கிறிஸ்தவராக மாறினாலும் கிறிஸ்தவத்தில் சாதியப் பாகுபாட்டுக்கு உட்படுத்தப்படுகிறார் – மறைமாவட்டம் மற்றும் பங்குகளின் குழுக்களில் பங்கேற்பு, அதிகாரங்கள் பகிர்ந்தளிப்பு, நிர்வாகம், இறந்தோர் நல்லடக்கம் என அனைத்து நிலைகளிலும் பாகுபாடுகள் உள்ளன. ஆக, சட்டத்தின் சிந்தனைக்கும் சமூக எதார்த்ததிற்கும் இடையே ஒரு பெரிய பிளவு உள்ளது.
(ஆ) இந்து சமயத்தில் உள்ள சாதியப் பாகுபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் தப்பி ஓடித் தஞ்சம் அடையும் இடமே மதமாற்றம். சமயம் என்பது தனிநபர் சுதந்திரம் என மொழிகிற சட்டம், சட்டரீதியான பாதுகாப்பைத் தர மறுப்பது ஏன்?
(இ) கிறிஸ்தவம் அல்லது இசுலாமியத்தைத் தழுவிய தாழ்த்தப்பட்டவர் பின்வருவனவற்றைப் பெற இயலாது: படிப்பில் உள்ள ஒதுக்கீடு. வேலைவாய்ப்பு மற்றும் சமூக உயர்வில் ஒதுக்கீடு. சாதீய வன்கொடுமையிலிருந்து பாதுகாப்பு.
கிறிஸ்தவத்திற்கான சவால்
தமிழகத்தின் கிறிஸ்தவர்களில் ஏறக்குறைய 74 விழுக்காட்டினர் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்.
(அ) பிறப்பால் நான் தாழ்த்தப்பட்டவராக இருந்தாலும் கிறிஸ்தவத்திற்கு நான் மதமாற்றம் அடைந்துவிட்டதால் நான் என் சாதிய அடையாளத்தை இழக்கிறேன் எனில், கிறிஸ்தவம் தன் சாதியப் பாகுபாட்டை விடுவதற்குத் தயாராக இருக்கிறதா? மறைமாவட்டம் மற்றும் பங்குகளின் குழுக்களில் பங்கேற்பு, அதிகாரங்கள் பகிர்ந்தளிப்பு, நிர்வாகம், இறந்தோர் நல்லடக்கம் என அனைத்து நிலைகளிலும் பாகுபாடுகள் அகற்றப்படுமா? இதை எனக்கு உறுதியளிப்பவர் யார்?
(ஆ) ‘இல்லை. நாங்கள் பாகுபாடு பாராட்டுவோம். உனக்கு நிர்வாகத்திலும் கல்லறையிலும் இடம் மறுப்போம்!’ என்று சாதிய வகுப்பினர் என்னிடம் சொன்னால், நான் என் பிறப்பால் பெற்ற சலுகைகளை – படிப்பில் உள்ள ஒதுக்கீடு. வேலைவாய்ப்பு மற்றும் சமூக உயர்வில் ஒதுக்கீடு. சாதீய வன்கொடுமையிலிருந்து பாதுகாப்பு – கிறிஸ்தவம் எனக்கு உறுதி செய்யுமா?
(இ) தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்கள் அனைவரும் தங்கள் (கிறிஸ்தவ) சமய அறிக்கையை விடுகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அது திருஅவைச்சட்டம் (1983 Code of Canon Law) எண் 751-ஆல் (மற்றும் 1364) கண்டிக்கப்படுகிற சமயத் துறத்தல் ஆகுமா? வெளிப்படையாக நான் கிறிஸ்துவை அறிக்கையிடுவதற்குப் பதிலாக நான் இந்துவாக ஒரு கிறிஸ்த-பக்தாவாக அல்லது கார்ல் ரானர் குறிப்பிடும் ‘அனானிமஸ் கிறிஸ்தவராக’ நான் இருந்துவிடுகிறேன் என வைத்துக்கொள்வோம். எனக்கு மோட்சம் கிடைக்குமா? கிறிஸ்வதனாக சமய அறிக்கை செய்து என் இவ்வுலக வாய்ப்புகளை மறுப்பதா? அல்லது கிறிஸ்தவத்தைத் துறந்து மறுவுலக வாய்ப்புகளை மறுப்பதா? கிறிஸ்தவம் என்பது நம்பிக்கையில் இருக்கிறதா அல்லது திருஅவை, மறைமாவட்டம், பங்கு, அன்பியம் என்னும் அமைப்பில் இருக்கிறதா?
இந்திய மற்றும் தமிழக ஆயர் பேரவையும் அதன் அமைப்புகளும் அமர்ந்து சட்டம்சார்ந்த முயற்சிகளைச் செய்தல் நலம்!
கிறிஸ்தவத்தில் சாதியம் களைவோம்!
கிறிஸ்தவம் என்னும் சிலுவையில் சாதியம் என்னும் ஆணிகளால் நம் இயேசுக்களை அறைந்தது போதும்!
சாதியற்ற கிறிஸ்தவத்தில்தான் கிறிஸ்து உயிர்க்கிறார்!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
உரையாடல் தொடர்பாளர் – பாப்பிறை இறையியல் கழகம்
மேலும் கலந்துரையாட, தொடர்ந்து போராட அழையுங்கள்: +91 948 948 21 21 (WhatsApp only)
Courtesy: theleaflet.in, scoobserver.in, vijethaiasacademy.in & conversation with Fr. Augustin Antony Raj.

Leave a comment