இன்றைய இறைமொழி. திங்கள், 23 மார்ச் ’26. இயேசுவின் உருவகங்கள்

இன்றைய இறைமொழி
திங்கள், 23 மார்ச் ’26
தவக்காலம் ஐந்தாம் வாரம் – திங்கள்
தானி (இ) 2:1-9, 15-17, 19-30, 33-62. யோவா 8:1-11

இயேசுவின் உருவகங்கள்

ஆண்டவருடைய திருப்பாடுகளின் வாரத்திற்குள் நுழையத் தயாராக இருக்கிறோம். இன்றைய இறைவார்த்தை வழிபாட்டில் நாம் காணும் இரண்டு கதைமாந்தர்கள் இயேசுவுடைய கையறுநிலையின் உருவகங்களாக நம் முன் நிற்கிறார்கள்.

இன்றைய முதல் வாசகம் தானியேல் நூலின் இணைப்பு பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. கிரேக்க மொழியில் மட்டுமே உள்ள இந்த இணைப்பு பகுதியில் மூன்று கதையாடல்கள் உள்ளன: (அ) சூசன்னா காப்பாற்றப்படுதல். (ஆ) இளைஞர் மூவரின் பாடல். (இ) பேல் (பாகால்) தெய்வம்.

சூசன்னா காப்பாற்றப்படுதல் நிகழ்வே இன்றைய நாளின் முதல் வாசகமாக உள்ளது. திருமணமான இவர்மேல் விருப்பம் கொள்கிற இரு முதியவர்கள் அவர்மேல் விபச்சாரம் என்னும் பொய்க்குற்றம் சுமத்துகிறார்கள். குற்றம் சுமத்தியவர்கள் நீதி வழங்கக்கூடிய பெரியவர்கள் என்பதாலும், விபச்சாரம் என்னும் சட்டத்தின்படி அவர் கொல்லப்பட வேண்டியவர் என்பதாலும், சுற்றியிருக்கிற மக்கள் கூட்டமும் முதியவர்கள் பக்கம் நிற்பதாலும் கதையின் முடிச்சு இறுகுகிறது. ஆண்டவரின் ஆவியால் குறுக்கிடுகிற தானியேல் ஞானத்தோடு நீதி வழங்கி சூசன்னாவைக் காப்பாற்றுகிறார். நிகழ்வின் இறுதியில் குற்றம் சுமத்திய பெரியவர்கள் கொல்லப்படுகிறார்கள். எளிய சூசன்னா காப்பாற்றப்படுகிறார்.

வாழ்வின் கையறுநிலையில் நாம் நிற்கிறோம். அந்நேரத்தில், அதாவது வலுவற்றவராக நாம் நிற்கும்போது கடவுள் நமக்குத் துணை வருகிறார் என்னும் கருத்துருவே வாசகர் கற்கிற பாடமாக இருக்கிறது. மேலும், தகுந்த நேரத்தில் ஒருவர் ஞானத்தோடு செயல்படும்போது நீதிமான் காப்பாற்றப்படுகிறார் என்ற கருத்துருவும் காணக் கிடக்கிறது.

நற்செய்தி வாசகத்தில், ‘விபசாரத்தில் பிடிபட்ட பெண்’ நிகழ்வை வாசிக்கிறோம். ‘விபசாரத்தில் பிடிபட்ட பெண்’ இயேசுவின் முன் நிறுத்தப்படுகிறார். அதே நிகழ்வில் பங்கேற்ற ஆண் பிடிபடவில்லை. அல்லது கொண்டுவரப்படவில்லை. தனிப்பட்ட பாவச் செயலை முன்நிறுத்தி மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவிடம் வாதாடியபோது அனைவருடைய ஒட்டுமொத்த பாவ இயல்பை முன்நிறுத்தி அவர்கள் அனைவரும் தீர்ப்பிடப்பட வேண்டியவர்கள் என்று கற்பிக்கிறார்.

‘இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்’ என்று எழுதுகிறார் யோவான். இதற்கு விளக்கம் தருகிற புனித அகுஸ்தினார், ‘இறுதியில் கருணையும் காயமும் நின்றது. காயத்தை கருணை வென்றது’ என்கிறார்.

குற்றமற்ற சூசன்னா குற்றவாளி எனத் தீர்ப்பிடப்படுகிறார். இயேசுவும் குற்றமற்ற நிலையில் தீர்ப்பிடப்படுகிறார்.

தனித்துவிடப்பட்ட பெண் போல இயேசுவும் நிற்கிறார்.

நீதிமானாகிய இயேசுவை தந்தையாகிய கடவுள் மூன்றாம் நாளில் உயிர்த்தெழச் செய்கிறார்.

இன்றைய வாசகங்கள் நமக்குத் தரும் பாடங்கள் எவை?

(அ) வலுவற்றவர்களின் துன்பத்தில், நீதிமான்களின் துன்பத்தில் ஆண்டவராகிய கடவுள் அவர்களோடு துணை நிற்கிறார். இது நமக்கு உத்திரவாதம் அல்ல. மாறாக, நாம் கொண்டிருக்கிற எதிர்நோக்கு. ஏனெனில், இன்றும் பல நேரங்களில் வலுவற்றவர்களுக்கு நீதியும் இரக்கமும் மறுக்கப்படுகிறது.

(ஆ) தானியேலும் இயேசுவும் தங்களுக்கு அருளப்பட்ட ஞானத்தின் அடிப்படையில் செயலாற்றுகிறார்கள். சரியான நேரத்தில் சரியான விதத்தில் செயல்படுவதற்கு ஞானம் துணை செய்கிறது.

(இ) மற்றவர்களால் நிராகரிக்கப்படும் தனித்துவிடப்படும் தீர்ப்பிடப்படும் நேரங்களில் நாமும் இயேசுவின் உருவகங்களாகத் திகழ்கிறோம்.

Photo courtesy: from Crossroads Initiative

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

Leave a comment