இன்றைய இறைமொழி. புதன், 18 பிப்ரவரி ’26. இதுவே தகுந்த காலம்

இன்றைய இறைமொழி
புதன், 18 பிப்ரவரி ’26
திருநீற்றுப் புதன்
யோவே 2:12-18. திபா 51. 2 கொரி 5:20-6:2. மத் 6:1-6, 16-18

இதுவே தகுந்த காலம்

திருநீறு அல்லது சாம்பல் அணிந்து இன்று நாம் தவக்காலத்திற்குள் நுழைகின்றோம். நாம் அணிகிற திருநீறு வாழ்வின் மறுபக்கத்தை நமக்குக் காட்டுகிறது. ‘ஓசன்னா!’ பாடி நாம் பவனியாக ஏந்த வந்த பசுமையான ஓலைகள் காய்ந்து தீயிடப்பட்டு சாம்பலாக மாறி நிற்கிறது. அனைவரின் பார்வையில் பட்டு பாராட்டப்பட்ட பசுமை மண்ணோடு மண்ணாகக் கலந்து மறைந்து போகிறது. வாழ்வின் இரண்டு பக்கங்களுமே ஏற்புடையவை.

முதல் பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு எப்போது கடந்து செல்வது?

‘இதுவே தகுந்த காலம். இன்றே மீட்பு நாள்’ என்று நமக்கு பதில் தருகிறது இன்றைய இரண்டாம் வாசகம்.

(1) தவக்காலம் என்றால் என்ன?

(அ) தவக்காலம் என்பது ஒரு நேரம் அல்லது காலம். இது வெறும் நாள்காட்டி நேரமாக – அதாவது, 18 பிப்ரவரி தொடங்கி 5 ஏப்ரல் 2026 அன்று நிறைவுக்கு வருகின்ற நேரமாக – நின்றுவிடக் கூடாது. மாறாக, நம் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தக் கூடிய காலமாக இது இருந்தால் நலம்.

(ஆ) தவக்காலம் என்பது தயாரிப்புக் காலம். கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவைப் பொருளுள்ள விதத்தில் கொண்டாடுவதற்கான தயாரிப்புக் காலமாக இது இருக்கிறது.

(இ) வாழ்வின் மறுபக்கத்தைக் கொண்டாடும் காலம். நிறைய உணவு உண்ணுதலை விடுத்து பசித்திருத்தல், சேர்த்து வைத்தலை விடுத்து பகிர்ந்து கொடுத்தல், கடவுளிடமிருந்து தள்ளி வந்ததை விடுத்து அவரிடம் திரும்பிச் செல்தல் என வாழ்வின் மறுபக்கத்தை அறியவும் கொண்டாடவும் நம்மை அழைக்கிறது இக்காலம்.

(2) தவக்காலத்திற்கான வாழ்வியல் நிலை

(அ) கடவுளிடம் திரும்பி வருதல். ஏனெனில், கடவுள் நம்மிடம் திரும்பி வருகின்றார். இன்றைய முதல் வாசகத்தில் (காண். யோவே 2:12-18), ‘உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்’ என்று மக்களை அழைக்கின்றார். ஆடைகளைக் கிழித்துக் கொண்டு அழுவதை நிறுத்தி விட்டு இதயத்தைக் கிழித்துக் கொள்ளுமாறு அழைக்கின்றார்.

(ஆ) நோன்பு மற்றும் ஒறுத்தல் வழியாக நம் வாழ்வை ஒழுங்கு செய்வது. நோன்பு என்பது பசியை வலிந்து ஏற்கும் நிலை. ஒறுத்தல் என்பது இன்பத்தை விரும்பி விடும் நிலை. இப்படி ஏற்பதன் வழியாக நம் மானுட நிலையின் நொறுங்குநிலையை, உறுதியற்ற நிலையை அனுபவிக்கின்றோம்.

(இ) மற்றவர்களை நோக்கிச் செல்தல். பிறரன்புச் செயல்கள் வழியாக தேவையில் இருப்பவர்களை நாடிச் செல்லத் தவக்காலம் நம்மை அழைக்கிறது. இரக்கம் என்பது மற்றவர்களின் இருத்தலை உணர்ந்து நாம் அளிக்கும் பதிலிறுப்பு.

(3) திருநீற்றுப் புதன் முன்மொழியும் சவால்கள்

(அ) இந்நாளைப் பற்றிக்கொள்வோம். ‘இதுவே தகுந்த காலம். இதுவே மீட்பின் நேரம்’ என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் சொல்லக் கேட்கின்றோம். ‘நாளை’ என்பது இல்லை. இன்றே, இப்போதே நம்மை மாற்றும்போதுதான் வாழ்க்கை மாறுகிறது.

(ஆ) வெளிப்புற அடையாளங்களை விடுத்து, நம் உள்ளறைக்குச் செல்தல். இன்று நாம் எப்போதும் வெளியே சுற்றிக்கொண்டிருக்கின்றோம். நம்மைப் பற்றிய அந்தரங்களை சமூக வலைத்தளங்களில் அலசிப் பார்க்கின்றோம். எல்லாம் எல்லாருக்கும் தெரிய வேண்டும் என நினைக்கின்றோம். ஆனால், வாழ்வின் முதன்மையானவை அனைத்தும் நம் உள்ளறையில் உள்ளன. கதவுகளை அடைத்து உள்ளறைக்குச் செல்வது அவசியம்.

(இ) கடின இதயம் விடுத்தல். ‘உங்கள் இதயங்களைக் கடினப்படுத்திக்கொள்ள வேண்டாம். அவரது குரலுக்குச் செவிகொடுங்கள்’ என்கிறது நற்செய்திக்கு முன் வசனம். கடினப்படும் உள்ளம் மாற்றத்திற்குத் தயாராவதில்லை. உறைந்த உள்ளம் உயிரற்றதாகி விடுகின்றது. நம் உறைநிலையை விடுப்போம்.

(4) திருத்தந்தையின் தவக்காலச் செய்தி

‘செவிமடுத்தலும் நோன்பு இருத்தலும் – தவக்காலம் மனமாற்றத்தின் காலம்’ என்னும் தலைப்பில் இந்த ஆண்டுக்கான தவக்காலச் செய்தியை வழங்கியுள்ளார் திருத்தந்தை லியோ. ‘கடவுளின் மறைபொருளை அல்லது கடவுள் என்னும் மறைபொருளை மீண்டும் ஒருமுறை நம் வாழ்வின் மையமாக மாற்றுதலே’ தவக்காலத்தின் நோக்கம் என்று வரையறுக்கிறார் திருத்தந்தை.

(அ) செவிமடுத்தல் – இறைவனுக்கு, நம் உடன் வாழ்வோருக்கு, நம் குரலுக்கு!

ஆண்டவராகிய கடவுள் மக்களின் குரலைக் கேட்டு (விப 3) அவர்களை நோக்கித் திரும்புகிறார். நாம் கடவுளின் சொற்களைக் கேட்டு அவரை நோக்கித் திரும்ப வேண்டும். நம் நடுவே வாழும் வறியோரின் குரலைக் கேட்டு நாம் பதிலிறுப்பு செய்ய வேண்டும். நமக்குள்ளேயே கடவுள் பேசுகிற குரலை தேர்ந்து தெளிய வேண்டும்.

(ஆ) நோன்பு இருத்தல் – துன்பம் ஏற்றல் இன்பம் அகற்றுதல், பசிக்கு உட்படுத்துதல், போதும் என்னும் மனப்பான்மை பெறுதல்.

நோன்பு இருத்தல் நாம் பெருமை கொள்வதற்காக அல்ல, மாறாக, நம்மில் நம்பிக்கையையும் தாழ்ச்சியையும் தூண்டி எழுப்புவதற்காக. அகுஸ்தினார் கூறுவதுபோல, கடவுளை நோக்கியும் எல்லாவிதமான நன்மைத்தனத்தை நோக்கியும் நம் வாழ்க்கையை நெறிப்படுத்த நோன்பு உதவி செய்கிறது. நோன்பிருத்தலோடு இணைந்து மற்ற தன்மறுப்பு செயல்களிலும் நாம் ஈடுபட வேண்டும். மற்றவர்களைக் காயப்படுத்தும் சொற்களைப் பேசுவதை நிறுத்துவதே புதிய வகை நோன்பு. கடினமான சொற்கள், தீர்ப்பிடக்கூடிய மொழி, புறங்கூறுதல், இழித்துரைத்தல் ஆகியவற்றிலிருந்து நாம் விலகியிருக்க வேண்டும். கனிவையும் மதிப்பையும் வழங்குகிற சொற்களை நம் குடும்பங்களிலும், நண்பர்களிடமும், சமூக ஊடகங்களிலும், அரசியல் விவாதங்களிலும் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். நம் சொற்கள் எதிர்நோக்கையும் அமைதியையும் வழங்க வேண்டும்.

(இ) இணைந்து பயணித்தல் – குடும்பம், பங்கு மற்றும் திருஅவையின் குழுமப் பயணம்.

தன்நிறைவு மற்றும் தற்சார்பு விடுத்தல். நுகர்வு குறைத்தல். குழும வழிபாடுகளில் பங்கேற்றல்.

(5) புதிய தவக்காலம்

வழக்கமாக தவக்காலத்தில் பாவம், சாபம், சோகம் என்னும் மூன்றை மட்டுமே நம் கண்முன் நிறுத்துவோம். கிறிஸ்து நம் பாவத்தை வெற்றி கொண்டு, தொடக்கநிலை சாபத்தை அகற்றி, நமக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வந்துவிட்டார்.

உயிர்ப்புப் பெருவிழாவின் மகிழ்ச்சி எப்போதும் நம் உள்ளங்களில் நிறைந்திருக்கட்டும்.

தவக்காலத்தில் நாம் பயணம் செய்வோம். கடவுளை நோக்கி – இறைவேண்டலில். மற்றவர்களை நோக்கி – பிறரன்புச் செயல்களில், நம்மை நோக்கி – நோன்பில்.

ஆற்றங்கரை ஒன்றின் கரையில் நின்றுகொண்டிருந்த இளைஞன் ஆற்றின் மறுகரையில் நின்ற பெரியவரைப் பார்த்து, ‘ஆற்றின் அக்கரைக்கு எப்படி வருவது?’ என்று கேட்கிறார். உடனே அந்தப் பெரியவர், ‘நீ நிற்பதே அக்கரை தானே!’ என்கிறார்.

இக்கரையிலிருந்து அக்கரைக்குக் கிறிஸ்து கடந்து சென்றது பாடுகள் வழியாக! சிலுவை என்னும் மறைபொருளை இக்கரையில் பற்றிக்கொள்பவர்களுக்கு உயிர்ப்பின் அக்கரை கடந்து செல்வது எளிது!

இத்தவக்காலம் அருளின் காலமாக நமக்கு அமைவதாக!

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

Leave a comment