இன்றைய இறைமொழி. ஞாயிறு, 15 பிப்ரவரி ’26. மேன்மையைத் தெரிந்துகொள்தல்

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 15 பிப்ரவரி ’26
பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு
சீஞா 15:15-20. திபா 119. 1 கொரி 2:6-10. மத் 5:17-37

மேன்மையைத் தெரிந்துகொள்தல்

இன்றைய சிந்தனைக்கான முதல் சூழல் ‘விதிக் கோட்பாடு’ (ஆங்கிலத்தில், டிடர்மினிஸம் அல்லது ஃபேடலிஸம்). எல்லாமே ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. தனிமனித விருப்புரிமை என்று எதுவுமே இல்லை. சமூகவியலாளர்கள் கூறுவதுபோல நம் தெரிவுகள் அனைத்தும் நம் சமூகச் சூழலால் வரையறுக்கப்படுகின்றன. உளவியலைப் பொருத்தவரை நம் கடந்தகால வாழ்வியல் பதிவுகள் நம் நிகழ்கால முடிவுகளை உந்தித் தள்ளுகின்றன. உயிரியல் புரிதலின்படி நம் ஜீன்கள் நம் தெரிவுகளை நெறிப்படுத்துகின்றன.

இரண்டாவது சூழல் ‘தெரிவு செய்தல்’ அல்லது ‘முடிவெடுத்தல்.’ இன்று நாம் பல நேரங்களில் துன்புறக் காரணம் ‘ஓவர்சாய்ஸ்.’ நம் முன் நிறைய தெரிவுகள் இருக்கின்றன. ஒரு சூப்பர் மார்க்கெட் போய் ஒரு கூல் டிரிங்க் வாங்க வேண்டுமென்றால் நூறு வகையான பானங்கள் இருக்கின்றன. பள்ளி, கல்லூரி, துறை, பணி என்று நாளுக்கு நாள் தெரிவுகள் கூடிக்கொண்டே போவதால் தேர்ந்துகொள்வது நமக்குக் கடினமாக இருக்கிறது.
நம் வாழ்வில் நாம் மேற்கொள்ளும் தெரிவுகளுக்கு நாமே பொறுப்பு எனவும், நம்முடைய விருப்புரிமையால் நாம் மேன்மையானதைத் தேர்ந்துகொள்ள முடியும் எனவும் நமக்குச் சொல்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு. சீடத்துவம் என்பது மேன்மையானதைத் தெரிந்துகொள்தலில் அடங்கியுள்ளது.

இன்றைய முதல் வாசகம் சீராக்கின் ஞானநூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இணைத்திருமுறை நூல்களில் ஒன்றான இந்த நூல் கிரேக்கத்தில் எழுதப்பட்டது. நாம் இதை ஞானநூல்களில் ஒன்றாகக் கருதுகிறோம். ஆண்டவராகிய கடவுள் மனிதருக்கு கொடுத்திருக்கிற மாபெரும் கொடை விருப்புரிமை என மொழிகிற ஆசிரியர், ‘உனக்கு முன் நீரையும் நெருப்பையும் அவர் வைத்துள்ளார் … வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும் நம்முன் உள்ளன’ என்கிறார். ஆக, நாம் பெற்றிருக்கிற விருப்புரிமை தெரிவுகளுக்கான பொறுப்புணர்வையும் நமக்குத் தருகிறது. இதையொட்டிய வசனத்தை நாம் இணைச்சட்டம் 30-இலிலும் வாசிக்கிறோம்: ‘வாழ்வு, நன்மை, தீமை, சாவு, ஆசி, சாபம்’. நன்மையும் தீமையும் நாம் செய்யுமாறு கடவுள் நம்மை கட்டாயப்படுத்துவதில்லை. நம் தெரிவுகளுக்கேற்ற வாழ்க்கையை நாம் பெறுகிறோம்.

இன்றைய பதிலுரைப்பாடல் திபா 119-இலிருந்து எடுக்கப்பட்டள்ளது. 22 சரணங்களைக் கொண்டு அகர வரிசையில் அமைந்துள்ள இத்திருப்பாடல் ஆண்டவருடைய திருச்சட்டத்தின் மேன்மையை எடுத்துரைக்கிறது. ‘உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும்’ என்று இறைவேண்டல் செய்கிறார் ஆசிரியர். நம் மனக் கண்களைத் திறந்தே நாம் தெரிவுகளை மேற்கொள்கிறோம்.

நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் மலைப்பொழிவு தொடர்கிறது. ‘பேறுபெற்ற நிலைகள்’ வழியாக சீடத்துவத்தின் அடையாளம், ‘உப்பு-ஒளி-மலைமேல் நகரம்’ என்னும் உருவகங்கள் வழியாக சீடத்துவத்தின் பணியை வரையறுத்த இயேசு, சீடத்துவத்தின் அடிப்படையான மதிப்பீடு ‘நீதி’ என்று இன்றைய நாளில் நமக்கு மொழிகிறார்.

மூன்று முதன்மையான சொல்லாடல்களை நாம் புரிந்துகொள்வோம்: ‘நிறைவேற்றதல்,’ ‘சிறந்த நெறியைக் கொண்டிருத்தல்,’ ‘விண்ணரசுக்குள் நுழைதல்.’

இயேசுவின் சமகாலத்து மக்களுக்கு அவர் சட்டத்தைப் பின்பற்றுகிறாரா அல்லது மீறுகிறாரா என்ற குழப்பம் இருந்தது. பின்பற்றுதல், மீறுதல் என்னும் இரண்டு செயல்களைத் தாண்டி ‘நிறைவேற்றுதல்’ என்னும் புதிய சொல்லை அறிமுகம் செய்கிறார் இயேசு. எடுத்துக்காட்டாக, நாம் வாகனம் ஓட்டிச் செல்லும்போது சாலையில் சிகப்பு விளக்கு எரியும்போது வாகனத்தை நிறுத்துகிறோம். அங்கே சட்ட ஒழுங்கை நாம் பின்பற்றுகிறோம். வாகனத்தை நிறுத்தாமல் சென்றால் சட்டத்தை மீறுகிறோம். நிறைவேற்றுதல் என்றால் என்ன? பச்சை விளக்கு எரியும்போது நாம் வாகனத்தை நகர்த்துகிறோம். நமக்கு முன்பாக ஒரு குழந்தையோ வயதானவரோ சாலையைக் கடக்கிறார். நாம் உடனடியாக வாகனத்தை நிறுத்துகிறோம். வாகனத்தை நகர்த்துவதற்கு சட்டம் நம்மை அனுமதித்தாலும், நீதியின்படி நடக்கிறோம். ஏனெனில், சட்டத்தின் ஆன்மா உயிரைக் காப்பதே!

‘மறைநூல் அறிஞர், பரிசேயர்களின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்க வேண்டும்’ என்று தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார் இயேசு. பரிசேயர்களின் நெறி சட்டம் சார்ந்ததாக இருந்தது. சீடர்களின் நெறி நீதி சார்ந்ததாக இருக்க வேண்டும்.

மேலும், ‘விண்ணரசுக்குள் நுழைவதற்கான’ அழைப்பை இயேசு சீடர்களுக்கு வழங்குகிறார். இவ்வுலகையும் தாண்டிய ஓர் உலகத்தை தங்கள் வாழ்வின் இலக்காக அவர்கள் கொள்ள அறிவுறுத்துகிறார்.

தம் சமகாலத்து மக்கள் பயன்பாட்டில் இருந்த மூன்று சட்டங்களையும் நியமங்களையும் எடுக்கிற இயேசு அவற்றை நீட்சி செய்து, அவற்றின் உள்ளார்ந்த பொருளை நமக்கு விளக்குகிறார். ‘கொலை செய்தல்,’ ‘விபசாரம் செய்தல், ‘ஆணையிடுதல்’ ஆகியவற்றை சட்டம் தடுக்கிறது. ஆனால், மேற்காணும் செயல்களுக்கு ஊற்றாக இருக்கிற ‘வன்மம், பாலுணர்வு, பொய்யுரை எண்ணம்’ ஆகியவற்றை நாம் தடுக்க வேண்டும் என்பது இயேசுவின் பாடம்.

நோயின் அறிகுறிகள் அல்ல, மாறாக, அதன் வேர் அகற்றப்பட வேண்டும் என்பது இயேசுவின் போதனை. உறவில் நாம் நீதி பேணும்போது – கோபம் விடுத்து சமரசம் செய்துகொள்ளும்போது, மன்னிக்கும்போது, அன்பில் நாம் நீதி பேணும்போது – மற்றவரை வெறும் காமப் பொருளாகப் பார்ப்பதை விடுத்து அன்பு பாராட்டும்போது, உண்மை என்னும் நீதி பேணும்போது – குறைவான சொற்களைப் பேசும்போது, சொற்களில் உண்மை கடைப்பிடிக்கும்போது நாம் திருச்சட்டத்தை நிறைவேற்றுகிறோம். சட்டத்தின் எழுத்துகளிலிருந்து ஆன்மாவுக்குக் கடந்து செல்கிறோம். ‘தூய்மை’ என்னும் சொல்லைக் கொண்டும் இதை நாம் புரிந்துகொள்ளலாம்: உணர்வில் தூய்மை, உடலில் தூய்மை, உரைத்தலில் தூய்மை.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், கடவுளின் ஞானத்தையும் மனித ஞானத்தையும் வேறுபடுத்திக் காட்டுகிறார் பவுல். மனித ஞானம் சட்டம் சார்ந்தது. கடவுளின் ஞானம் நீதி சார்ந்தது.

நீதியுடன் கூடிய வாழ்வே மேன்மையான வாழ்வு. இந்த வாழ்வை நாம் மேன்மையானதாக ஒவ்வொரு நாளும் தெரிந்துகொள்ள வேண்டும். நம் வாழ்வுக்கான பொறுப்பு நம்மிடம் உள்ளது.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

Leave a comment