இன்றைய இறைமொழி
புதன், 11 பிப்ரவரி ’26
பொதுக்காலம் ஐந்தாம் வாரம், புதன்
புனித லூர்தன்னை, விருப்ப நினைவு
நோயுற்றோர்க்கான உலக நாள்
1 அர 10:1-10. மாற் 7:14-23
(வாசகங்கள் நாளுக்கு உரியவை)
தூய்மையின் திசை
பாத்திரங்கள் தூய்மையாக்குதல் பற்றித் தொடங்கிய விவாதம் இன்றைய நற்செய்தி வாசகத்தில் தொடர்கிறது. தூய்மையின் திசையை வரையறுக்கிறார் இயேசு. வெளியேயிருந்து உள்ளே வருபவை அல்ல, மாறாக, உள்ளேயிருந்து வெளியே செல்பவையே ஒருவரைத் தூய்மையாகவோ, தீட்டாகவோ மாற்றுகின்றன என்று சொல்லி தூய்மையின் திசையை வரையறுப்பதோடு உள்ளார்ந்த தூய்மைக்கும், நமக்கு உள்ளிருந்து வெளிவருபவை பற்றிய அக்கறைக்கும் நம்மை அழைக்கிறார்.
பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் பாத்திரங்களையும் கைகளையும் காய்கறிகளையும் கழுவுவது வெளிப்புறத்திலிருந்து உள்ளே செல்லும் தீட்டைக் கட்டுப்படுத்துவதற்காகவே. இவர்கள் இதைப் பற்றி அக்கறையாக இருந்துவிட்டு மனதிற்குள்ளேயே அழுக்குகளை – ஒப்பீடு, பொறாமை, கோபம், வன்மம், பேராசை போன்றவற்றை – வைத்திருந்தார்கள். அவற்றைப் பற்றி அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதுவே அவர்களுடைய வெளிவேடம்.
ஆக, தூய்மை-தீட்டு பற்றிய தவறான கண்ணோட்டம், வெளிவேடம் ஆகியவை பரிசேயர்களின் பிரச்சினைகளாக இருந்தன.
இவற்றுக்கு மாறான ஒரு போதனையை இயேசு முன்மொழிகிறார்.
தூய்மை-தீட்டு என்பது அகம் சார்ந்தது என்று புரட்சி செய்கிற இயேசு, மனிதர்களுக்குள்ளே இருக்கிற அழுக்குகளை – பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு – அகற்றுவதற்கு அழைக்கிறார்.
மேலும், இந்த அழுக்குகளை அகற்றித் தூய்மையாக இருப்பவர், வெளிப்புறத்திலும் தூய்மையாக இருக்கிறார் என்பது இயேசுவின் போதனை.
இன்றைய முதல் வாசகத்தில் சேபா நாட்டு அரசி சாலமோனின் ஞானத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைச் சந்திக்க வருகிறார். இந்த நிகழ்வை மேற்கோள் காட்டுகிற இயேசு தம்மை சாலமோனிலும் மேலானவர் என முன்மொழிகிறார். ஞானமுள்ள செயல்பாடு மற்றவர்களை நம்மை நோக்கி ஈர்க்கிறது.
இன்று நம் வணக்கத்துக்குரிய அன்னை கன்னி மரியாவை ‘லூர்து நகர் அன்னை‘ எனக் கொண்டாடி மகிழ்கிறோம். லூர்து நகரில் மசபியல் குகையில் பெர்னதெத் என்னும் இளவலுக்கு 1858-இல் காட்சி தந்த அன்னை கன்னி மரியா, ‘நாமே அமல உற்பவம்’ என்று தன்னை அறிவிக்கிறார்.
இந்த நாளை நோயுற்றோர்க்கான உலக நாள் எனக் கொண்டாடி மகிழ்கிறோம். ‘உன் உடலில் ஒரு வலி வரட்டும். இந்த உலகத்தில் வேறு எந்தக் கவலையும் உனக்குப் பெரிதாகத் தெரியாது’ என்பார்கள். நோய் நமக்கு மூன்று நிலைகளில் துன்பம் தருகிறது. நோயினால் உடலில் வலி உண்டாகிறது. நோய்வாய்ப்படும்போது தனிமை வருகிறது. ஏனெனில், நாம் மட்டும் கஷ்டப்படுவதுபோல, மற்ற அனைவரும் நன்றாக இருப்பதுபோல உணர்கிறோம். நலம் பெறுவோமா மாட்டோமா என்ற கவலையும் உடன் பிறக்கிறது. நாம் மற்றவர்களுடைய இரக்கத்தை நாட வேண்டிய கட்டாயத்திற்கு நம்மைத் தள்ளுகிறது.
நோயுற்றோர்க்குத் தேவை அவர்கள் குணமாகிவிடுவார்கள் என்னும் எதிர்நோக்கு, நாம் அவர்கள் அருகில் இருக்கிற உடனிருப்பு, மற்றும் அவர்கள் நலம் பெறுவதற்கான உதவி.
இந்த ஆண்டு (34-ஆவது) திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் கொடுத்துள்ள தலைப்பு: ‘சமாரியன் காட்டிய பரிவு: மற்றவரின் வலியைத் தாங்குவதன் வழியாக அன்பு செய்தல்.’ தன் செய்தியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ‘அனைவரும் உடன்பிறந்தோர்’ (ஃப்ரதெல்லி தூத்தி), மற்றும் தன்னுடைய திருத்தூது ஊக்கவுரை ‘நான் உன்மேல் அன்புகூர்ந்தேன்’ (திலெக்ஷி தெ) என்னும் இரண்டு ஆவணங்களின் பின்புலத்தில் வரைகிறார்.
நல்ல சமாரியன் எடுத்துக்காட்டை (லூக் 10:25-37) மையமாக வைத்துச் சுழல்கிற செய்தியில் மூன்று அழைப்புகளை விடுக்கிறார் திருத்தந்தை: (அ) மற்றவர்களைச் சந்திப்பது ஒரு கொடை. அந்த உடனிருப்பு நமக்கு மகிழ்ச்சி தருகிறது. தேவையில் இருப்பவருக்கு நாம் அயலாராக மாற வேண்டும். (ஆ) நோயுற்றோர்க்கு அக்கறை என்பது பொதுவான பணி. இந்தப் பணியை நாம் குடும்ப உறுப்பினர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வத் தொண்டர்கள் ஆகியோரோடு இணைந்து செய்கிறோம். (இ) இறையன்பினால் தூண்டப்பட்ட நாம் நம்மையும் பிறரையும் அன்பு செய்ய வேண்டும்.
அன்னை கன்னி மரியாவை நோக்கிய பின்வரும் இறைவேண்டலோடு தன் செய்தியை நிறைவு செய்கிறார் திருத்தந்தை: இனிமையான அன்னையே, என்னைவிட்டு அகன்றுவிடாதேயும்! உம் கண்களை என்னிடமிருந்து திருப்பிக்கொள்ளாதேயும்! என்னோடு ஒவ்வொரு பொழுதும் உடனிரும்! என்னைத் தனியே விட்டுவிடாதேயும். உண்மையான தாயாக என்னைப் பாதுகாக்கும் நீர் தந்தை, மகன், தூய ஆவியாரிடமிருந்து எனக்கு ஆசிர் பெற்றுத் தாரும்!
நோயுற்ற நம் சகோதர சகோதரிகளுக்காக இறைவேண்டல் செய்கிற இந்நாளில், நம் உடனிருப்பை அவர்களுக்குக் காட்டுவோம். நோயிலிருந்து நம்மையே தற்காத்துக்கொள்ள முயற்சிகள் எடுப்போம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

Leave a comment