இன்றைய இறைமொழி
செவ்வாய், 10 பிப்ரவரி ’26
பொதுக்காலம் ஐந்தாம் வாரம், செவ்வாய்
1 அர 8:22-23, 27-30. மாற் 7:1-13
கடவுளின் கண்கள் கொண்டு
இயேசுவுக்கும் பரிசேயர்-மறைநூல் அறிஞர்களுக்கும் இடையே ஏற்கெனவே ‘ஓய்வுநாள் மீறல்’ தொடர்பான உரசல்கள் இருந்ததை நாம் கடந்த வாரங்களில் கண்டோம். தூய்மைச் சடங்கை மையப்படுத்தி மற்றோர் உரசல் எழுவதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் காண்கிறோம்.
இயேசுவுடைய சீடர்கள் கழுவாத கைகளால் உண்பதை பரிசேயரும் மறைநூல் அறிஞர்களும் காண்கிறார்கள். இது பற்றிய குற்றச்சாட்டு எழுந்தபோது, நேரடியாக அவர்களுடைய குற்றச்சாட்டுக்குப் பதில் தராமல், தூய்மைக்கான புதிய விளக்கத்தைத் தருகிறார் இயேசு.
பரிசேயர்களைப் பொருத்தவரையில் தூய்மை என்பது (அ) மூதாதையரின் சடங்குகளைப் பின்பற்றுவது, (ஆ) வெளிப்புறம் சார்ந்தது, (இ) சடங்கு போலத் தொடர்ந்து செய்ய வேண்டியது.
ஆனால் இயேசுவைப் பொருத்தவரையில், தூய்மை என்பது (அ) கடவுளின் கட்டளைகளைப் பின்பற்றுவது, (ஆ) அகம் சார்ந்தது, (இ) சடங்குகளைத் தாண்டிச் செல்வது.
பரிசேயர்களின் தூய்மை-தீட்டு கோட்பாடு ஒரு பக்கம் ஆன்மிக அளவில் இருந்தாலும், பெரும்பாலும் சமூகத் தீட்டுக்கு இது வழி அமைப்பதாக இருந்தது. சமூகவியல் அடிப்படையில் பார்க்கும்போது பாகுபடுத்துதலில் ‘தூய்மை-தீட்டு வேறுபாடு’ முக்கியப் பங்காற்றுகிறது. நம்மைச் சார்ந்தவர்கள் தூய்மையானவர்கள் என்றும், நம்மைச் சாராதவர்கள் தீட்டானவர்கள் என்று கருதும் போக்கும் நம் நடுவே இருக்கிறது.
இன்றைய முதல் வாசகத்தில் சாலமோன் அரசரின் நேர்ந்தளிப்பு செபத்தைக் கேட்கிறோம். புதிதாகக் கட்டப்பட்ட எருசலேம் ஆலயத்தை ஆண்டவராகிய கடவுளுக்கு நேர்ந்தளிக்கிறார் சாலமோன். ஓர் அருள்பணியாளர் போல மக்களுக்கும் பீடத்துக்கும் இடையே நின்று இறைவேண்டல் செய்கிறார். ‘இரவும் பகலும் உமது கண்கள் இதனை நோக்கி இருப்பனவாக!’ என்கிறார். ஆண்டவராகிய கடவுளின் கண்கள் நம்மேல் இருக்கும்போது நாம் வாழ்வும் வளமும் பெறுகிறோம். ஆண்டவராகிய கடவுளின் கண்களைக் கொண்டு பார்க்கும்போது நாம் தூய்மை-தீட்டு பாகுபாட்டைக் கடந்து செல்கிறோம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

Leave a comment