இன்றைய இறைமொழி. திங்கள், 9 பிப்ரவரி ’26. ஆண்டவரின் இல்லம்

இன்றைய இறைமொழி
திங்கள், 9 பிப்ரவரி ’26
பொதுக்காலம் ஐந்தாம் வாரம், திங்கள்
1 அர 8:1-7, 9-13. மாற் 6:53-56

ஆண்டவரின் இல்லம்

ஆண்டவராகிய கடவுளை மட்டும் தெரிந்துகொண்டு அவரிடம் ஞானத்தை வேண்டிப் பெற்றுக்கொள்கிற சாலமோன், ஆண்டவருக்கென கோவில் ஒன்றை எழுப்புகிறார். அந்தக் கோவில் உடன்படிக்கைப் பேழை நிறுவப்பெறும் நிகழ்வே இன்றைய முதல் வாசகம். மோசே வழியாக ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு வழங்கிய பத்துக் கட்டளைகள் அடங்கிய உடன்படிக்கைப் பேழையை அதற்குரிய மதிப்புடன் தூக்கி வந்து எருசலேம் ஆலயத்தில் நிறுவுகிறார் சாலமோன். உடன்படிக்கைப் பேழை நிறுவப்பட்டவுடன் ஆண்டவரின் மாட்சி கோவிலை நிரப்புகிறது. ஆண்டவரின் மேகம் வாயில்வரை நிறைந்திருந்ததால் குருக்களும் அங்குத் திருப்பணி செய்ய இயலவில்லை.

முதல் ஏற்பாட்டில், ஆண்டவரின் பிரசன்னம் என்பது இடம் சார்ந்ததாக – எருசலேம் ஆலயம் சார்ந்ததாக, பொருள் சார்ந்ததாக – உடன்படிக்கைப் பேழை இருக்கிறது.

நற்செய்தி வாசகத்தில், இயேசுவை இன்னார் என அடையாளம் காண்கிற மக்கள் கூட்டம் அவரைப் பின்பற்றிச் சென்று, அவரைச் சூழ்ந்துகொள்கிறார்கள். அவரைத் தொட்ட அனைவரும் நலம் பெறுகிறார்கள். இயேசுவின் பிரசன்னம் அவர்களுடைய நோய்களை நீக்கி அவர்களுக்கு நலம் தருகிறது. அவர்களிடையே இருந்த குறைகளை அகற்றுகிறது.

இயேசுவின், இறைவனின் பிரசன்னம் என்பது ஆள்சார்ந்ததாக இருக்கிறது. இயேசுவும் தன் உடலைக் கோவில் என அழைக்கிறார் (காண். யோவா 2). தொடர்ந்து பவுலும் கொரிந்து நகரத் திருஅவைக்கு எழுதுகின்ற திருமடலில், ‘நீங்களே அக்கோவில்’ என்று நம்பிக்கையாளர்களை அழைக்கிறார்.

இடமும் பொருளும் சார்ந்த கோவில், இயேசு வழியாக ஆள் சார்ந்ததாக மாறுகிறது.

நாம் அனைவருமே கடவுளின் திருமுன்னிலையைப் பெற்றுள்ளோம். கடவுளின் சாயலையும் பெற்றவர்களாக இருக்கிறோம். கடவுளின் சாயலுக்கேற்ற – அதாவது, நிறைவு பெற்றவர்களாக – வாழ்வை அமைத்துக்கொள்ள இன்று நாம் அழைப்பு பெறுகிறோம்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

Leave a comment